திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களை மூன்று மாத காலத்தினுள் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று மீள்குடியேற்ற அனர்த்த, நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பூர் அதிஉயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தி மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத், சம்பூர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை நிராகரிப்பதாகவும் கூறினார்.
மீள்குடியேற்றம் தொடர்பாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் வை.எம்.நவரட்ன பண்டா எழுப்பிய, வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதில் அளிக்கையிலேயே அமைச்சர் ரிஷாத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
2009ம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை, மீளக்குடியமர்த்தப்பட்டவர்களின் விபரங்கள் தொடர்பில் பா.உ.நவரட்ன பண்டா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரிஷாத், இந்த ஆண்டில் 2,88,938 பேர் இடம்பெயர்ந்ததாகவும், இதுவரை 59,600 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் விளக்கினார்.
கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் 98% நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மட்டக்களப்பில் 35,766 குடும்பங்களும், திருகோணமலையில் 22,068 குடும்பங்களும், மன்னாரில் 669 குடும்பங்களும் அம்பாறையில் 51 குடும்பங்களும், யாழ்ப்பாணத்தில் 1054 குடும்பங்களும் இதுவரை மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30ற்கு வழமைக்கு மாறாகப் பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்னவின் தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார சபா பீடத்திற்கு வருகை தந்தார்.
அமைச்சரின் பதிலுக்குப் பின்னர், துணைக் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி. உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, ‘சம்பூரில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள், அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவதற்குப் பதிலாக, அவர்களின் வாழ்விடத்தில் மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்காக இந்தியாவுக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு இடங்களுக்குச் செல்ல விரும்பாமல் தொடர்ந்து இரண்டு வருடமாக ஐந்து முகாம்களில் உள்ளனர்” என்றார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வேறு இடங்களில் குடியமர மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். சொந்த இடங்களுக்குச் செல்வதானால், பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள முடியும். நானறிந்தவரை சம்பூர் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை” என்றதுடன்,
அதேநேரம், எதிர்க்கட்சிகளுக்கு நிவாரணக் கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“நான் செல்வதாக இருந்தாலும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிபெற வேண்டும். எதிர்க்கட்சியினரும் அவ்வாறு அனுமதி பெற்றுச் செல்ல முடியும்”, எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
0 commentaires :
Post a Comment