பிரித்தானியரின் ஆட்சிக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இலங்கையில் தமிழக மக்களின் குடியேற்றங்கள் இடம் பெற்றுள்ளன. ஆயினும் 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் குடியேறியவர்கள் இந்நாட்டின் வரலாற்றுடன் சங்கமமாகி விட்டனர் என்பது வரலாற்று உண்மையாகும்.
ராமானுஜம்
1826 ஆம் ஆண்டு பதின்நான்கு குடும்பத்தினரின் இறக்குமதியோடு இந்தியத் தொழிலாளர்களின் இலங்கை வரலாறு ஆரம்பமாகிறது. 1860 முதல் 1870 ஆகிய ஆண்டுகளில் தமிழ் நாட்டிலிருந்து பெருந்தொகையான தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து சேர்ந்தனர். 1929 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தும்வரை மக்களின் வருகை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.
இவர்களின் இலங்கை புலம் பெயர்வு மிகவும் சோகமானது. இம்மக்களின் புலம் பெயர்வு பயணத்தின் சம்பவங்களை ஆராயும் போது சம்பவங்கள் வேப்பங்குச்சியாக கசக்கும் என்பது உண்மையாகும். இந்நாட்டின் காட்டை வெட்டி ஒதுக்கி தெருக்கள் அமைக்க, பாலங்கள் அமைக்க, இக்கல்பாறை நிலத்தில் தேயிலையை பயிரிட கங்காணிமார்களால் ஆசைகாட்டி அழைத்து வரப்பட்டவர்கள் எமது மூதாதையர்கள்.
சி. வி. வேலுப்பிள்ளை
இந்திய வம்சாவளியினரின் மூதாதையர்களின் வரலாறு இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தெரியாது. இவர்கள் வரலாற்றை தெரிந்து கொள்வதில் அக்கறை செலுத்துவதுமில்லை. அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதுமில்லை.
1864 இல் இந்நாட்டு தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட 120 தொழிலாளர்கள் ஆதிலெட்சுமி நீராவிக்கப்பலில் இலங்கையை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கையில் அக்கப்பல் கடலில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் தொழிலாளர்கள் ஏழுபேரும் பதினைந்து மாலுமிகளுமே உயிர்தப்பினர்.
இன்ப வாழ்வை நம்பி வந்த ஏனையோர் கடலுக்கு இரையாகினர். 1864 ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய ஆதிலஷ்மி கப்பல் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட வேண்டும்.
தொண்டமான்
இது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. இக்காலகட்டத்தில் இலங்கை சட்டசபை அங்கத்தவராகவிருந்த சேர் முத்துக்குமாரசுவாமி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்படும் மக்கள் படும் துயரங்களை சட்டசபையில் எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டின் தஞ்சாவூர், திருச்சி, இராமநாதபுரம், திரு நெல்வேலி, சேலம், ஆற்காடு மாவட்டங்களிலிருந்து வெள்ளையர்களால் இலங்கைக்கு மட்டும் அழைத்து வரப்படவில்லை. முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உலகப் படத்தையே பார்த்திராத தென்னிந்திய தொழிலாளர்கள் அன்று உலகம் முழுவதும் பயணித்துள்ளனர்.
எஸ். எம். சுப்பையா
சிங்கப்பூர், மலேசியா, பர்மா, மொரிசியஸ், ரிறினிடாட், அந்தமான், சுமோத்ரா, சுரினாம், அன்ரீல்ஸ், பிரிட்டிஷ் மற்றும் பிரென்ஞ் கயானா, சிசெல்ஸ், தென்னாபிரிக்கா, கினிடா, நேவிஸ், டெமாறா, ஜமெய்க்கா, பிஜி, நியூ கலிபோர்னியா, தாஹித்தி, மாட்னிக், குவாட்லேப், சென்ட் வின்சென்ற், யென்ட்கீற்ஸ், சென்ற்லூசியா முதலிய நாடுகளிலும், தீவுகளிலும் குடியேற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இன்று இந்நாடுகளின் தீவுகளின் பெயர்கள் மாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாட்டில் வசிப்போரில் சிலர் இன்றும் தங்களின் தமிழ் நாட்டு கிராமங்களுடன் தொடர்பை வைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் 1965 காலப்பகுதியில் பர்மா நாட்டை ஆட்சிப்புரிந்தோர் இந்தியரை கப்பல் மூலமாக இந்தியாவுக்கு மீண்டும் அனுப்பிவைத்தனர். அவ்வாறு வந்தவர்கள் இன்றும் திருச்சி விமான நிலையத்துக்கு அருகே சுப்பிரமாணிய புரத்து அகதிகள் முகாமில் வாழ்கின்றனர்.
இவர்களுக்காக திருச்சி மெயின்கார்ட்கேட் தெப்பக்குளம் எனச் சொல்லப்படும் பகுதியில் “பர்மாளூர்” எனப்படும் கடை வீதியும் அன்றைய தமிழக அரசால் அமைத்துத்தரப்பட்டது. இன்றும் இக்கடை வீதி திருச்சி மற்றும் சென்னையிலும் உள்ளது. ஆகவே பல நாடுகளுக்கு வம்சாவளியினர் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் பர்மா மாத்திரமே அங்கே வாழ்ந்தோரை வெறுங்கையோடு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது.
கே. குமாரவேல்
1826 ஆம் ஆண்டு முதல் இங்கே குடியேறி வாழ்ந்து வந்த இம்மக்களின் வாக்குரிமை 1948 இல் பறிக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்த காலனி நாடுகளிலேயே முதன் முதலில் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கையேயாகும். அவ்வாறான நிலையில் இந்திய பிரசைகள் என அடையாளப்படுத்தப்பட்டு அரசியல் ரீதியாக வாக்குரிமை பறிக்கப்பட்டு அந்நியப்படுத்தப்பட்டனர்.
1936 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசாங்க சபைத் தேர்தலின் ஏ. ஈ. குணசிங்க கொழும்பு மத்தியத் தொகுதிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏ. ஈ. குணசிங்கவின் வெற்றி இனவாதத்தின் அடிப்படையில் அமைந்தது. இவர் ஒரு தொழிற்சங்கவாதியாவார். இவரின் சிலை இன்றும் கொழும்பு ஒல்ட்கொட் மாவத்தை, சோண்டஸ் பிளேஸ், மிகுந்து மாவத்தை இணையும் சந்தியில் உள்ளது.
கே. வி. நடராஜா
டி. எஸ். சேனநாயக்காவின் அமைச்சரவையில் பொறுப்பு வகிக்காத அமைச்சராக பதவியும் ஏ. ஈ. குணசிங்க பெற்றார். 15000 இந்தியரை அரசாங்கம் இலங்கையிலிருந்து நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்க சபையில் சமர்ப்பித்தார்.
இந்தக் கோரிக்கையை எதிர்த்து அன்றைய அரசாங்க சபையில் அங்கத்தவர்களாக இருந்த ரி. ரி. பொன்னம்பலம், எஸ். நடேசன், கோ. நடேச ஐயர், எஸ். பி. வைத்தியலிங்கம், சேர் ஏ. மகாதேவா, ஐ. எக்ஸ். பேரேரா ஆகியோர் சபையில் பேசினர். ரி. ரி. பொன்னம்பலம் சுமார் ஆறரை மணித்தியாலங்கள் சபையில் உரையாற்றினார்.
கே. ராஜலிங்கம்
இவ்வாறான பல சம்பவங்களை அடுத்து 1939 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் திகதி முன்னாள் இந்தியப் பிரதமர் நேரு தலைமையில் இலங்கை - இந்திய காங்கிரஸ் உதயமாயிற்று. இலங்கை இந்திய காங்கிரஸ் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக மாற்றம் பெற்றது. இவ்வாறான ஒரு பின்னணியில் தான் 1947 இல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இப்பொதுத் தேர்தலில் இலங்கை இந்திய காங்கிரஸ் வேட்பாளர்கள் எட்டுத் தொகுதிகளில் போட்டியிட்டனர். இதில் ஏழு தொகுதிகளை கைப்பற்றியது. அப்புத்தளையில் தோல்வி கண்டது பண்டாரவளையில் சட்ட வல்லுநர் கே. வீ. நடராஜா வெற்றி பெற்றார். ஆனாலும் இவர் எந்தக் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட் டார். என்ற விபரம் எனது தேடலில் கிடைக்கவில்லை.
முதலாவது மக்கள் சபையில் மலையக மக்களின் எட்டு அங்கத்தவர்களின் பெயர் விபரங்களும் தொகுதிகளும் பின்வருமாறு.
01. நுவரெலியா
எஸ். தொண்டமான் 9386 வாக்குகள்.
ஜேம்ஸ் இரத்தினம் 3251
லோரன்ஸ் பெரேரா 1124
எஸ். தொண்டமான் 6135 மேலதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பதிவானவாக்குக்ள 14074
02. அளுத்நுவர
டீ. ராமானுஜம் 2772 வாக்குகள்
மொத்த வாக்குகள் 16486 ஆனால் 3610 வாக்குகளே அளிக்கப்பட்டன.
03. நாவலப்பிட்டி
கே. ராஜலிங்கம் 7933 வாக்குகள்.
பதிவான மொத்த வாக்குகள் 15997.
04. பதுளை (இரட்டை அங்கத்தவர் தொகுதி)
எஸ். எம். சுப்பையா 27121 வாக்குகள்
கொத்தலாவல 16654 வாக்குகள்.
பதிவான மொத்தவாக்குகள் 43398.
05. கொட்டகலை
கே. குமாரவேல் 6722 வாக்குகள்.
பதிவான மொத்த வாக்குகள் 12564
06. மஸ்கெலியா
டி. ஆர். மேத்தா 9086 வாக்குகள்
பதிவான மொத்த வாக்குகள் 15120
07 தலவாக்கலை
சி. வி. வேலுப்பிள்ளை 10645 வாக்குகள்
பதிவான மொத்தவாக்குகள் 13534
08. பண்டாரவளை
கே. வி. நடராஜா 5092 வாக்குகள்
பதிவான வாக்குகள் 8409
பெரி. சுந்தரலிங்கம்
இத்தொகுதிகளைவிட அப்புத்தளையிலும் இந்திய இலங்கை காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பு இருந்தது. இத்தொகுதியில் வெற்றிபெற்ற ஜே. ஏ. ரம்புக்பொத்த 2125 வாக்குகளைப் பெற்றார். இவரோடு போட்டியிட்ட ஏ. டீ. செங்கமலை 1753 வாக்குகளையும், ஆர். ஏ. நடேசன் 1337 வாக்குகளையும் ஏ. பச்சமுத்து 1229 வாக்குகளையும், ஜே. ரி. ராஜகுலேந்திரன் 327 வாக்குகளையும் பெற்றனர். நான்கு தமிழர்களும் மொத்தமாக 4646 வாக்குகளை பெற்றனர். நான்கு தமிழர்கள் போட்டி இடாது ஒருவர் போட்டியிட்டு இருந்தால் தமிழர் வெற்றிபெற வாய்ப்பு இருந்தது.
இந்த எட்டு மக்கள் சபை அங்கத்தவர்கள் வெகு திறமையானவர்கள். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையில் வல்லுனர்கள்.
அரசாங்க சபையில் 1931 முதல் 1935 வரை பெரி. சுந்தரம் வர்த்தக அமைச்சராக விளங்கியவர். 1931 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஹட்டன் தொகுதியில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டவர். ஏழு மக்கள் சபை உறுப்பினர்களும் எஸ். தொண்டமானை தவைராகத் தேர்ந்தெடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களாக 15.10.1947 இல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
16.10.1947 இல் செனட்டர் தெரிவு இடம்பெற்றது. செனட்சபை எனப்படும் மேல்சபைக்கு இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பில் பெரி. சுந்தரம் தெரிவானார். இவரின் பெயரை எஸ். தொண்டமான் பிரேரிக்க எஸ். எம். சுப்பையா ஆமோதித்தார்.
1947 இல் நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை இந்திய காங்கிரஸின் வெற்றியை டி. எஸ். சேனநாயக்கவினால் ஜிரணிக்க இயலவில்லை. மலையக தோட்டத் தொழிலாளர்கள் வசித்த தொகுதிகளில் அவர்களின் வாக்குகள் ஐ. தே. கட்சிக்குக் கிடைக்காது போனமையையும் குறிப்பிடுதல் அவசியமாகும். அன்று மலையக மக்கள் மத்தியில் இடது சாரிக் கட்சிகள் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தன. லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கே மலையக மக்கள் வாக்களித்திருந்தனர். இதன் காரணத்தினால் டி. எஸ். சேனநாயக்கா இந்திய வம்சாவளி மக்களின் மீது பெரிதும் கொதிப்படைந்திருந்தார்.
டி. ஆர். மேத்தா
இவ்வாறான நிலைமை தொடருமேயானால் எதிர்கால தேர்தலில் ஐ.தே. கட்சி பலவீனம் அடையும் என எண்ணிய டி. எஸ். சேனநாயக்கா 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி டி. எஸ். சேனநாயக்கா பாராளுமன்றத்தில் இரு சட்டங்களை நிறைவேற்றினார். ஒன்று இலங்கை பிரஜா உரிமைச் சட்டம், மற்றது இந்தியர் - பாகிஸ்தானியர் (வதிவிட) பிரஜா உரிமைச் சட்டம்.
இந்த இரு சட்டங்களும் இலங்கை வாழ் இந்தியர்களைப் பெரிதும் பாதித்தன. தமது மக்களின் வாக்குப் பலத்தால் பாராளுமன்றத்தில் வீற்றிருந்த எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தனர். 1947 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற இந்திய வம்சாவளியினர் அடுத்து வந்த பட்டியலில் நீக்கப்பட்டனர். செனட் சபை அங்கத்துவமும் பறிபோனது. 1948 இல் இலங்கை பிரித்தானியரிடமி ருந்து சுதந்திரம் பெற்றும் அந்த சுதந்திரத்தைக்கூட தொட்டுப்பார்க்க இம்மக்களு க்கு எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லை. ஏனையோருக்கு சுதந்திரம் கிடைத்தபோது இவர்களுக்கு பறிபோனது.
இவ் வரலாற்றுக் கொடுமைக்கு நீண்டதோர் வரலாற்றுப் பின்னணி உண்டு. மீண்டும் வாக்குரிமையை மீட்டெடுக்க முப்பது ஆண்டுகள் மலையக மக்கள் காத்திருந்தனர். 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் இ. தொ. காங்கிரஸ் சார்பில் சேவல் சின்னத்தில் தலைவர் எஸ். தொண்டமான் போட்டியிட்டு வெற்றியீட்டினார். இவரின் வெற்றி மலையக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
கே.பி.பி. புஷ்பராஜா ...-
0 commentaires :
Post a Comment