9/09/2009

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் திருமலை மாவட்ட அரசியல் காரியாலயம் கட்சியின் தலைவரினால் திறந்து வைப்பு


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்டத்திற்கான அரசியல் காரியாலயம் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் இன்று உப்புவெளி 3ம் கட்டையில் திறந்து வைக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை மக்கள் மயப்படுத்தும் விசேட திட்டத்தின் கீழ் மாவட்ட காரியாலயங்கள், பிராந்திய காரியாலயங்கள் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . அதேபோல் கிராமிய மட்டங்களிலான குழுக்களை அமைத்து அவர்களினூடாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கொள்கை விளக்கங்கள் எதிர்கால முன்னெடுப்புக்கள் என்பன மக்கள் மத்தியில் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது, இதனொரு அங்கமாகவே இன்று திறக்கப்பட்ட மாவட்ட காரியாலயத்தை வைத்து திருகோணமலை மாவட்டத்திற்கான அமைப்பாளர், கிராமிய மட்ட அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கான அங்கத்துவ நியமனங்களும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கௌரவ முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்திற்கான அமைப்பாளராக திருமதி ஜுடி தேவதாசன் கட்சியின் தலைமையினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்பது பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளிலிருந்து கிராமியக்குழு அமைப்பாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எதிர்காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்பாடுகளை மக்கள் மயப்படுத்துவதும் மற்றும் கட்சியின் கொள்கை விளக்கங்களை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்குமான செயற்பாடுகளை இக்கிராமிய அமைப்பாளர்கள் புரிவார்கள்.
மாவட்ட அமைப்பாளர் திருமதி ஜுடி தேவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கட்சியின் ஊடகப்பேச்சாளரும் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான அஷாத் மௌலானா, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.



0 commentaires :

Post a Comment