இலங்கை சமூக விஞ்ஞானிகள் மன்றத்தில் பணியாற்றிவரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மிக நீண்டகாலம் அங்கத்தவராக இருந்தவரும் மத்திய குழு அரசியல் பீடங்களில் அங்கத்துவம் வகித்தவரும் திம்பு பேச்சுவார்த்தையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பங்கை ஆற்றியவரும், தோழர் பத்மநாபாவுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவருமான கேதீஸ் லோகநாதன் இன்று பாசிசவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். நேர்மை, கண்ணியம், அர்ப்பணம் என்பன அவரின் அருங்குணங்கள்.
அவர் ஈ.பி.ஆர்.எல். எப். இன் பேச்சாளராகப் பணியாற்றியபோது அவரால் வெளியிடப்பட்ட அறிக்கைகளும், கருத்துக்களும் தமிழ்பேசும் மக்களின் நிலைபற்றி சர்வதேச ஊடகங்களினதும் சர்வதேச கொள்கை வகுப்பாளர்களினதும் கவனத்தை ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தன.
அவர் முன்னாள் உலக வங்கி ஆலோசகராகவும், இலங்கை மத்திய வங்கியின் அத்தியட்சகராகவும் பணியாற்றிய காலஞ்சென்ற லோகநாதனின் புத்திரராவார். அவர் உலகின் எந்த மூலையிலும் மிகச் செளகரியமாக வாழ்ந்திருக்க முடியும்.
ஆனால் இலங்கையில் தான் பிறந்த சமூகத்தின் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் தன்னை அர்ப்பணித்திருந்தார்.
சமூக உரிமைகளுக்கான அவரது குரல் வெளிப்படையானதாகவும், தர்க்க ரீதியாகவும், ஆணித்தரமாகவும் அமைந்திருந்தது. யாருக்கும் அஞ்சி உயிருக்குப் பயந்து தனது கருத்துக்களை விட்டுக்கொடுப்பவர் அல்லர். அவர் கல்விமான்கள் மத்தியிலும், ஜனநாயக சத்திகள் மத்தியிலும், சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு பெருமகனாகத் திகழ்ந்தார்.
அவர் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும், பின்னர் இலங்கை சமாதானச் செயலகத்தின் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். ‘இழந்த சந்தர்ப்பங்கள்’ என்ற மகுடத்தின் கீழ் அவர் ஒரு நூலை வெளியிட்டார். அது இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக கிடைத்த வாய்ப்புக்கள் பல எவ்வாறு கை நழுவிப் போயின என்பதை ஆவணப்படுத்தியிருந்தது.
ஈபி ஆர்.எல்.எப். இல் அவர் அங்கத்தவம் வகித்தபோது “ஈழப் போராட்டத்தில் ஈபிஆர்எல்எப் இன் பங்கு” என்ற தலைப்பில் ஒரு கொள்ளை வகுப்பு நுலை எழுதியிருந்தார். ஆங்கிலத்தில் இனப்பிரச்சினை பற்றி மாதாந்த சஞ்சிகையொன்றை வெளியிட்டவர்.
“சத்தியா” என்ற புனை பெயரில் அவர் ஆங்கில ஊடகங்களில் எழுதிய பல கட்டுகரைகள் தமிழ் மக்களின் அவல நிலையை கச்சிதமாக வெளிப்படுத்துவதாகவும் தீர்வை நோக்கிய ஆக்கபூர்வமான திசையிலும் எழுதப்பட்டன. ஆவர் வீரகேசரியின் சகோதர ஆங்கில வாராந்தரியான “வீக்கன்ட் எக்ஸ்பிரஸின்” ஆசிரியராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.
இங்கிலாந்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் பல சர்வதேச கருத்தரங்குகளில் கடந்த கால்நூற்றாண்டில் பல ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறார். பல சர்வதேச உள்ளூர் கருத்தரங்குகளில் பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறார். ஆரோக்கியமான விவாதக் களங்களையும் அவர் கருத்தரங்குளில் உருவாக்குபவர்.
கடந்த கால்நூற்றாண்டில் இனங்களின் பிரச்சினைகளுக்கு இலங்கையில் தீர்வுகாண்பது தொடர்பிலும் ஒரு தேசமாக பரிணமிக்க வேண்டியதன் அவசியத்திலும் ஒரு புலமைத்துவ அக்கறை கொண்டிருந்தார். அதற்காக அவர் தன்னை அர்ப்பணித்திருந்தார். அதற்காக ஓய்வு ஒழிச்சலின்றி தனது இறுதிமூச்சு வரை உழைத்தார்.
இலங்கையில் பெரும் அரசியல் புயல் வீசிய நாட்களிலெல்லாம் இங்கிருந்து தொடர்ந்து செயற்பட்டவர். நோர்வே பல்கலைக்கழகமொன்றில் அவர் அபிவிருத்தி தொடர்பான ஆராய்ச்சியாளராகவும் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர்.
வசதி வாய்ப்புக்களுடன் கூடிய வாழ்க்கையை உதறித் தள்ளி மக்களின் விடிவுக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு கீர்த்தி வாய்ந்த மனிதனை எமது சமூகம் இழந்து விட்டது. தோழர் கேதீஸின் இழப்பு ஈடற்றது. தோழர் கேதீஸ் யார்? அவரது இழப்பு எத்தகையது என்பதை புரிந்துகொள்ள முடியாத பரிதாபகரமான நிலையில் எமது சமூகம் நின்றுகொண்டிருக்கிறது.
பேய்கள் அரசோச்சும் எமது சமூகத்தில் தோழர் கேதீஸ் போன்றவர்களைப் புரிந்து கொள்வதவற்கான இடைவெளி அரிதானதே. இது மிகப் பெரிய அவலமுமாகும். தோழர் கேதீஸின் படுகொலை எந்தளவு தூரம் காட்டு மிராண்டித்தனம்; எமது சமூகத்தில் செல்வாக்கு செலுத்துகிறது என்பதையே காட்டுகிறது.
அவர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த போதிலும் சரி, இன்று சமாதானச் செயலகத்தின் உதவிப்பணிப்பாளராக இருந்த போதிலும் சரி எந்த வித பாதுகாப்பையும் பெற்றுக் கொண்டவரில்லை.
தமிழ் பேசும் மக்கள் கெளரவமாக வாழவேண்டும் என்பதிலும் இலங்கை ஒரு பல்லின மக்களின் தேசமாகப் பரிணமிக்க வேண்டும் என்பதிலும் அவர் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையை நிஜமாக்குவதே தோழர் கேதீசுக்கு தமிழ் சமூகமும் அனைத்து இலங்கை மக்களும் செய்யவேண்டிய உண்மையான அஞ்சலியாகும்.
அவரை படுகொலை செய்த அற்ப பாசிசப் பதர்கள் அவரின் தார்மீக வலுவைக் கண்டஞ்சியே அவரைப் படுகொலை செய்தார்கள். நிராயுதபாணியான தார்மீகத் துணிவு கொண்ட ஒரு மனிதனைப் படு கொலை செய்ததில் பாசிச வாதிகள் எத்தகைய கோழைகைள் என்பதை அம்பலப்படுத்தி நிற்கின்றனர்.
தி.ஸ்ரீதரன் (சுகு)பொதுச் செயலாளர் பத்பநாபா ஈழ மக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி
0 commentaires :
Post a Comment