8/30/2009

அறுபது வருடத் தலைமை தோற்று விட்டது: மக்கள் மாற்றத்துக்கு தயாராக வேண்டும்




சுதந்திர இலங்கையில் ஆறு தசாப்தங்களுக்கு
மேலாகத் தமிழ் மக்களை வழிநடத்திய தலைமை ‘தோல்வியடைந்த தலைமை’ என்ற நிலைக்கு இன்று வந்திருப்பதால், தமிழ் மக்கள் தாங்கள் நடந்துவந்த பாதையை மீள்பரிசீலனை செய்து பொருத்தமான முடிவுக்கு வர வேண்டியவர்களாக உள்ளனர்.
தமிழ் பேசும் மக்கள் இன்றைய தங்கள் நிலையையும் அரசியல் நிலையையும் மிக நிதானத்துடன் கவனத்துக்கு எடுத்துத் தீர்மானத்துக்கு வர வேண்டியவர்களாக உள்ளனர். தேசிய அரசியலையும் சமூகம் சார்ந்த அரசியல் நிலையையும் தனித்தனியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேசிய அரசியலில் எதிர்க் கட்சி இல்லை என்ற நிலை இப்போது நிலவுகின்றது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாளுக்கு நாள் தேய்ந்து வருகின்றது. கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்டங்கட்டமாக அரசாங்கத்தில் இணைந்துகொள்வது ஒருபுறமிருக்க, அடிமட்ட ஆதரவாளர்களும் சாரிசாரியாகக் கட்சி மாறுகின்றனர். இந்த இறங்குபடிப் போக்கைத் தடுத்து நிறுத்தும் திறமை இல்லாதவராகக் கட்சியின் தலைவர் இருக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துடன் இருப்பது மக்கள் விடுதலை முன்னணி. இது செயற்கை அந்தஸ்து. இயல்பான பலத்தைக் குறிக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததாலேயே பாராளுமன்றத்தில் இவர்களுக்கு இந்த எண்ணிக்கை கிடைத்தது. அடுத்த தேர்தலில் தனியாகப் போட்டியிடும் போது குட்டு வெளிப்படும்.
தேர்தல் பந்தயத்தில் இப்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தான் உருப்படியான ஒரேயொரு குதிரை. எதிரணிக் கட்சிகள் தனித்தனியாக வந்தாலென்ன, கூட்டணி அமைத்து வந்தாலென்ன தலைதூக்கக் கூடிய நிலைமை இப்போது இல்லை. இந்தப் பின்னணியிலேயே தமிழ் பேசும் மக்கள் தங்கள் சமூகம் சார்ந்த அரசியலை நோக்க வேண்டியுள்ளது.
பல முஸ்லிம் தலைவர்கள் இன்று அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கின்றனர். இவர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களாகப் போட்டியிட்டவர்களும் இருக்கின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களாகப் போட்டியிட்டவர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் இன்றைய அரசியல் யதார்த்தத்தைச் சரியாக விளங்கிக்கொண்டுள்ளனர். அதனால் தான் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்குப் பொருத்தமான கட்சியுடன் சேர்ந்து செயற்படுகின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் ஸ்தாபகர் அஷ்ரஃபின் பெயரை உச்சரிப்பதன் மூலமே அரசியல் அரங்கில் தொடர்ந்து இருக்கின்றது. ஆனால் அவரது நோக்கத்துக்கு முரணாகவே செயற்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியினால் சிறுபான்மையினருக்கு விமோசனம் இல்லை என்பதில் அஷ்ரஃப் மிகவும் தெளிவானவராக இருந்தார். முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சியின் நிழலில் சஞ்சரிப்பதையே விரும்புபவர் போல் தெரிகின்றது.
ஹக்கீம் தலைமையேற்ற பின் எந்தத் தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்த்துப் போட்டியிடவில்லை. பெரும் பாலும் யானைச் சின்னத்திலேயே போட்டியிட்டது. மரச் சின்னத்தில் போட்டியிட்ட வேளைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் அணியாகவே போட்டியிட்டது. முஸ்லிம் காங்கிரஸ் என்றால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் மறுபதிப்பு என்ற நிலைக்கு இன்றைய தலைமை காங்கிரஸைக் கொண்டு வந்துவிட்டது.
தமிழ் மக்களின் அரசியல் முக்கியமான ஒரு திருப்புமுனைக்கு வந்திருக்கின்றது. சுதந்திர இலங்கையில் ஆறு தசாப்தங்களுக்கு மேலாகத் தமிழ் மக்களை வழிநடத்திய தலைமை ‘தோல்வியடைந்த தலைமை’ என்ற நிலைக்கு இன்று வந்திருப்பதால், தமிழ் மக்கள் தாங்கள் நடந்துவந்த பாதையை மீள்பரிசீலனை செய்து பொருத்தமான முடிவுக்கு வர வேண்டியவர்களாக உள்ளனர்.
அறுபது வருடங்களுக்கு மேலாகத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் தமிழரசுக் கட்சியும் தனித்தும் கூட்டாகவும் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகச் செயற்பட்டுள்ளன. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இது போதுமான காலம். குறைந்தபட்சம் தீர்வை நோக்கிய நகர்வாவது இக் காலத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் தீர்வு முயற்சி வெகுவாகப் பின்தள்ளப்பட்டிருப்பதே இத் தலைமையின் அறுவடையாக உள்ளது. இந்த நிலைமைக்கான காரணம் என்ன என்பதையிட்டுத் தமிழ் மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது.
தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் தமிழரசுக் கட்சியும் தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்குச் சென்றார்களேயொழியத் தமிழ் மக்களின் தலைவர்களாகச் செயற்படவில்லை. இக்கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளிலும் பார்க்கத் தங்கள் சொந்த அபிலாஷைகளுக்கே முன்னுரிமை அளித்துச் செயற்பட்டார்கள். ஐக்கிய தேசியக் கட்சியுடன் நல்லுறவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் இடதுசாரிக் கட்சிகளுடனும் முரண்பாடும் இவர்களினது அணுகுமுறையின் அடிப்படை அம்சமாக இருந்தது. தமிழரசுக் கட்சி அதன் ஆரம்ப நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான செயற்பாடுகளில் பங்கு பற்றிய போதிலும் அது அடிப்படையில் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதெனத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சியிலிருந்து வெளியேறியவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே தமிழரசுக் கட்சி. அதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டைத் தமிழரசுக் கட்சி ஆரம்பத்தில் எடுத்தது.
காலப் போக்கில் நிலைமை மாறி இரண்டு கட்சிகளுமே ஐக்கிய தேசியக் கட்சியின் நேச அணிகள் போலச் செயற்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை இவ்விரு கட்சிகளும் இரண்டாவது இடத்துக்குத் தள்ளியதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் இடதுசாரிக் கட்சிகளினதும் கூட்டாட்சிக் காலத்தில் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அத் தீர்மானத்தைக் கைவிட்டு மாவட்ட சபைகளை ஏற்றுக்கொண்டதும், தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்து எதிர்க்கட்சி ஆகியதும் கூட்டணி மீண்டும் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலைத் தூக்கிப் பிடித்ததும் பிரதானமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை.
இத் தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களுக்குத் தலைமை வகிக்கவில்லை. உண்மையாகவே தலைமை வகித்திருந்தால் இனப் பிரச்சினை இன்றைய அளவுக்கு வளர்ந்திருக்காது. இத் தலைவர்கள் ஆடிய நாடகத்தின் இறுதிக் கட்டம் புலிகளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்பட்டதாகும். இச் செயற்பாடு தமிழ் மக்களை அரசியல் அந்தகாரத்தில் தள்ளியதோடு அறுபது வருட காலம்u கோலோச்சிய தலைமையைத் ‘தோல்வியடைந்த தலைமை’ என்ற நிலைக்குத் தள்ளிவிட்டது.
இந்த நிலையில் தமிழ் மக்கள் புதிய தலைமை பற்றியும் புதிய பாதை பற்றியும் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.
மேலே கூறியது போல, இன்று அரசியல் அரங்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்திரமே ‘உருப்படியான குதிரை’. அரசியல் தீர்வுக்கான தமிழ் மக்களின் முயற்சி இதனுடன் இணைந்ததாக இருக்க வேண்டியது தான் இன்றைய யதார்த்தம்.
பிரதான அரசியல் கட்சிகள் என்ற வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் எடுத்துப் பார்த்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பக்கமே தமிழ் மக்கள் திரும்ப வேண்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி எந்தக் காலத்திலும் இனப் பிரச்சினையின் தீர்வுக்குச் சாதகமாகச் செயற்படவில்லை. இனப் பிச்சினை பற்றிப் பேசித் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதில் கண்ணுங்கருத்துமாக இருக்கின்றதேயொழியப் பிரச்சினையின் தீர்வுக்கு ஒத்துழைக்கும் நோக்கம் சிறிதளவும் இல்லை. தீர்வுக்கான திட்டம் எதையும் இதுவரை ஐக்கிய தேசியக் கட்சி வெளிப்படுத்தவில்லை. இனியும் வெளிப்படுத்தப் போவதில்லை. ஏனெனில் அதனிடம் ஒரு திட்டமும் இல்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்வு பற்றிப் பேசுகின்றது. அதனிடம் தீர்வுக்கான திட்டமும் இருக்கின்றது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதும் பின்னர் அதனிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்துவதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் திட்டம். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு மேலான தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை. அப்பெரும்பான்மையைப் பெறுவதற்கான சாத்தியம் இப்போது இல்லாததாலேயே கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு பின்போடப்படுகின்றது.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் பற்றாக்குறைத் தீர்வு என்பதால் அதை நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சில தீவிர இடதுசாரிகளும் கூறுகின்றனர். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் இனப் பிரச்சினைக்குப் போதுமான தீர்வல்ல என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இன்றைய நிலையில் அதை நிராகரிப்பது சரியானதா என்பதே நம் முன்னாலுள்ள கேள்வி.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வை நடைமுறைப்படுத்துவதற்குச் சாதகமான சூழ்நிலை இப்போது இல்லை. இந்த நிலையில் பதின்மூன்றாவது திருத்தத்தைத் தற்காலிகமான ஏற்பாடாக ஏற்பதால் தமிழ் மக்களுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை. இப்போது அவர்கள் அனுபவிக்கும் துன்பம் தீர்வதற்கு இதனால் வழி ஏற்படும். இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியும். வழமையான தொழில்களை இழந்தவர்கள் மீண்டும் அத் தொழில்களைப் புரிய முடியும். பாதுகாப்பு தொடர்பான சில நெருக்கடிகள் நீங்குவதற்கும் இடமுண்டு. இவற்றோடு மாகாண மட்டத்திலேயே சில விடயங்களைக் கையாள்வதற்கான புதிய அதிகாரங்களையும் மக்கள் பெறுவார்கள்.
எனவே, பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழான மாகாண சபையை இப்போதைக்கு ஏற்றுக்கொண்டு அதனிலும் பார்க்கக் கூடுதலான தீர்வுக்காகத் தொடர்ந்து முயற்சிப்பது தான் இன்றைய நிலையில் தமிழ் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை.
பதின்மூன்றாவது திருத்தம் போதாது என்றும் அதை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறுபவர்கள் அதனிலும் மேலான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும். அதை நிறைவேற்றுவதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிவகைகளையும் மக்களுக்குக் கூற வேண்டும். அவ்வாறன்றி, அந்தத் திருத்தம் போதாது இந்தத் திருத்தம் போதாது என்று வெறுமனே பேசுவதும் எழுதுவதும் மக்களை உணர்ச்சிவசப்படுத்த உதவுமேயொழிய அவர்களுக்கு எந்த நன்மையையும் தரப் போவதில்லை.
இப்படிப் பேசிப் பேசியே தலைவர்கள் தமிழ் மக்களை இன்றைய அவல நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். இந்த வரலாறு இனித் தொடரக் கூடாது. மக்கள் மாற்றத்துக்குத் தயாராக வேண்டும்.

0 commentaires :

Post a Comment