திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு ஒன்று திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் இப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் முதலில் இப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட பின்னர் வார்ட்டுகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலதிக சிகிச்சை தேவையில்லாதவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இப்பிரிவில் நோயாளர் ஒருவர் ஒருநாள் மாத்திரம் தங்க வைக்கப்படுவார். இங்கு 27 பேர் ஒரே நேரத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
8 வைத்தியர்கள், 16 தாதிகள் 24 மணி நேரமும் இங்கு சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு ஒன்றினை திறந்து வைத்து மாகாண அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், திருகோணமலை வைத்தியசாலை மிக விரைவில் சகல வசதிகளும் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்படும்.
அமெரிக்க நிதி உதவியுடன் 250 மில்லியன் செலவில் 150 படுக்கைகள் கொண்ட வார்ட் விரைவில் அமைக்கப்படும். இதன் ஆரம்ப பணிகள் இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்படும். தேசத்தைக் கட்டி எழுப்பும் அமைச்சு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் 150 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை இதற்கு ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது.
கிழக்கு மாகாணம் மீட்கப்பட்ட பின்னர் மூடப்பட்டிருந்த சகல வைத்தியசாலைகளும் திறக்கப்பட்டுள்ளது. எமது மாகாணத்தில் கிராமங்கள் தோறும் வைத்திய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
சில கிராமங்களில் வைத்தியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாக பல மைல்கள் கடந்து மாவட்ட வைத்தியசாலைகளை தவிர்த்து மக்கள் சிகிச்சைக்காக அங்கு செல்கின்றார்கள். வைத்தியர்கள் தங்களால் ஆன சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றார்
0 commentaires :
Post a Comment