யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் நாளை (21ம் திகதி) முதல் ஆரம்பமா கிறது.
அனைத்து வாக்காளர்களுக்குமான வாக்காளர் அட்டைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் விநியோக நடவ¨க்கைகளுக்காக இவை நாளை (21) தபால் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அந்தந்த மாவட்டங்களின் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் கூறினர்.
தேர்தல்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் அமைதி யாகவும் மும்முரமாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். யாழ். மாநகரசபை தேர்தலில் 70 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவிருப்பதாக யாழ்.
உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துறை குகநாதன் தெரிவித்தார். தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் அதற்கான கடமைகளை முன்னெடுப்பதற்கென 1200 அரச அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் விரைவில் வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து வெவ்வேறு சூழ்நிலைகள் காரணமாக இடம்பெயர்ந்து புத்தளம், கம்பஹா, கொழும்பு, அநுராதபுரம் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தங்கியிருக்கும் 6004 பேருக்கும் நாளை முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இவர்களுக்காக தேர்தல் திணைக்களம் 16 வாக்குச்சாவடிகளை பிரத்தியேகமாக அழைத்துள்ளது என சுட்டிக்காட்டிய யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர், நாட்டின் நிலைமை சமுகமடைந்திருப்பதால் இடம்பெயர்ந்துள்ளோர் எதிர்காலங்களில் தமது வாக்காளர் பதிவை மாற்றியமைக்க வேண்டும் அல்லது வாக்களிக்க யாழ்ப்பாணத்துக்கு நேரடியாக வருகை தர வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் யாழ். மாநகரசபை தேர்தல் கடமையில் ஈடுபடவிருக்கும் எழுதுவிளைஞர்களுக்கு நாளையும் (21) கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரிகளுக்கு எதிர்வரும் 23 ஆம் 24 ஆம் திகதிகளிலும் விசேட பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளன.
வவுனியாவில் இம்முறை 18 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதுடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்காக 500 அரசாங்க அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பதாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எ. எஸ். கருணாநிதி கூறினார்.
பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வாக்குப்பெட்டி தயாரிப்பு மற்றும் வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான காகிதாதிகள் என்பவற்றை தயார்படுத்துவதில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் கடமையில் ஈடுபடும் பல்வேறு தரப்பினருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கனிஷ்ட தலைமை தாங்கும் அதிகாரிகளுக்கு எதிர்வரும் வாரங்களில் பயிற்சிகள் நடத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment