ஹெல உறுமய கட்சியன் ஒரே தமிழ் உறுப்பினரும் மாத்தளை நகர சபை உறுப்பினரும் கட்சியின் மத்திய குழு அங்கத்தவருமான
எஸ். ராஜலிங்கம்
மனம் திறக்கிறார்.
உரையாடியவர்:
அருள் சத்தியநாதன்
“சிலர் என்னை நூதனமாகப் பார்க்கிறார்கள். இவருக்கு என்ன கேடு நடந்திருக்கிறது? என்று எண்ணுவது எனக்குத் தெரியும்” என்கிறார் எஸ். ராஜலிங்கம்.
யார் இந்த ராஜலிங்கம்?
பலரும் இவரை ஒரு மாதிரி பார்ப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாதுதான். ஏனெனில் ஜாதிக ஹெல உறுமய என்ற பிக்குகளின் கட்சியின் ஒரே தமிழ் உறுப்பினர் இவர். கடும்போக்கு சிங்கள தேசிய வாதக் கட்சியாக அறியப்படும் ஜாதிக ஹெல உறுமய கட்சியில், இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்கின்ற மாதிரி, அதன் செயற்குழு உறுப்பினராக இவர் செயல்பட்டால் ஆச்சரியத்துடன் ஏறெடுத்துப் பார்க்காமலா இருப்பார்கள்? மேலும் இவர் 2006 ஆம் ஆண்டு நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு 2618 வாக்குகளைப் பெற்று கம்பளை நகர சபையில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இத்தேர்தலில் வெற்றிபெற 500 - 600 வாக்குகளே போதும், எனினும் தமிழரான இவருக்கு இரண்டாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
இதனால்தான் ராஜலிங்கம் வித்தியாசமான அரசியல் வாதியாக அல்லது ‘தமிழினத் துரோகி’யாகப் பார்க்கப்படுவது ‘தவிர்க்க’ முடியாததாகி இருக்கிறது.
சரி, இவர் என்ன சொல்கிறார்?
“எனக்கு பெளத்தத்தில் ஆழ்ந்த அறிவு இருக்கிறது. சிங்கள மக்களையும் எனக்கு நன்றாகவே தெரியும். பெளத்த சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில் வசித்துக் கொண்டு எனக்கு பெளத்தமும் புரியாது. சிங்களவனையும் தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? பிரான்ஸில் உட்கார்ந்து கொண்டு பிரெஞ்சு தெரிந்து கொள்ளவும் மாட்டேன்; பிரெஞ்சுக்காரனை புரிந்து கொள்ளவும் மாட்டேன் என்று சொல்லலாமா? உங்களுடன் நெருக்கமாக வசிக்கும் மற்றொரு இனத்தைப் பற்றி நாம் புரிந்து, தெரிந்து வைத்திருந்த வேண்டும். அவர்களின் மொழி, கலாசாரம் இவற்றின் பின்னணியான பெளத்தம் என்பனவற்றில் பரிச்சம் இருக்க வேண்டும். இருந்திருந்தால் பல பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம். எந்தச் சிங்களவனும் தமிழன் சிங்களவனாக மாற வேண்டும் என எதிர்பார்ப்பதாக நான் நினைக்கவில்லை. நீங்கள் எதிர்பார்ப்பதைப் போலவே அவர்களும் நீங்கள் அவர்களைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். நாம் முழுத் தமிழனாக இருந்து கொண்டே சிங்களவர்களுடன் நல்லுறவையும் புரிந்துணர்வையும் வளர்த்துக் கொண்டால் எந்தச் சிக்கலும் ஏற்பட வாய்ப்பில்லை. நீங்கள் சிங்கள வழிக் கல்வி பயின்று சிங்களப் பெண்ணை மணந்து தான் சிங்களவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் கிடையாது!”
இப்படி வித்தியாசமானதும் ஆக்கபூர்வமானதுமான கருத்துக்களை கொண்டிருக்கும் ராஜலிங்கம் மாத்தளை மாவட்டம் எல்கடுவ உன்னஸ்கிரிய தோட்டத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் தோட்டப் பாடசாலை ஆசிரியராகப் பணி புரிந்தவர். ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் இவர் நான்காவது. இவரது அண்ணாதான் கவிஞர் அழகுப்பிள்ளை. தன் தந்தைக்கு கல்வி அறிவின் மகத்துவம் தெரிந்திருந்ததால், சிரமங்களுக்கு மத்தியில் பிள்ளைகளைப் படிக்க வைத்ததாகக் கூறுகிறார். 1959 இல் தான் முதல் தடவையாக கொழும்புக்கு வந்ததாகவும் அச்சமயத்தில் கொழும்பில் டிராம் வண்டிகள் ஓடிக் கொண்டிருந்ததாகவும் நினைவு கூருகிறார் ராஜலிங்கம்.
எல்லா மலையக பிரமுகர்களையும் போலவே இவரும் ஆரம்பத்தில் இ. தொ. கா. வில் இருந்தவர்தான். இவர் கொழும்பில் தன் சகோதரன் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த போது அந்த வீட்டுக்கு வி. கே. வெள்ளையன், ராஜலிங்கம், ஜேசுதாசன் (செனட்டர்) ஆகியோர் வந்து போவார்களாம். இவரும் சந்தடி சாக்கில் அவர்களுடன் பேசி பழக்கம் வைத்துக் கொண்ட போது தொழிற்சங்க இயக்கம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. இ. தொ. கா.வுக்கு இன்னொரு ராஜலிங்கம் தேவை என்று மலையகக் காந்தி ராஜலிங்கம் இவரிடம் சொல்லவே, 1962 ஆம் வருடம் இவர் தன்னை இ. தொ. கா. வில் இணைத்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஏற்பட்டதுதான் இவரது தொழிற் சங்க உறவு.
1991 இல் இவர் வாழ்க்கையில் மற்றொரு குறிப்பிடத்தக்க சிந்தனை மற்றாம் நிகழ்ந்தது. தொழிற்சங்கங்கள், பொதுவாழ்க்கை, அரசியல், விளைவுகள் - எதிர்விளைவுகள் என்று பல்வகையான அனுபவங்களை வாழ்க்கையில் பார்த்துணர்ந்த பின்னர் சிங்கள அரசியலின் பால் இவரது பார்வை திரும்பியிருக்கிறது.
“தமிழ்த் தலைவர்கள், போராளிகள் என்று 1948 முதல் எத்தனையோ வகையான அணுகு முறைகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. தமிழர் சிங்களவர் மத்தியிலான பிரிவையும், சந்தேகத்தையும் தப்பபிப்பிராயத்தையும் நீக்கியப்பாடாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் நிலைமைகள் மோசமாகி வருவதாகவே உணர்ந்தேன். இந்த நிலையில் நாம் என்ன செய்கிறோம்? நமது பிரச்சினைகளை நாமே நமக்குள் பேசுகிறோம். ஏசுகிறோம். தமிழ்ப் பத்திரிகைகளில் பிரசுரித்து ரசிக்கிறோம். எனினும் மாற்றி யோசிக்க மட்டும் முன்வருவதில்லை. எவனை சண்டைக்காரன் என்று கருதுகிறோமோ அவனையே நண்பனாக்கிக் கொண்டால் என்ன? அவர்களுடன் இணைந்து அவர்களை என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கூடவே தமிழர்களின் கூடாரங்களில் உண்மையாகவே என்ன நடக்கிறது என்பதை இக்கடும் போக்காளர்களிடம் எடுத்துச் சொன்னால் என்ன?
“இந்த சிந்தனை தான் என்னை இக்கட்சியில் இணைத்தது” என்கிறார் ராஜலிங்கம்.
இதன் பின்னர் பெளத்த மத நூல்களைப் படிக்கத் தொடங்கி இருக்கிறார். பல பெளத்த பிக்குமாருடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுடன் பழகி வந்திருக்கிறார். தமிழர்கள் தொடர்பான பல தப்பான அபிப்பிராயங்களை உண்மை நிலையை எடுத்துச் சொல்வதன் மூலம் கனைய முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார். அவர்களின் கண்ணோட்டங்களையும் இவரால் அறிய முடிந்திருக்கிறது. சில பிக்குமாரை தோட்டங்களுக்கு அழைத்துச் சென்று தமிழ்த் தொழிலாளர்களின் அவல நிலையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார். இவர்கள் அப்பாவிகள், நாட்டின் வளங்கள் இவர்கள் மத்தியில் பங்கிடப்படாமல் இருக்கின்றன என்பதை பிக்குமாருக்கு சுட்டிக் காட்டியிருக்கிறார்.
தொண்ணூறுகளின் இறுதியில் வீர விதான, பின்னர் சிஹல உருமய போன்ற பெளத்த சிங்கள பேரினவாதக் கட்சிகள் தோற்றம் பெற்று, வடக்கில் நிகழ்ந்த தனிநாட்டுக் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஆயுத போராட்டத்தையே உரமாகக் கொண்டு வளர்ந்த போது, தமிழர்களின் உண்மை நிலையை தீவிரவாதத் தன்மை கொண்ட சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ராஜலிங்கம் முன்னைவிட அதிகமாகவே புரிந்து கொண்டார்.
“பெளத்தர்கள் தவறான புரிதலைக் கொண்டிருக்கிறார்கள். இதேசமயம் பெளத்த பிக்குமார் அரசியலில் மிகுந்த அதிகாரம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாக் கதவுகளும் திறக்கின்றன. எனவே, நமது பிரச்சினைகளை அவர்களிடம் எடுத்துச் சொல்வதுதான் சரியானது என்பதைப் புரிந்து கொண்டேன்” என்கிறார் ராஜலிங்கம்.
ஜாதிக ஹெல உறுமயவில் இவர் இணைந்து கொள்வதற்கு இது தான் காரணமாக இருந்திருக்கிறது. ஏற்கனவே மாத்தளையில் பெளத்த பிக்குமாருடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் பெளத்த மத அறிவும் இதற்கு பின்புலமாக அமைந்திருந்தன.
இம்மாதத்தின் முற்பகுதியில் ஜாதிக ஹெல உருமையின் ஆறாவது மாநாடு கொழும்பில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய வண. அத்துரெலியே ரத்தன தேரோ, இந்நாட்டின் மூவின மக்களும் சகல உரிமைகளுடனும் சரிசமனாக வாழ்வதற்கு உரிமை உடையவர்கள் என்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் பேசியிருந்தார்.
“ஜாதிக ஹெல உறுமய கட்சி ஆறு வருடங்களுக்கு முன் னர் எப்படி இருந்ததோ அப்படி இன்று இல்லை. அக்கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வந்ததன் பலனாக சிறுபான் மையினர் தொடர்பாக அவர்கள் கொண்டிருந்த கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் மாற்றமும் வரும் என எதிர்பார்க்கிறேன்” என்று நம்பிக்கையுடன் கூறும் ராஜலிங்கம், ஹெல உறுமய இப்போதெல்லாம் முன்னரைப் போல இனவாதம் பேசுவதில்லை என்பதைக் கவனித்தீர்களா? என்று கேட்கிறார் ராஜலிங்கம்.
விடுதலைப புலிகளின் செயற்பாடுகளினால் பெளத்த பிக்குகள் அச்சமடைந்திருந்தது உண்மை. இதுவே சிங்கள பெளத்த தீவிரவாதம் உரம் பெறக் காரணமாயிருந்தது. இப்போது நிலைமை மாறிவிட அவர்களின் கண்ணோட்டங்களும் மாறி வருகின்றன என்கிறார் இவர்.
பெளத்த பிக்குமாருடன் சுலபமாக பழகலாம். நல்லவர்கள். உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களின் உதவியுடன் அரசாங்கத்தில் பல விடயங்களை சாதித்துக் கொள்ளலாம். நாம் நமது உரிமைகளைப் பெறுவதில் முக்கிய தடை இந்தப் பிக்குகள் தான் என்றால் அவர்களது உள்ளங்களைத் தானே முதலில் வெற்றிகொள்ள வேண்டும்! என்று கேட்கும் ராஜலிங்கம், சமஸ்த லங்கா பெளத்த மஹா சபா என்றழைக்கப்படும் அகில இலங்கை பெளத்த மகா சபையால் நியமனம் செய்யப்பட்ட ‘பிற மதங்களினால் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் இடையூறுகளையும் கண்டறியும் ஆணைக் குழு’வில் அங்கத்துவம் வகித்திருக்கிறார். மூன்று ஆண்டுகளாக இக்குழுவினர் நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்து தகவல்களைச் சேகரித்தனர். இந்த ஆணைக் குழுவில் அங்கம் வகித்து பணிசெய்ததன் மூலம் தனக்கு நல்ல பல அனுபவங்கள் கிடைத்தன என்று சொல்லும் ராஜலிங்கம், பெளத்தர்களுக்கு இந்துக்கள் மீது எந்தத் தப்பபிப்பிராயமும் கிடையாது என்கிறார்.
“ஹெல உறுமயவின் உயர் மட்டத் தலைவர்கள் இன்று தமக்குத் தமிழ் தெரியாது என்பதற்காக வெட்கப்படுகிறார்கள். பிக்குமார் தமிழ் மொழியைக் கற்க வேண்டும் என விரும்புகிறார்கள். கட்சியின் இரண்டாவது மாநாடு நடைபெற்றபோது, ‘அனைத்துத் தமிழர்களையும் ‘கொட்டியா’ என்று பார்க்கிaர்கள். அது உண்மையல்ல. உங்களுக்குத் தமிழ் தெரியாது என்பதே இதற்குக் காரணம். நீங்கள் ஏன் தமிழ் கற்கக் கூடாது? சிங்களவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதற்காகத் தமிழர்கள் கஷ்டப்பட முடியாது’ என்று நான் பேசினேன். இது அவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளவில்லை” என்று ஒரு நிகழ்வை ஞாபகமூட்டவும் செய்தார்.
சரி மிஸ்டர் ராஜலிங்கம், ஹெல உறுமயவின் தமிழர்கள் - தமிழ்ப் பிரச்சினை தொடர்பான கொள்கை என்ன?
‘பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் பிரதான முதன்மையான கொள்கையாக இருந்தது. அது முற்றுப் பெற்றிருப்பதால் தமிழ் மக்களை அரவணைத்துச் செல்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள். மொழி உரிமை, தமிழில் வேலை செய்யும் உரிமை, தமிழ் மொழி பாவனை உரிமை என்பன வழங்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. தமிழர்களுக்கு சம உரிமை வழங்கி பயங்கரவாதம் மீளவும் தலைதூக்கவிடக் கூடாது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. தமிழர்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. இவை தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை இக் கட்சி ஜனாதிபதியின் பார்வைக்கு சமர்ப்பித்திருக்கிறது. தமிழனாக இருப்பதால் என்னால் இந்த விஷயங்களைப் பற்றி அவர்களிடம் பேசி விளக்க முடிகிறது’ என்று பதில் சொல்கிறார் ராஜலிங்கம்.
ஹெல உறுமய கட்சி தற்போது பெளத்த - இந்து நல்லிணக்க சபையை உருவாக்கியுள்ளது. கடந்த 11ம் திகதி இதன் அங்குரார்ப்பணக் கூட்டம் இந்து மத விவகார திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ்விரு மதங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை இணைத்து மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கி சமாதானத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
இந்து - பெளத்தம், தமிழன், சிங்களவன் எனத் தொடர்ந்தும் பேதங்களை வளர்த்துச் சென்றால் அதன் எதிரொலியாக அரசியல் மற்றும் பொருளாதார நலிவையே நாடு சந்திக்க வேண்டியிருக்கும் என்பதோடு, வெளிநாட்டுச் சக்திகள் இதன் கதகதப்பில் குளிர்காய இங்கே வந்துவிடலாம் எனவும் ஜாதிக ஹெல உறுமய கவலை கொண்டிருக்கிறது என்கிறார் ராஜலிங்கம்.
கடைசியாக அவரிடம் ஒரு கேள்வி : இந்த இலங்கையிலேயே அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போன ஒரே தமிழன் நீங்கள் மட்டுந்தானா?
‘இது பற்றியும் நான் சொல்லியிருக்கிறேன். ஹெல உறுமயவில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் காரணமாக மேலும் பல தமிழர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்பது என் நம்பிக்கை’ என்றார் ராஜலிங்கம் முத்தாய்ப்பாக!
thinakaran
0 commentaires :
Post a Comment