இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் டாக்டர் பீற்றர் ஹெய்ஸ் நேற்று புதன்கிழமை மாலை இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு திருகோணமலை வந்தார். திருமலை வந்த அவர் முதலில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்தித்தார். முதலமைச்சர் பிரிட்டிஷ் தூதுவரை வரவேற்றார். பின்னர் முதலமைச்சர் அலுவலகத்தில் பிரிட்டிஷ் தூதர் முதலமைச்சருடன் கலந்துரையாடினார். சந்திப்பில் முதலமைச்சருடன் அவரின் சிரேஷ்ட ஆலோசகர் டாக்டர் விக்னேஸ்வரன், முதலமைச்சரின் செயலாளர் ஆஸாத் மௌலானாவும் கலந்து கொண்டனர்.
சுமார் 45 நிமிடங்கள்வரை நீடித்த பேச்சுகளின் பின்னர் முதலமைச்சர் சந்திரகாந்தனும் பிரிட்டிஷ் தூதுவர் டாக்டர் பீற்றர் ஹெய்ஸும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். பிரிட்டிஷ் தூதருடனான பேச்சுகள் பெறுமதியாகவும் கனதியாகவும் அமைந்தன. பிரிட்டிஷ் தூதுவர் முன்னரும் மூன்றுதடவைகள் திருகோணமலைக்கு வந்துள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்தி குறித்து பிரிட்டன் கொண்டுள்ள அக்கறையை பிரிட்டிஷ் தூதுவர் தமது சந்திப்பின் போது வெளிப்படுத்தினார். எதிர்காலத்தில் பிரிட்டன் வழங்கவிருக்கும் உதவிகள் பற்றியும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது என்று முதலமைச்சர் சந்திரகாந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருகோணமலைக்கு நான்காவது தடவையாக இன்றுவந்துள்ளேன். கிழக்கு மாகாணம் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி முதலமைச்சருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திக்கான வாய்ப்புப்பற்றியும் பேசப்பட்டது. பொருளாதாரம், விவசாயம், பண்ணை அபிவிருத்தி ஆகியன தொடர்பான அபிவிருத்திகள் குறித்து அறிந்து கொண்டேன் என்று பிரிட்டிஷ் தூதுவர் டாக்டர் பீற்றர் ஹெய்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலே திருகோணமலை அழகான இயற்கை வளம் பொருந்திய பிரதேசம். பிரிட்டிஷ் பிரஜைகள் இலங்கைக்கு உல்லாசப்பயணம் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இது உல்லாசப் பயணத்துறையின் அபிவிருத்திக்கு உதவும். பிரிட்டிஷ் பிரஜைகள் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்து செலவு செய்யும் வாய்ப்பு இதனால் ஏற்படும் என்றும் பிரிட்டிஷ் தூதுவர் கூறினார்.
முதலமைச்சருடனான சந்திப்பின் பின்னர் பிரிட்டிஷ் தூதுவர் உப்புவெளியிலுள்ள இரண்டாம் உலக மகாயுத்தத்தில் உயிரிழந்த பிரிட்டிஷ் படையினர் அடக்கம் செய்யப்பட்ட மயானத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். திருமலை விஜயத்தின்போது திருமலை மாவட்ட வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் ஆகியோரையும் பிரிட்டிஷ் தூதர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
0 commentaires :
Post a Comment