ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிங்களப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்குத் தமிழ்மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் தென்மாகாண பொறுப்பாளர் சஞ்சீதா சத்யமூர்த்தி தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை ஆசிரியர் வள நிலையத்தில் ஆசிரியர்களுக்கான தமிழ் மொழி கற்பித்தல் வகுப்பில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர ஆசிரிய வள நிலையங்களில் ஒவ்வொரு நிலையத்திலும் 40 பேர் கொண்ட 80 பேருக்கு தமிழ் மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இவ்வகுப்புக்களில் கலந்து கொள்வதினூடாக பயிற்சி முடிவின் போது சிறந்த முறையில் தமிழ் மொழியில் கருமமாற்றக் கூடிய திறனை பெறவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இந்த பயிற்சி வகுப்புக்கள் அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளரின் மேற்பார்வையின் கீழ் வலயக் கல்விக் காரியாலயத்தினால் நடத்தப்படுகின்றது.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில்நாம் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இதில் உங்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கும் திட்டமானது மிகவும் முக்கியமானது. இதனூடாக கழகங்களிடையே சமாதானத்தை கட்டியெழுப்ப உத்தேசித்துள்ளோம்.
நீங்கள் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டு பெறும் பயனைக் கொண்டே எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் இது மாதிரியான தமிழ் வகுப்புக்களை நடத்த திட்டங்களை தயாரிக்கவும் உத்தேசித்துள்ளோம். அதுவே இதில் உங்களது பங்களிப்பு முக்கியமானது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இது போன்றே சிங்கள மொழியை கற்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சிளை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் அம்பாந்தோட்டை வலய தமிழ் மொழிப் பிரிவிற்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ. ஜலால்தீனும் உரையாற்றினார்.
0 commentaires :
Post a Comment