ஊவா மாகாண சபையிலும், யாழ்ப்பாணம் மாநகர சபையிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வரலாறு காணாத மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இதேவேளை வவுனியா நகர சபையில் தமிழரசுக் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. நேற்று முன்தினம் (08) சனிக்கிழமை காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை ஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகர, வவுனியா நகர சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. இவற்றின் இறுதி முடிவுகள் நேற்று நள்ளிரவுக்குப் பின்னரே வெளியாகின.
இந்த முடிவுகளின்படி ஊவா மாகாண சபையில் சுமார் மூன்று இலட்சம் வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரு வெற்றியை ஈட்டியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டைகள் இந்தத் தேர்தலில் சரிந்துள்ளதுடன், சகல தொகுதிகளையும் முன்னணியே கைப்பற்றியுள்ளது.
ஊவா மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4 இலட்சத்து 18 ஆயிரத்து 906 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதன்படி முன்னணிக்கு 72.39% வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சிக்கு 22.32% வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன. அக்கட்சிக்கு ஓர் இலட்சத்து 29 ஆயிரத்து 144 வாக்குகளே கிடைத்துள்ளன. இதற்கமைய இரண்டு இலட்சத்து 89 ஆயிரத்து 144 மேலதிக வாக்குகளை முன்னணி பெற்றுக்கொண்டுள்ளது.
இதனடிப்படையில், ஐ.ம.சு. முன்னணிக்கு ஊவா மாகாணத்தில் 25 ஆசனங்களும், ஐக்கிய தேசிய சட்சிக்கு ஏழு ஆசனங்களும், 2.53% வாக்குகளைப் பெற்ற ஜே. வி. பீக்கு ஓர் ஆசனமும், 1.59%, வாக்குகளைப் பெற்ற மலையக மக்கள் முன்னணிக்கு ஓர் ஆசனமும் கிடைத்துள்ளன.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13 ஆசனங்களைப் பெற்று பெரு வெற்றியைப் பெற்றுள்ளது. இங்கு முன்னணிக்கு 50.67% வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி 38.28% வாக்குகளைப் பெற்று எட்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. சுயேச்சைக் குழு ஒன்று ஓர் ஆசனத்தையும், தமிழர் விடுதலைக் கூட்டணி ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளன. வவுனியா நகர சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. 4279 வாக்குகளைப் பெற்று இக்கட்சி 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மூன்று ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டு ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகள் வவுனியா நகர சபைத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளன.
இதேநேரம், ஊவா மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்ட கதிர்காமம் பஸ்நாயக்க நிலமேயும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெறா மகனுமான சiந்திர ராஜபக்ஷ ஓர் இலட்சத்து 36 ஆயிரத்து 697 விருப்பு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளார்.
சiந்திர ராஜபக்ஷ போட்டியிட்ட மொனராகலை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஓர் இலட்சத்து 59 ஆயிரத்து 837 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன், 9 ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சி 30509 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைத் மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் முன்னணிக்கு ஓர் இலட்சத்து 29 ஆயிரத்து 328 வாக்குகள் மேலதிகமாகக் கிடைத்துள்ளன.
பதுளை மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டு இலட்சத்து 59 ஆயிரத்து 69 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 98 ஆயிரத்து 635 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மலையக மக்கள் முன்னணி 9227 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும், மக்கள் விடுதலை முன்னணி 9007 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
தோட்ட தொழிலாளர்களால்
ஐ. தே. க நிராகரிப்பு
பதுளை மாவட்டத்தில் முன்னணிக்கு ஓர் இலட்சத்து 60 ஆயிரத்து 434 மேலதிக வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஐ. தே. க. வின் கோட்டைகளாக விளங்கிய வெலிமடை, பண்டாரவளை, பதுளை, ஹாலிஎல, ஹப்புத்தளை உள்ளிட்ட தொகுதிகளில் கூடுதலான வாக்குள் ஐ. ம. சு. முன்னணிக்கே அளிக்கப்பட்டுள்ளன.
தோட்டத் தொழிலாளர்களைக் கொண்ட தொகுதிகள் அனைத்திலும் ஐ. தே. க. நிராகரிக்கப்பட்டுள்ளது. மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இம்முறை ஐ. ம. சு. முன்னணிக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர்.
ஜே. வி. பீ கடந்த மாகாண சபையில் ஏழு ஆசனங்களைக் கொண்டிருந்தபோதிலும், இம்முறை ஓர் ஆசனத்தை மாத்திரமே பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பொறுத்தவரை கடந்த தேர்தலைவிட நான்கு ஆசனங்களை மேலதிகமாகப் பெற்றுக்கொண்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்பிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே கூடுதல் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. மொனராகலை மாவட்டத்தில் முன்னணிக்கு 7076 வாக்குகளும், ஐ. தே. க வுக்கு 793 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. பதுளை மாவட்டத்தில் முன்னணிக்கு 12,121 வாக்குகளும் ஐ. தே. க வுக்கு 2228 வாக்குகளும் கிடைத்துள்ளன.
தொகுதி அடிப்படையில் நோக்குமிடத்து ஐ. தே. க. வின் கோட்டைகளாகத் திகழ்ந்த வியலுவ, ஹப்புத்தளை, பசறை, வெலிமடை, ஹாலிஎல, மஹியங்கன, பண்டாரவளை ஆகிய தொகுதிகளில் ஐ. ம. சு. முன்னணி 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாநகர சபை
யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் இதுவரை காலமும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி ஓர் ஆசனத்தை மாத்திரமே பெற்றிருக்கின்றது.
ஓர் இலட்சத்து 417 ஆயிரம் வாக்காளர்கள் பதிவாகியிருந்த யாழ். மாநகர சபையில் 22, 280 வாக்குகளே அளிக்கப்பட்டிருந்தன. இதில் 10,602 வாக்குகளை ஐ. ம. சு. மு. பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எண்ணாயிரத்து எட்டு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணி 1007 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சிக்கு வெறும் 83 வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன.
வவுனியா நகர சபை
வவுனியா நகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 4279 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ. பி. ஆர். எல். எப். கூட்டணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி 4136 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3045 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 587 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளன. ஐக்கிய தேசிய கட்சி 228 வாக்குகளை மாத்திரம் பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது. வவுனியா நகர சபைத் தேர்தலில் வாக்களிக்க 24, 626 பேர் தகுதிபெற்றிருந்தனர். எனினும் 12850 வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 558 வாக்குகள் நிகாகரிக்கப்பட்டன.
ஆக, ஊவா மாகாண சபை, யாழ். மாநகர சபை, வவுனியா நகர சபை ஆகியவற்றில் ஐக்கிய தேசிய கட்சி எதிர்பாராத தோல்வியைச் சந்தித்து பின்னடைவு கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடம்பெயர்ந்த வாக்காளர்கள்
யாழ். மாநகர சபைத் தேர்தலில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கவென 15 வாக்குச்சாவடிகள் புத்தளம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றிலும் ஐ. ம. சு. முன்னணிக்கே கூடுதலான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. புத்தளத்திலேயே கூடுதலானோர் பதிவாகியிருந்தனர். இடம்பெயர்ந்த 4388 முஸ்லிம் வாக்காளர்கள் புத்தளத்தில் பதிவாகியிருந்தனர்.
0 commentaires :
Post a Comment