வவுனியா, நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக அனுப்பவும், கடும்மழை வெள்ளம் காரணமாக முகாம்களில் தங்கியுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மாற்று நடவடிக்கைகள் செய்வது குறித்தும் அரச அதிபர் தலைமையில் நேற்றுக்காலை விசேட கூட்டம் நடைபெற்றது.
பருவமழை ஆரம்பிக்கும் முன்னர் குறிப்பிட்ட தொகையினரை வெளியேற்றவும் மலசலகூட வசதிகளுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்யவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15ஆம் திகதிக்கு முன்னதாக சகல மாற்று ஏற்பாடுகளையும் செய்வதென இக்கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டது. யுனிசெப் நிறுவன பிரதிநிதிகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பிரதிநிதிகள், உள்ளூராட்சி பிரதிநிதிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இதேவேளை நிவாரணக் கிராமங்களில் உள்ள வலது குறைந்தோர், வயோதிபர்கள், மன நோயாளர்கள் தொடர்பாகவும் அவர்களை பொறுப்பேற்க உறவினர்கள் இருப்பின் அவர்களிடம் ஒப்படைப்பதற்குமான வேலைகளை துரிதப்படுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென நியமிக்கப்பட்ட குழுவினர் நிவாரணக் கிராமங்களுக்குள் தரவுகளை சேகரித்து வருகின்றனர் என்றும் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
மேலும் நிவாரணக் கிராமங்களில் வசித்து வருபவர்களில் வவுனியாவில் இவர்களுக்கு அசையாத சொத்துக்கள் இருப்பின் நெருங்கிய உறவினர்கள் அவர்களை பொறுப்பேற்றால் விடுவிக்கப்படுவர். இதற்குரிய பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
வலயம் 4, வலயம் 5 நிவாரணக் கிராமங்களில் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு வவுனியாவில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வீடு காணி உடமைகள் இருப்பதினை பிரதேச கிராமசேவையாளர் உறுதிப்படுத்தினால் விடுவிக்க சிபார்சு செய்யப்படும். இராணுவத்தின் அனுமதிக்கு பத்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டு விடுவிக்கப்படுவர் பருவமழை ஆரம்பிக்க முன்னர் ஒரு குறிப்பிட்ட தொகையினரை வெளியேற்றிவிடலாம் என்றும் நம்பப்படுகிறது. சுமார் இரண்டாயிரம் பேரின் பெயர்கள் கிடைத்துள்ளதாக அவை தொடர்பான பரிசீலனை நடைபெறுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 commentaires :
Post a Comment