8/30/2009

ஹொன்டுராஸ் சதிப் புரட்சி திடீர்த் திட்டமிடலின் விளைவு:சிவில் யுத்தத்துக்கு வழிவகுக்கலாம்



ஹொன்டுராஸ் இராணுவம் அந்நாட்டு ஜனாதிபதி மனுவெல் ஷெலாயாவை யூன் 29ந் திகதி பதவியிலிருந்து இறக்கி இரவோடிரவாக அவரை ஒரு விமானத்தில் ஏற்றிக் கொஸ்ரா றிக்காவுக்கு நாடு கடத்தியது. உப ஜனாதிபதியாக இருந்த றொபேர்டோ மைக்கலெற்றி உடனடியாக ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இது ஒரு இரத்தம் சிந்தாப் புரட்சி என்று ஹொன்டுராஸ் இராணுவம் அறிவித்தது.
n~லாயா
ஹொன்டுராஸ் லத்தீன் அமெரிக்காவில் எழுபது லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு வறிய நாடு. 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட ஷெலாயா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இப்போது ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் மைக்கலெற்றியும் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர். லிபரல் கட்சி பணக்காரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி. இக் கட்சியின் வேட்பாளராக வெற்றி பெற்ற ஷெலாயா சில முற்போக்கான நடவடிக்கைகளை எடுக்க முனைந்ததையிட்டுக் கட்சியின் மேட்டுக்குடி முக்கியஸ்தர்கள் அதிருப்தியுற்றிருந்தனர்.
தொழிலாளரின் ஆரம்ப சம்பளத்தை ஷெலாயா மாதமொன்றுக்கு 170 டொலரிலிருந்து 280 டொலராக அதிகரித்தார். லிபரல் கட்சியின் முக்கியஸ்தர்களாக உள்ள தொழிலதிபர்கள் இதனால் சீற்றமடைந்தனர். இச் சீற்றத்தை அதிகரிப்பது போல அரசியலமைப்பில் மாற்றம் செய்வதற்கும் ஷெலாயா முன்வந்தார். அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிக்கு இவ்வாறான செயல்களே வித்திட்டன எனக் கூறலாம்.
ஷெலாயாவுக்கு எதிரான சதி திடீர்த் திட்டமிடலுடன் மேற்கொள்ளப்பட்டது போலவே தெரிகின்றது. அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான கட்டுப்படுத்தாத (னிon binனீing) சர்வசன வாக்கெடுப்புக்காக வாக்குப் பெட்டிகளையும் ஏனைய ஆவணங்களையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல இராணுவம் மறுத்துவிட்டது. இதற்காக இராணுவத் தளபதியைப் பதவி நீக்கம் செய்த ஷெலாயா வேறு ஏற்பாட்டின் மூலம் வாக்குப் பெட்டிகளையும் ஏனைய ஆவணங்களையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைத்தார். பிரச்சினை
ஹிலாரி
உடனடியாகவே உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. இராணுவத் தளபதியைப் பதவி நீக்கம் செய்ததும் சர்வசன வாக்கெடுப்பும் சட்டவிரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஷெலாயா மதிக்கவில்லை. அரசியலமைப்புத் திருத்தத்துக்கான சர்வசன வாக்கெடுப்பை நடத்துவதில் ஷெலாயா தீவிரமாக இருந்தார்.
தற்போதைய அரசியலமைப்பு 1982ம் ஆண்டு இராணுவ ஆட்சியின் கீழ் நிறைவேற்றப்பட்டது. இராணுவத்துக்கும் மேட்டுக் குடியினருக்கும் சாதகமான முறையிலேயே இது தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து உச்ச நீதிமன்றம் இராணுவத்துக்கும் மேட்டுக்குடியினருக்கும் சார்பாகவே செயற்பட்டு வந்தது. சாதாரண மக்களின் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்வது ஷெலாயாவின் நோக்கம். பெரும்பான்மையான மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகுமென அவர் நம்பினார். ஆனால் இராணுவம் என்ன செய்யும் என்பது பற்றிச் சிந்திக்கவில்லை. சர்வசன வாக்கெடுப்பு ஆரம்பிப்பதற்குச் சில மணித்தியாலயங்களுக்கு முன் இராணுவம் அவரின் பதவியைப் பறித்தது.
யூலை 5ந் திகதி நாட்டுக்குத் திரும்புவதற்கான ஒரு முயற்சியை ஷெலாயா மேற்கொண்டார். ஆனால் அவர் பயணம் செய்த விமானம் தரையிறங்குவதை ஹொன்டுராஸ் விமானப் படை தடுத்ததால் அந்த விமானம் நிகரகுவாவுக்குத் திரும்பிச் சென்றது. அவரை வரவேற்பதற்கு விமான நிலையத்துக்கு வந்திருந்த மக்கள் இராணுவத்தினால் அடித்து விரட்டப்பட்டனர்.
ஹொன்டுராஸ் இராணுவம் அமெரிக்காவின் ‘செல்லப்பிள்ளை’ எனக் கூறலாம். இராணுவச் செலவினங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வருவதோடு அதிகாரிகளுக்குப் பயிற்சியும் அளிக்கின்றது. இந்த வருடம் ஹொன்டுராஸ¤க்கு அமெரிக்கா ஐந்து கோடி டொலர் உதவி வழங்கியது. ஹொன்டுராஸ் தலைநகரிலிருந்து நூறு கிலோ மீற்றர் தூரத்துக்குள் அமெரிக்காவின் இராணுவத் தளமொன்று இருக்கின்றது. ஹொன்டுராஸில் ஷெலாயாவைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்ரன் சர்வசன வாக்கெடுப்பு பற்றியும் வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவெஸ்ஸ¤டன் அவர் கொண்டிருக்கும் நட்பு பற்றியும் அவரை எச்சரித்ததாகச் சில ஊடகங்களில் தகவல் வெளி யாகியிருக்கின் றது.
மைக்கலெற்றி
இவை எல்லாவற்றை யும் ஒன்றுசேர்த் துப் பார்க்கும் போது ஹொன்டுராஸ் சதிப் புரட்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு இருந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால், ஹொன்டுராஸ் ஆட்சி மாற்றம் சட்டவிரோதமானது என்றும் இதை அங்கீகரித்தால் ஜனநாயகம் அர்த்தமற்றதாகிவிடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியிருக்கின்றார்.
ஒபாமா வெளியிட்ட கருத்து அமெரிக்காவின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடென்றால், இராஜாங்கத் திணைக்களம் அதை அறிவித்திருக்க வேண்டும். அப்படியான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. குறைந்த பட்சம் ஹொன்டுராஸ¤க்கான உதவிகளை நிறுத்துவதாகவாவது அறிவித்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. அமெரிக்கா வெளிப்படையாக என்ன சொன்னாலும் நடைமுறையில் ஹொன்டுராஸ் இராணுவத்துக்குச் சார்பாகச் செயற்படுகின்றது என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.
அமெரிக்க நாடுகளின் ஸ்தாபனம் (லி. தி. ஷி) ஹொன்டுராஸ் சதிப் புரட்சியை வன்மையாகக் கண்டித்திருப்பதோடு ஷெலாயாவை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்த இராணுவப் புரட்சியைக் கண்டித்திருக்கின்றன. உள்ளூரில் மக்களின் எதிர்ப்பும் பலத்து வருகின்றது. இதேநேரம் இராணுவத்தின் ஒரு பகுதியினர் புரட்சியாளருக்கு எதிராகக் கிளர்ந்தெழுவதற்கான சமிக்ஞைகள் தென்படுவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த நிலையில் ஷெலாயா ஏதேனுமொரு விதத்தில் நாட்டுக்குத் திரும்பினால் தங்களுக்கு ஆபத்து என்று இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர். ஷெலாயா நாட்டுக்குத் திரும்புவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவுவது போல உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பொன்று அண்மையில் வெளியாகியிருக்கின்றது. ஷெலாயா நாட்டுக்குத் திரும்பினால் அரசியலமைப்பை மீறியதாக அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும், நீதிமன்றம் பொது மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே அவர் நாட்டுக்குத் திரும்பலாம் என்றும் உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது.
பெரும்பாலான மக்கள் ஷெலாயாவுக்கு ஆதரவாக அணி திரண்டிருப்பதையும் இராணுவத்தில் ஒரு பகுதியினர் மத்தியில் தோன்றியுள்ள மறுசிந்தனையையும் உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பையும் நாட்டுக்குத் திரும்பி மக்களை அணிதிரட்டிப் பேராட வேண்டும் என்பதில் ஷெலாயா உறுதியாக இருப்பதையும் கவனத்தில் எடுத்துப் பார்க்கையில், ஹொன்டுராஸ் சிவில் யுத்தத்தை நோக்கி நகர்கின்றதா என்ற கேள்வியே எழுகின்றது.


0 commentaires :

Post a Comment