கிழக்கு மாகாண கூட்டுறவுக் கல்விக் கல்லூரி எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு மட்டக்களப்பு கல்லடியில் திறந்து வைக்கப்படவுள்ளது.கிழக்கு மாகாண சுகாதார, சமூகசேவை, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இக்கல்லூரியைத் திறந்துவைக்கவுள்ளார்.
இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண அமைச்சர்களான ரீ.நவரட்ணராஜா, விமலவீர திஸாநாயக்க, எம்.எஸ்.உதுமா லெப்பை ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்துகொள்வர்.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வீ.பி.பாலசிங்கம், ஆளுநரின் செயலாளர் எஸ்.அமிர்தலிங்கம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம் ஆகியோரும் அதிதிகளாகக் கலந்துகொள்வர்.
இந்நிகழ்வுக்கான, ஏற்பாடுகளை கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் கலாநிதி கே.தியாகராஜா மேற்கொண்டு வருகின்றார். இலங்கையில் பொல்கொல்ல, வவுனியா ஆகிய இடங்களில் கூட்டுறவுக் கல்விக் கல்லூரிகள் ஏற்கனவே இயங்குகின்றன. கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதுவரை காலமும் பயிற்சி நெறியைத் தொடர இக்கல்லூரிக்கே சென்று வந்தனர்.
கிழக்கு மாகாணத்துக்கான கூட்டுறவுக் கல்விக் கல்லூரி திறக்கப்பட்டவுடன் கூட்டுறவு தொடர்பான சகல பயிற்சி நெறிகளையும் இங்கு ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் கிழக்கு மாகாணத்தின் கூட்டுறவுத்துறை மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 commentaires :
Post a Comment