ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் பெறுவதற்குத் துருக்கி 1963ம் ஆண்டு விண்ணப்பித்த போதிலும் இன்றுவரை அதற்கு அங்கத்துவம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் துருக்கியின் விண்ணப்பம் பரிசீலனைக்கு வந்த போதெல்லாம் ஐரோப்பிய நாடுகளைத் திருப்திப்படுத்தக் கூடிய அளவுக்குத் துருக்கியில் சீர்த்திருத்தம் இடம்பெறவில்லை என்று சொல்லப்பட்டு வருகின்றது.
துருக்கி ஒரு முஸ்லிம் நாடாக உள்ள போதிலும் ஐரோப்பிய யூனியனில் சேர வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய சார்புச் சீர்திருத்தங்களைச் செய்திருக்கின்றது. என்றாலும் ஐரோப்பிய யூனியனுக்குத் திருப்தி ஏற்படவில்லை. இவ்விடயத்தில் பிரான்ஸ் தீவிரமான நிலைப்பாட்டை எடுக்கின்றது. அண்மைக் காலமாகத் துருக்கியின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரான்ஸ் அதற்கு எதிராகத் தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றது.
முஸ்லிம் உலகுக்கும் மேற்கு நாடுகளுக்குமிடையே யுத்தம் நடைபெறுகின்றது என்று அல்காய்தா கூறுகின்றது. முன்னர் தீவிரமான இஸ்லாமிய செயற்பாட்டாளர்களாக இருந்தவர்களே இப்போது துருக்கியின் ஆட்சியாளர்களாக உள்ளனர். துருக்கியின் விண்ணப்பத்தைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருவது அந்நாடு சீர்திருத்தத்தைக் கைவிட்டுத் தீவிர இஸ்லாமிய நிலைப்பாட்டை எடுப்பதற்கு வழிவகுத்துவிடும் என்பது பற்றி ஐரோப்பிய யூனியன் நாடுகள் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
ஆயுத விற்பனை குறையவில்லை
அண்மையில் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலைக்கு மத்தியிலும் உலகில் ஆயுத விற்பனை குறையவில்லை. உலகின் மொத்த ஆயுத விற்பனையில் கடந்த வருடம் 4 வீத அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. அமெரிக்காவும் சீனாவும் இதில் முன்னணி வகிக்கின்றன. அமெரிக்கா 68700 கோடி டொலருக்கும் சீனா 8500 கோடி டொலருக்கும் ஆயுதங்கள் விற்பனை செய்திருக்கின்றன.
இதேநேரம் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத விற் பனையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. ஆயுத விற்பனையில் வீழ்ச்சி ஒருபுறமிருக்க, பாதுகாப்புச் செலவினங்களையும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் வெகுவாகக் குறைத்திருக்கின்றன.
ரஷ்யா அதன் பாதுகாப்புச் செலவினத்தை 5860 கோடி டொலராக அதிகரித்திருக்கின்றது. ரஷ்யாவில் வருடாவருடம் பாதுகாப்புச் செலவினம் அதிகரித்து வருகின்றது.
0 commentaires :
Post a Comment