9/08/2009

சனல் - 4 வெளியிட்ட வீடியோ போலியானது: நான்கு குழுக்கள் நடாத்திய ஆய்வில் நிரூபணம்

சனல் - 4 உட்பட வெளிநாட்டு ஊடகங்கள் பாதுகாப்பு படையினருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வெளியிட்ட போலி வீடியோ காட்சி தொடர்பாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியில் விசாரணைகளை மேற்கொண்ட நான்கு குழுக்களும் அந்த வீடியோக் காட்சி போலியானது என உறுதி செய்துள்ளதாக மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.
விசாரணைகளின் ஆய்வு அறிக்கையை சனல் - 4 உட்பட இந்தப் போலி வீடியோ காட்சியை வெளியிட்ட சகல வெளிநாட்டு ஊடகங்களுக்கும் அனுப்பிவைத்து அதனை வாபஸ் பெறுமாறு அரசாங்கம் கோரவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
இதேவேளை, இந்த ஆய்வு அறிக்கையின் பிரதிகளை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கி மூன், நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹேய்ம் ஆகியோருக்கும் அனுப்பி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வும் அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்கும், படை வீரர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் சனல் - 4 வெளியிட்ட போலி வீடியோ காட்சி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் மற்றும் அதற்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக் கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பில் இடம்பெற்றது.
தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் உரையாற்றுகையில்,
இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வது போல் போலியாக தயாரிக்கப்பட்ட வீடியோ காட்சி சனல் - 4 உட்பட சில வெளிநாட்டு ஊடகங்கள் ஒளிபரப்பியதை அடுத்து பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் முதல் கட்டமாக வன்மையான கண்டனத்தை தெரிவித்தோம்.
அத்துடன் இது தொடர்பான விரிவான விசாரணைகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்ளும் பொருட்டு அரசாங்கம் நான்கு குழுக்களையும் நியமித்தது.
ஒளி, ஒலி நெறிப்படுத்தும் துறையில் சர்வதேச ரீதியில் நிபுனத்துவம் பெற்ற சிரிஹேவா விதான, மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் சத்துர டி சில்வா, இராணுவத்தின் சமிஞ்கை பிரிவின் பொறுப்பாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இணைப்பாளர் மேஜர் பி. ஏ. பண்டார ஆகியோர் தலைமையிலான நான்கு குழுக்களே தனித்தனி விசாரணைகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டன.
சுமார் பத்து நாட்களுக்குள் ஆய்வு பூர்த்தி செய்யப்பட்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியில் தனித்தனியாகவும் மிகவும் விரிவாகவும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் மூன்று முக்கிய விடயங்களில் பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளன. அதன் அடிப்படையில் அந்த வீடியோக் காட்சி போலியாக தயாரிக்கப்பட்டு பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை செய்முறை ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வு அறிக்கைகளை சனல் - 4 உட்பட போலி வீடியோக்களை வெளியிட்ட சகல ஊடக நிறுவனங்களுக்கும் தூதரகங்கள் ஊடாக அனுப்பி வைத்து அதனை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தவுள்ளதாகவும், ஆய்வறிக்கையை தவறாக காணும் பட்சத்தில் அதனை நிரூபிக்குமாறும் சவால் விடுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விசாரணைகளை மேற்கொண்ட நான்கு குழுக்களின் பொறுப்பாளர்களும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தமது ஆய்வுகள் தொடர்பாக விரிவாக ஊடகங்களுக்கு முன்வைத்தனர்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி. கே. பி. தசநாயக்க, விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment