8/31/2009

இறக்காமம் குளத்தில் நன்னீர் மீன்பிடிப்புக்கெனஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் இறால் குஞ்சுகள்

நன்னீர் மீன்பிடித் தொழிலாளரின் பிரச்சினைகள் கடந்த காலங்களில் ஓரளவு தீர்க்கப்பட்டாலும் அச்சமூகம் வறுமைக் கோட்டின் கீழ் இருந்து விடுபட்டு இவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வந்ததை உணர்த்த எமது மாண்பு மிக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இச்சமூகத்தின் பிரச்சினைகளை உள்வாங்கி உயர்ந்த அந்தஸ்துள்ள சமூகமாக மாற்றியமைப்பதில் அக்கறையுடன் உழைத்து வருகின்றார்.

)
அந்த வகையில் இறக்காமம் பிரதேச நன்னீர் மீனவர் சமூகத்தின் நன்மை கருதி புதிய தொழில் நுட்ப முறைக்கு ஏற்றவாறு மீனவ தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்பதிலிருந்து ஒரு படி மேல் சென்று இறால்களை வளர்ப்பதன் மூலம் இச்சமூகத்தின் வாழ்வாதாரத்தில் உச்சப் பயனைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக இறக்காமம் குளத்தில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் இறால் குஞ்சுகளை விடுவிக்கும் வைபவம் அண்மையில் இறக்காமம் நன்னீர் மீனவ சங்க அலுவலக முன்றலில் மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, கிராமிய கைத்தொழில் மீன்பிடித் துறை அமைச்சர் ரி. நவரட்ணராஜா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம், வீடமைப்பு நிர்மாணமும், கிராமிய மின்சாரம், மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இறக்காமம் நன்னீர் மீனவர் சங்கத்தின் உப தலைவர் ஏ. எம். சதாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் ரி. நவரட்ணராஜா உரையாற்றுகையில் :-
நமது நாட்டில் பயங்கரவாதப் பிரச்சினை முற்றாக ஒழிக்கப்பட்டு ஒரு சமாதான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்கள் நிம்மதிப் பெருமூச்சை விடுவதற்கு வழியமைத்த எமது மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு என்றும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.
கிழக்கு மாகாண அபிவிருத்தி கட்டமைப்பு வேலைகளில் தன்னை அர்ப்பணித்து இப்பிரதேசத்திற்காக இரவு பகலாக உழைத்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷவை என்றுமே மறக்க முடியாது.
கடந்த 30 வருடங்களாக கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி ஆகியவற்றில் மிகவும் பின்தங்கி காணப்பட்ட கிழக்கு மாகாணத்தை சகல துறைகளிலும் வளம் மிக்கதாக கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தி வருகின்றோம். மக்களின் நலனுக்காகவே இரவு பகலாக பணியாற்றி வருகின்றோம். மக்களின் காலடிக்கு வந்து நாங்கள் சேவையாற்றுவதால்தான் இன்று மத்திய அரசு அடிக்கடி எமது மக்களுக்காக வளங்களை தந்து கொண்டிருக்கின்றது.
இந்த இடத்தில் நான் உங்களிடம் மிகவும் வினையமாக வேண்டிக் கொள்ளும் விடயம் தமிழர் - முஸ்லிம் - சிங்களவர் என்ற இன வேறுபாடின்றி ஒரே கொடி, ஒரே மக்கள், ஒரே இல்லம் என்ற நமது ஜனாதிபதியின் கோரிக்கைக்கிணங்க செயற்படுங்கள்.
இந்த நாட்டில் மனித இனம் மட்டும்தான் வாழ முடியும். முஸ்லிம், தமிழர், சிங்களவர் என்ற இன வேறுபாடுகள் களையப்பட வேண்டும். நாம் எல்லோரும் ஒன்றிணைந்து நமது எதிர்கால சந்ததிகளுக்காக உழைக்க வேண்டும்.
நமது எதிர்கால சந்ததிகள் துப்பாக்கி என்றால் என்ன என்று கேட்கின்ற ஒரு காலம் வரவேண்டும். ஒன்றிணைந்து செயற்பட்டு பாரிய அபிவிருத்தியைக் காணுவோம் என்று எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அடிக்கடி கூறுவதற்கேற்ப நாம் எமது நாட்டிலேயே உற்பத்திகளை மேற்கொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தொடர்ந்தும் வெளிநாடுகளிலிருந்து அரிசியையும், பால் மாவையும் இறக்குமதி செய்ய இடமளிக்கக்கூடாது.
இக்குளத்தில் விடப்படுகின்ற ஒரு இலட்சத்து 25 ஆயிரம் இறால் குஞ்சுகள் 06 மாதங்களின் பின்னர் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் உங்களின் வாழ்வாதாரத்திற்காக அவை உதவும். எனவே மூன்று கோடி ரூபா பணத்தை இக்குளத்தில் இருப்புச் செய்திருக்கின்றோம்.
மஹிந்த சிந்தனைத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தி மக்கள் பயனடைவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என்றார்.
இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை உரை யாற்றுகையில்:- கிழக்கு மாகாணத் தில் மக்கள் நினைத்த படி தாம் விரும்பிய இடங்களுக்கு சுதந்திரமா கச் சென்று தமது காரியங்களை நிறைவேற்றி வருவதற்கு எங்களை அர்ப்பணித்து செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறு செயற்பட வாய்ப்பினைப் பெற்றுத் தந்தவர் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்தான்.
இறக்காமம் பிரதேசத்திற்குத் தேவையான அனைத்தையும் பெற்றுத் தருவதற்கு நாம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.
இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் திருமதி ஆர். யூ. அப்துல் ஜலீல், மாகாண மீன்பிடி பிரதிப் பணிப்பாளர் சுதாகரன், மாவட்டட நீரியல்வள மீன்பிடி உத்தியோகத்தர் எம். எல். எம். இம்தியாஸ் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ். எல். எம். ஜமால்டீன், எஸ். ரி. நெய்ந்தர் லெவ்வை (சலீம்), ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சரின் இறக்காமம் பிரதேச இணைப்பாளர் ஜே. கலீலுர் ரஹ்மான், இறக்காமம் நன்னீர் மீன்பிடி சங்க செயலாளர் எஸ். அப்துல் லதீப், மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

0 commentaires :

Post a Comment