அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களில் ஜனநாயக விரோதச் செயல்கள் தொடர்வதாக மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் குற்றம் சுமத்தியுள்ளார்.
“இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களைப் பாதுகாப்பு தரப்பினர் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும்,
“கிழக்கு மாகாணம் அரசாங்கத்தினால் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பிரதேசங்களில் மக்களின் வாழ்வு நிலை வழமைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பிரதேசங்களில் தொடரும் அரசியல் வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இயல்பு நிலைக்குத் தடையாக உள்ளன.
அரசியல் செல்வாக்குமிக்க சில குழுக்களினால் தொடரும் இப்படியான வன்முறைகள் ஜனநாயக சக்திகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதால் கிழக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் சபை ஆகியோர் தம் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையே அங்கு ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இம்மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பிரதேசங்களுக்குச் செல்லும் போது சந்தேகத்திற்குரிய நபர்கள் தம்மைப் பின் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சரின் இணைப்பு அலுவலகமொன்று அங்கு திறப்பதற்கு அக்குழுவினரால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஸ்பராஜா, தனது பாதுகாப்பின் நிமித்தம் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வீட்டில் தங்கியிருந்த வேளை, அவரது வீட்டுக்கு முன்பாகக் கூடிய குழுவொன்று வன்முறைகளில் ஈடுபட முற்பட்டு, அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்துள்ளது.
இவ்வாறு தமிழ்ப் பிரதேசங்களில் சில ஆயுத வன்முறைகள் தொடர்ந்து வருவதும், ஒரு சிலருக்கு மட்டும் ஒப்பந்தங்கள் வழங்குவதும், கப்பம் பெறுவதும் தொடர்கின்றன.
எனவே இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தி, ஒரு சமாதான ஜனநாயக சூழலை ஏற்படுத்த வேண்டும். தமிழ்ப் பிரதேசங்களில் பொது மக்கள் என்ற போர்வையில் செயல்படும் சில குழுக்களின் வன்முறைச் சம்பவங்களைத் தீவிர விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதன்மூலமே அப்பிரதேசங்களில் முழுமையான ஜனநாயகத்தையும் அமைதியான சூழலையும் உருவாக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Categories: செய்திகள்
Tags:
-->
0 commentaires :
Post a Comment