13ஆவது திருத்தச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்கூட எங்களது கிழக்கு மாகாண சபை ஊடாகப் பயன்படுத்த முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எமது அனைத்து விடயங்களிலும் ஆளுநரே தலையிடுகிறார். ஏனைய மாகாணங்களின் ஆளுநர்களுடன் ஒப்பிடும்போது கிழக்கு மாகாண ஆளுநரின் தலையீடுகள் அதிகமாக இருக்கின்றன என கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வீரகேசரி வார வெளியீட்டுக்கு அளித்த விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார். ஏனைய மாகாணங்களின் ஆளுநர்களுடன் ஒப்பிடும்போது கிழக்கு மாகாண ஆளுநரின் தலையீடுகள் அதிகமாக இருக்கின்றன. இன்றும் ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடைகளை ஏற்படுத்துகிறார். உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றார். செயலாளர்களை அழைத்துப் பேசுகிறார்.
கூட்டம் நடத்துகிறார். தானே நிதி விவகாரங்களுக்கு பொறுப்பு என்கிறார். தானே நியமனங்களை வழங்க வேண்டுமென்கிறார். சாதாரணமாக ஒரு சுகாதாரத் தொழிலாளியை நியமிக்கும் அதிகாரம் கூட தனக்குரியதே என்கிறார். ஆகவே 13ஆவது திருத்தச் சட்டமூலத்தின் கீழ் எமக்குக் கிடைத்துள்ள குறைந்த அதிகாரங்களைக் கூட எங்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வீரகேசரி வார வெளியீட்டுக்கு அளித்த விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் அளித்த செவ்வி விவரம் பின்வருமாறு:
கேள்வி: கிழக்கு மாகாண சபைக்கான அதிகாரங்கள் இந்த மாகாணத்துக்கான அபி விருத்தி தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இந்தச் சபைக்கான அதிகா ரங்கள் முழுமையாகக் கிடைக்காத ஒரு நிலை உள்ளதாக முதலமைச்சரும் நீங்களும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளீர்கள். இது குறித்து உங்கள் கருத்தென்ன?
பதில்: உண்மையிலேயே கிழக்கு மாகாண சபை அதிகாரமுள்ள ஒரு சபையாக செயற்பட வேண்டும். மாகாண சபைகள் தங்களது அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தி அதனை நடமுறைப்படுத்தும் போதுதான் சிறப்பான சேவைகளைச் செய்ய முடியும். கிழக்கு மாகாண மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தச்சபை இன்று என்னைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தத்தில் இருக்கின்றவற்றைக்கூட நடைமுறைப்படுத்த முடியாத ஒரு நிலைக்கு முகங்கொடுத்துள்ளது என்றே கூறுவேன். இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்கூட எங்களது கிழக்கு மாகாண சபை ஊடாகப் பயன்படுத்த முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எமது அனைத்து விடயங்களிலும் ஆளுநரே தலையிடுகிறார். ஏனைய மாகாணங்களின் ஆளுநர்களுடன் ஒப்பிடும்போது கிழக்கு மாகாண ஆளுநரின் தலையீடுகள் அதிகமாக இருக்கின்றன.கேள்வி: மத்திய அரசாங்கம் சொல்வதைத் தானே அவரால் செய்ய முடியும்?
பதில்: ஆம் இருக்கக்கூடும். எங்களுக்கு அண்மித்ததாகவுள்ள வட மத்திய மாகாண முதலமைச்சருக்கு இருக்கக்கூடிய அரசியல் அதிகாரங்களுடன் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவான அதிகாரங்களையே கிழக்கு மாகாண முதலமைச்சர் கொண்டுள்ளார். ஆனால் இரு முதலமைச்சர்களுக்குமான அதிகாரங்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமானதே. இந்தநிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது குறைவான அதிகாரத்துக்குட்பட்ட சிறிய விடயங்களை நிறைவேற்றுவதற்குக்கூட ஆளுநர் தடை விதிக்கிறார். அல்லது அதன் நிறைவேற்றத்துக்கு அவர் உத்தரவிட வேண்டியுள்ளது. கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் உள்ளன. அதிகாரத்தைப் பெற வேண்டியது முதலாவது விடயம். ஏற்கெனவே 13 ஆவது திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் எமது மாகாண சபைக்கு முழுமையாக வழங்கப்ப டாத ஒரு நிலையில் அதனைப் பெற வேண்டிய ஒரு நிலையும் ஏற்பட்டுள்ளதென்பதே இதன் கருத்தாகும்.
அடுத்ததாக வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவதென்ற விட யம். 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையாவது பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தால் கூட இன்றைய பிரச்சினைகளுக்கு ஓரளவு முகங் கொடுத்துக் கொண்டு சுயமாக கிழக்கு மாகாண சபையை இயங்கச் செய்யலாம். ஏனைய மாகாண சபை முதலமைச்சர்களுடன் நாம் பலமுறை பேசியுள்ளோம். அவர்கள் வெளியிடும் கருத்துகளிலிருந்து எமக்கு சில விடயங்கள் தெரியவந்தன. நாங்கள் எதிர் நோக்கியுள்ள எந்தப் பிரச்சினையையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை என்ற கசப்பான உண்மையையும் இங்கு கூற வேண்டியுள்ளது. அந்த மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையாவது எங்களது மாகாண சபைக்கும் வழங்க வேண்டும். அத்துடன் எங்களது செயற்பாடுகளுக்கு ஆளுநரே பெருந்தடையாக உள்ளார். ஆளுநர் ஆட்சியிலிருக்கும் ஒரு மாகாண சபைக்கு முதலமைச்சர் வந்து விட்டால் ஆளுநருக்கு பெரும்பாலான விடயங்களில் அதிகாரம் இல்லாமல் போகிறது.
இது உண்மையான நிலை. ஆனால் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்று முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையும் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் ஆளுநரே இன்றும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடைகளை ஏற்படுத்துகிறார். உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றார். செயலாளர்களை அழைத்துப் பேசுகிறார். கூட்டம் நடத்துகிறார். தானே நிதி விவகாரங்களுக்கு பொறுப்பு என்கிறார். தானேநியமனங்களை வழங்க வேண்டுமென்கிறார். சாதாரணமாக ஒரு சுகாதாரத் தொழிலாளியை நியமிக்கும் அதிகாரம்கூட தனக்குரியதே என்கிறார். ஆகவே 13ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் கீழ் எமக்குக் கிடைத்துள்ள குறைந்த அதிகாரங்களைக்கூட எங்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கேள்வி: ஆளுநரின் இந்தத் தலையீடு தொடர்பில் ஜனாதிபதியிடம் கூறலாம் தானே?
பதில்: ஆம் ஜனாதிபதியிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ஷவிடமும் கூறியுள்ளோம். நல்ல முடிவு கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளது. முதலமைச்சர்கள் மகாநாட்டிலும் இந்தப் பிரச்சினை குறித்துப் பிரஸ்தாபித்துள்ளோம்.
கேள்வி: கிழக்கு மாகாண சபைக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்பதும் வழங்கப்படக் கூடாதென்பதுமான வாதப் பிரதிவாதங்கள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு?
பதில்: கிழக்கு மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் என்பது தேவையே இல்லை. பொலிஸ் அதிகாரத்துக்கும் அபிவிருத்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த அதிகாரத்தை நாம் கேட்கும் போது சில வேளைகளில் அரசாங்கம் எம்மைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கவும் கூடும். அது சில வேளைகளில் முரண்பாட்டுக்கும் வழிவகுக்கலாம். காணி அதிகாரம் எம்மிடம்தான் உள்ளது. ஒரு மாகாணத்தின் காணி அதிகாரம் அந்த மாகாணத்தை ஆளும் மாகாண சபைக்கே உரியதென்று நீதி மன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்தும் போதே பிரச்சினைகளும் தடைகளும் ஏற்படுகின்றன.
கேள்வி: கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்ட பின்னர் அதன் ஊடாக மேற்கொள் ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் நீங்கள் திருப்தியடைந்துள்ளீர்களா?
பதில்: ஆம். நிச்சயமாக மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகின்றோம். மூடப்பட்டிருந்த பாடசாலைகள், அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. பல வீதிகள் மக்கள் பயன்பாட் டுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கிழக்கின் மீன்பிடித் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. பல சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. காணாமல் போதல், கடத்தல், கப்பம் பெறல், கொலைச் சம்பவங்கள் போன்றன இடம் பெறாத வகையில் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்பட்டுள்ளன.
கேள்வி: கிழக்கு மாகாண சபையைத் திறம்படச் செயற்படுத்தும் ஆற்றல் இப்போதைய முதலமைச்சருக்கு இல்லை யென்று ஒரு தரப்பார் தெரிவிக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் என்ன கூறுகிறீர்கள்?
பதில்: கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஓர் இயக்கத்தின் போராளியாக இருந்தவர். அவருக்குப் போராட்டம், பயிற்சிகள் தொடர் பான அறிவு. அவை தொடர்புடையதான தலைமைத்துவப் பண்புகள் அவரிடம் உள்ளன. நிர்வாக ரீதியாக வழிகாட்டக் கூடிய ஒரு விடயத்தை நாம் அவரிடமிருந்து உடனடியாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் சுமார் 20 வருட காலங்கள் அரசியலில் ஈடுபட்டவன். பல பொறுப்புகளை வகித்தவன்.
முதலமைச்சரிடமும் என்னிடமுள்ள அனுபவங்கள் வேறு வேறானவை. இந்த நிலையில் அவருக்கு வழிகாட்டியாக இருந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. முதலமைச்சர் பிள்ளையான் மிகவும் நல்லவர். அமைச்சர்களின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தல்களில் எவ்வித தலையீடுகளும் செய்யமாட்டார்.
பூரண ஒத்துழைப்பினையே வழங்கி வருகிறார். ஆனால் சிலர் உள்ளனர். தாங்கள் செய்வதும் இல்லை. செய்ய விரும்புவோரை விடுவதும் இல்லை. இவ்வாறான தன்மை முதலமைச்சரிடம் இல்லை. அமைச்சர் கருணா அம்மானுக்கும் முதலமைச்சருக்குமிடையில் சில கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் அபி விருத்தி என்று வரும் போது அமைச்சர் கருணா அம்மான் பூரண ஒத்துழைப்பினை வழங்குகிறார்.
கேள்வி: 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமான மாகாண சபையின் அமைச்சராக நீங்கள் உள்ளீர்கள். தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை முழுமையாக நிவர்த்தி செய்யக்கூடியதாக இந்த 13ஆவது திருத்தச் சட்டமூலமான மாகாண சபை ஆட்சி முறை உள்ளதா என்பதனை அனுபவத்தின் ஊடாக நீங்கள் கூறுவதாயின்….?
பதில்: தமிழ் மக்களின் அபிலாஷைகள் முழுமையாக நிறைவேறுமென எதிர்பார்க்க முடியாது. ஆனால் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டால் தமிழ் பேசும் மக்களின் ஆகக் குறைந்தது எனக் கருதப்படும் அபிலாஷைகளையாவது நிறைவேற்றலாமென நினைக்கிறேன். ஆனால் எதற்கும் ஆளுநரின் தலையீடு இருக்கக்கூடாது.
கேள்வி: முஸ்லிம் பிரதேசங்களின் ஆயுதக்கையளிப்பு தொடர்பாகவே இன்று பல தரப்பிலும் பேசப்படுகிறது. கடந்த வாரம் காத்தான்குடியில் இடம்பெற்ற ஆயுதக் கையளிப்பு குறித்து கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எட்வின் குணதிலக்க திருப்தியற்ற நிலையில் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த ஆயுதக் கையளிப்பு பூரணமானதல்லவென்றும் தேடிப் பிடிக்கும் வேலையைத் தொடர வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாரே? அத்துடன் “சட்டவிரோத ஆயுதங்கள்’ என இவை அழைக்கப்படுகின்றனவே?பதில்: 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலை இடம்பெறும் வரைக்கும் முஸ்லிம்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான எந்தத் தேவையும் இருக்கவில்லை. ஆனால் இந்தத் தினத்தின் பின்னரே இதற்கான தேவை எழுந்தது. இந்தத் துக்ககரமான சம்பவம் இடம்பெற்றவுடன் அன்று ஜனாதிபதியாகவிருந்த ஆர். பிரேமதாசாவை சந்தித்து எனக்கு ஆயுதங்கள் வழங்கும்படி கேட்டேன். அதற்கு இணக்கம் தெரிவித்து சுமார் 300 துப்பாக்கிகளைத் தந்தார்.
303 ரக துப்பாக்கிகளையே அவர் தந்தார். உத்தியோகபூர்வமாக இந்த ஆயுதங்கள் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பொலிஸ் நிலையங்கள் ஊடாக மக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டபோதே ஆயுதங்கள் ஏந்த வேண்டிய நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டமை என்பது இரகசியமான ஒரு விடயமல்ல. இது ஒரு பகிரங்கமான விடயம்.
ஆனால் இந்த ஆயுதங்கள் எந்தவிதமான தவறான நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படவில்லை. புலிகளிடமிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காகவே அவர்கள் ஆயுதம் ஏந்தினர். உதாரணமாக காத்தான்குடியில் புலிகள் தாக்குதல் நடத்துவார்களாயின் அதனைத் தடுப்பதற்கு மட்டக்களப்பிலிருந்தே பொலிஸார் வரவேண்டிய நிலை அன்றிலிருந்தது. அவ்வாறு வரும்போது கூடப் பொலிஸாரையோ இராணுவத்தினரையோ தடுக்கவும் முடியும். ஆகவே உடனடியாகப் பாதுகாக்க வேண்டுமென்றால் ஆயுதமே அன்றைய தேவையாக இருந்தது. இவை சட்டரீதியாக வழங்கப்பட்ட ஆயுதங்களே.
ஆனால் இன்றைய சமாதான சூழ்நிலையில் முஸ்லிம்கள் தற்பாதுகாப்புக்கு ஆயுதங்களை ஏந்த வேண்டிய தேவையில்லாமல் போகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சில கருத்துகளை முன்வைத்தனர். ஆயுதங்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் சமூகங்களுக்கிடையே அவை அச்ச உணர்வை உண்டு பண்ணுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். எதிர்கால சந்ததியினர் கூட இதனால் பாதிக்கப்படலாமெனவும் பாதுகாப்புத் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டது. ஆகவே அனைத்து சமூகங்களிடமிருந்தும் ஆயுதங்களைக் களைய வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர். இதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்த அடிப்படையிலேயே இந்த ஆயுதக் கையளிப்பு இடம்பெறுகிறது
ஆகவே இந்த ஆயுத விவகாரத்தில் என்னைச் சம்பந்தப்படுத்துவதென்பது தவறானது. ஆயுத ஒப்படைப்புக்கான ஒரு ஏற்பாட்டாளனாகவும் மத்தியஸ்தராகவுமே நான் செயற்பட்டேன். முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை மீண்டும் திருப்பிக் கொடுக்கும்போது அது சரியான முறையில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சென்றடைய வேண்டுமென்பதில் நான் அக்கறையுடன் செயற்பட்டேன் இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment