8/28/2009

மட்டக்களப்பில் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு உப அலுவலகம் திறப்பு


கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் உப அலுவலகமொன்றை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெலகம இன்று மட்டக்களப்பு மாவட்ட கட்டிடத் தொகுதியில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள கைத்தொழில்அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலேயே மட்டக்களப்பு பிராந்தியத்திற்கான உப அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சருடன் நெசவுக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த ரத்னதிலக்க, தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எஸ்.எச்.அமீர் அலி ஆகியோரும் கலந்து கொண்டனர். இவ்வைபவத்தில் ஒரு தொகுதி நெசவுக் கைத்தொழிலாளர்களுக்கு நெசவுக் கைத் தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டன. மேற்படி நிகழ்வின் பின்பு மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் கலந்து கொண்ட சந்திப்பொன்றிலும் அமைச்சர்கள் கலந்து கொண்டு கைத்தொழிலை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர் தேசிய கடதாசி கம்பனியின் வாழைச்சேனை ஆலை ஊழியர்கள் மாதாந்தச் சம்பளம் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஊழியர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் குமார வெலகமவைச் சந்தித்து அவரது கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து அமைச்சர் கொழும்பு திரும்பும் வழியில் காகித ஆலைக்கும் விஜயமொன்றை மேற்கொண்டார்.


0 commentaires :

Post a Comment