தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்தியக் கிளைகள் ஒன்று கூடி எதிர்வரும் வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரிப்பதென ஏகமனதாக முடிவு செய்துள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வவுனியா நகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈ.பி.டி.பியின் ஆறு வேட்பாளர்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரிப்பதென முடிவு செய்துள்ளதாக அதன் நிர்வாகச் செயலாளர் ஐp.வி.சகாதேவன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து அம்மக்களை விடுவிக்கும் தூர நோக்குடனும் நிகழ்கால அபிவிருத்தித் திட்டங்களை கருத்தில் கொண்டும் அரசுடன் இணக்கப்பாட்டுடன் பேச்சுவார்தைகளை மேற்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் இந்த நகரசபைத் தேர்தலில் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடும் ஈ.பி.டி.பி.யை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் சகாதேவன் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அரசுக்கெதிரான வெறுப்புணர்வை மேலும் தூண்டிவிட்டு அவர்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று அழிவு அரசியலை மேற்கொள்ளாது மக்களுக்கு வளமூட்டும் எதிர்காலத் திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் பொருட்டே ஈ.பி.டி.பி.க்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளில் ஈ.பி.டி.பியின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகளிற்கு வழியேற்படுத்தும் பொருட்டும், நிவாரண முகாம்களிலுள்ள மக்களின் துயர் துடைப்புப் பணிகளை மேலும் முன்னெடுப்பதற்காகவும்; வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈ.பி.டி.பியின் ஆறு வேட்பாளர்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு வழங்குவதாகவும் அதன் நிர்வாகச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை வவுனியா நகர சபையை இலங்கையிலேயே அழகான மாநகர சபையாக மாற்றி அழகுபடுத்தித் தரும் பொறுப்பினை நிறைவேற்றித் தருமாறு ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஆறு வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் சகாதேவன் ஈ.பி.டி.பி வேட்பாளர்களின் வெற்றிக்காக அயராது உழைக்குமாறும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 commentaires :
Post a Comment