இலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையிலான பரஸ்பர இருதரப்பு ஒப்பந்தம் நேற்று வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் வியட்நாம் வெளிவிவகார அமைச்சர் டாவு வியட் ட்ரூங் ஆகிய இருவருமே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இருநாடுக ளுக்குமிடையிலான பரஸ்பர இருதரப்பு ஒப்பந்தம் முதன் முறையாக 2003 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.
பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க 2006 ஆம் ஆண்டில் வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டதைய டுத்தும் இவ் வருடம் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம அந்நாட்டுக்கு சென்று வந்ததை தொடர்ந்தும் ஒப்பந்தம் இரண்டாவது தடவையாக புதுபித்தல் சாத்தியமாகியிருப்பதாக அமைச்சர் போகொல்லாகம செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது கூறினார்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியட்நாம் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஒக்டோபர் மாதம் அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவிருப்பது இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமையுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சில் வைத்து நேற்று கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், அரசியல், கலாசாரம், சமயம், மக்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பரந்துபட்ட அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை வியட்நாமுடன் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளில் வருடத்துக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலாபமீட்டுகின்றது. இதனை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களாக்குவதை குறிக்கோளாக வைத்து வியட்நாம் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தியதாகவும் அமைச்சர் போகொல்லாகம குறிப்பிட்டார்.
பிராந்திய ரீதியாக இருநாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் பலப்படுத்தப்படுவதுடன் 70 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் மூடப்பட்ட வியட்நாம் தூதரகத்தை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கான பூரண ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்குமென தான் உறுதி மொழிந்ததாகவும் அமைச்சர் சொன்னார்.
அங்கு செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவித்த வியட்நாம் வெளிவிவகார அமைச்சர்; இரு நாடுகளுக்குமிடையிலான உறவு குறித்து விளக்கியதுடன் தமது தூதரகத்தை விரைவில் கொழும்பில் மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கூறினார்.
இலங்கை ஜனாதிபதி எதிர்வரும் ஒப்டோபரில் எமது நாட்டுக்கு வருகை தரவிருப்பது இலங்கையுடனான எமது உறவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகுமெனவும் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூன்றாம் கட்டம் 2011 ஆம் ஆண்டு வியட்நாமில் வைத்து கைச்சாத்திடப் படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment