தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்காக ஜனாதிபதியுடன் ஒத்துழைத்துச் செயற்படப் போவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் கூறிய செய்தி பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. இச் செய்தியைத் தொடர்ந்து, செப்ரெம்பர் 7ந் திகதி (நாளை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவிருக்கின்றது என்ற செய்தியும் வெளியாகியது.
இனப் பிரச்சினை தொடர்பாகத் தமிழ்த் தலைவர்கள் இந்த அணுகுமுறையையே பின்பற்ற வேண்டும் என்று பிரச்சினையின் தீர்வில் அக்கறையுள்ள சக்திகள் பல வருடங்களாக வலியுறுத்தி வந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்போதெல்லாம் வேறு பாதையில் பயணித்துக்கொண்டிருந்தது. அது தமிழ் மக்களை அழிவுக்கு இட்டுச் செல்லும் பாதை என்று சுட்டிக்காட்டிய போதிலும் கூட்டமைப்புத் தலைவர்கள் அப்போது அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றால் இது ஒரு நல்ல திருப்பம்.
புலிகளின் தனிநாட்டுப் போராட்டம் தமிழ் மக்களுக்கு விடிவைக் கொண்டு வரும் என்ற மாயைக்குள் மயங்கிப் போயிருந்த பலர் இன்று அதிலிருந்து விடுபட்டுத் தெளிவு பெறுகின்றார்கள். புலிகளின் மோசமான தோல்வியும் அவர்களால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும் இந்தத் தெளிவுக்குக் காரணம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது யதார்த்தத்தைப் புரிந்துகொண்டிருப்பதாலேயே ஆக்கபூர்வமான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றதென நம்புகின்றோம். புலிகளின் தோல்விக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் மாற்றம் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
ஜனாதிபதி கூட்டிய அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கக் கூட்டத்தில் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சிaகாந்தா பங்கு பற்றினார். இப்போது சம்பந்தனின் கருத்து வந்திருக்கின்றது. ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் சொல்கின்றார்கள்.
இந்த மனமாற்றம் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற தந்திரோபாயமா அல்லது நிரந்தரமான மாற்றமாக இருக்குமா என்ற சந்தேகம் மக்களிடம் எழுவதைத் தவிர்க்க முடியாது. புலிகளுடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் அரசியல் தீர்வு விடயத்தில் கூட்டமைப்புத் தலைவர்கள் நடந்துகொண்ட முறை மாத்திரமன்றி அவர்களின் கடந்த கால செயற்பாடுகளும் இச் சந்தேகத்துக்குக் காரணம்.
சமஷ்டிக் கோரிக்கையைத் தமிழரசுக் கட்சி முன்வைத்தது. அது தமிழர் விடுதலைப் கூட்டணியாக உருமாற்றம் பெற்றதும் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் தனிநாட்டுத் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு மாவட்ட சபைகளை ஏற்றுக்கொண்டது.
இப்படியாக நேரமொரு கொள்கையும் நிமிடமொரு பேச்சுமாக இந்தத் தமிழ்த் தலைவர்கள் செயற்பட்ட போதிலும் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்துக்கு இத் தலைவர்கள் காட்டிய எதிர்ப்பு தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இடம்பெற்ற மரணங்களும் அகதி வாழ்க்கையும் இந்த எதிர்ப்பின் தவிர்க்க முடியாத விளைவுகள். இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி குறைந்தது இருபத்தைந்து வருடங்கள் பின்தள்ளப்பட்டிருப்பதும் அடங்கிக் கிடந்த பேரினவாதக் குரல் ஓங்கி ஒலிக்கும் நிலை ஏற்பட்டதும் இந்த எதிர்ப்பின் விளைவுகளே.
பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்துக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணி ‘கடைசி நிமிடம்’ வரை ஆதரவு தெரிவித்து வந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தூதுக் குழுவொன்று ஒரு கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவைச் சந்தித்துப் பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தது. தீர்வுத் திட் டத்துக்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் வாக்களிக்கப் போவதாகத் தீர்வுத் திட்டத் தயாரிப்பில் பங்களிப்புச் செய்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு சம்பந்தன் கூறி யிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் தீர்வுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. எதிர்ப்பதோடு நிற்காமல் புலிகளுடன் இணைந்து தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படத் தொடங்கின. இதன் விளைவாகத் தமிழ் மக்கள் முகங்கொடுத்த இறப்புகளுக்கும் இழப்புகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான பொறுப்பாளி. சுருக்கமாகக் கூறுவதானால், அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் மூலம் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்துச் சீரழிந்துவிட்டனர்.
கூட்டமைப்பின் இன்றைய செயற்பாடுகளும் கருத்து வெளிப்பாடுகளும் எவ்வளவுக்கு நம்பகரமானவை என்ற சந்தேகத்தை இக் கசப்பான அனுபவவங்களே மக்களிடம் தோற்றுவிக்கின்றன.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் ஜனாதிபதியுடன் ஒத்துழைப்போம் எனக் கூறுவதும் மாத்திரம் போதாது. பேச்சுவார்த்தையும் ஒத்துழைப்பும் சமகால யதார்த்தத்தை விளங்கிக்கொண்டு அதற்கு அமைவான செயற்பாடாக இருக்க வேண்டியது அவசியம். யதார்த்தத்துக்கு ஒவ்வாத கோரிக்கைகளை வலியுறுத்துவது மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் கதையாகிவிடும்.
அழிவுகரமான தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்ததால் அரசியல் தீர்வு முயற்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிராந்திய சுயாட்சி என்ற நிலையை நெருங்கி வந்த தீர்வு முயற்சி இன்று பதின்மூன்றாவது திருத்தத்துக்கு முற்பட்ட காலத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்கான நாடளாவிய பிரசாரத்துக்கு மத்தியில் அடங்கிப் போயிருந்த பேரினவாத சக்திகள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இனப் பிரச்சினையை அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதேயொழியப் பிரச்சினையின் தீர்வில் எந்தக் காலத்திலும் அக்கறை செலுத்தியதில்லை. அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தீர்வொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை. இந்த நிலையில் உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருப்பது பதின்மூன்றாவது திருத்தம். இத்திருத்தம் இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வல்ல. எனினும் உடனடியாக இத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
இன்று பெரும்பாலான தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேறி அகதி முகாம்களிலும் வேறு இடங்களிலும் வாழ்கின்றார்கள். இவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். தங்கள் வழமையான தொழில்களை ஆரம்பிக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் மாகாண சபை செயற்படுவதால் அங்குள்ள மக்கள் தங்கள் பெரும்பாலான கருமங்களை மாகாண மட்டத்தில் நிறைவேற்றி வருகின்றார்கள். இந்த வாய்ப்பு வட மாகாண மக்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்படலாகாது. பதின்மூன்றாவது திருத்தம் நடைமுறைக்கு வருவது மக்களின் இந்த உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும். இதுதான் இன்றைய யதார்த்தம்.
பதின்மூன்றாவது திருத்தம் பற்றாக்குறைத் தீர்வு என்றும் அதை ஏற்க முடியாது என்றும் மிக அண்மைக் காலம் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறி வந்திருக்கின்றார்கள். இன்னும் சிலர் அப்படிக் கூறுகின்றார்கள். பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்தக் காலத்திலும் நாம் கூறவில்லை. இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ள எவரும் பதின்மூன்றாவது திருத்தம் முழுமையான அரசியல் தீர்வு என்று கூறவில்லை. பதின்மூன்றாவது திருத்தத்தை இப்போது ஏற்றுக்கொண்டு முழுமையான தீர்வுக்காகத் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதையே யதார்த்த பூர்வமான அணுகுமுறையில் நம்பிக்கை உள்ளவர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். கிடைக்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு எஞ்சிய உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும் என்ற கோட்பாடு தமிழ்த் தலைவர்களுக்குப் புதியதல்ல. பண்டா- செல்வா ஒப்பந்த காலத்திலும் டட்லி- செல்வா ஒப்பந்த காலத்திலும் இக் கோட்பாட்டைத் தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.
அழிவுகரமான தனிநாட்டுப் பாதையைக் கூட்டமைப்புத் தலைவர்கள் கைவிட்டுவிட்டார்கள் என்று மக்கள் நம்பும் நிலை தோன்ற வேண்டும். அந்தப் பாதையில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் இன்றும் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். எனவே கூட்டமைப்புத் தலைமை துணிச்சலாக நல்ல முடிவுக்கு வரவேண்டும். தமிழ் மக்களுக்கு உடனடியாக நிம்மதியான வாழ்வு கிடைப்பதற்கும் படிப்படியாக முழுமையான அரசியல் தீர்வை அடைவதற்கும் ஏற்ற முடிவு எதுவோ அதுவே நல்ல முடிவு.
பதின்மூன்றாவது திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்போவதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறினார். தமிழ்த் தலைவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தத் தவறினால் இதுவும் இழந்த சந்தர்ப்பங்கள் பட்டியலில் சேர்ந்துவிடும்.

0 commentaires :
Post a Comment