8/17/2009

கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து அரசியலில் ஒற்றுமைப்பட வேண்டும்.




தெளிவான சிந்தனை உணர்வுகளோடு எமது சமூகத்தின் தேவைப்பாடு உணர்ந்து கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து அரசியல் ரீதியில் ஒற்றுமைப்படுகின்றபோது நாம் எதிர்பார்க்கின்ற அபிவிருத்தியை அடைய முடியும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஏறாவூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் நடாத்திய 87வது சர்வதேச கூட்டுறவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதல்வர், கடந்த மாகாணசபைத் தேர்தலில் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பங்காளிகளாக இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளோம்.
இதன் பயனாக கிழக்கு மாகாணத்திற்கான முதலமைச்சராக நான் பதவியேற்று இருக்கின்றேன். இதன் பயனாக கிழக்கில் பல் துறை சார்ந்த அபிவிருத்தி நடைபெற்றுக் கொண்டிருப்பதனை நாம் அனைவருமே காணலாம். இதேபோல் நாம் எதிர்வருகின்ற காலங்களில் எமது மாகாணத்தினை பாரிய அபிவிருத்திப் பாதையில் பயணிக்க வைக்க வேண்டுமானால் அரசியல் ரீதியான பலத்தின் மூலமே முடியும். எனவே எதிர்வருகின்ற காலங்களில் இனநல்லுறவுகளுடன் கூடிய அரசியல் முன்நகர்வுகள் மூலம் அதனை நாம் பெறுவதற்கு அனைவருமே சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
இந் நிகழ்வில் பல சாதனையாளர்களுக்கான விருதுகள் மற்றும் நினைவுப் பரிசில்கள் என்பனவும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு கிழக்குமாகாண கூட்டுறவு அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர், ஏறாவூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கிராம மக்கள், கௌரவிக்கட்ட மாணவர்கள், சமூக சேவகாகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment