வடபகுதி மீள்கட்டுமானப் பணிகளுக்காக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிகளுக்கு ஒத்துழைப்பதற்காக சகல கட்சிகளையும் கொண்ட சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டியிருப்பதாகவும் ஜனாதிபதி விளக்கியுள்ளார். எகிப்தின் ஷான் அல் ஷேய்க் நகரில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா.
செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் நடந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ப யங்கரவாதிகளிடமிருந்து மக்களை மீட்டு எட்டு மாதங்களே கடந்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, அவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உயரிய மட்டத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கு மிகக் குறுகிய காலத்திற்குள் புனர்வாழ்வளித்து அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணக் கிராமங்களின் தற்போதைய நிலவரம் குறித்துக் கேட்டறிந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முன், புலிகளுடனான இறுதிக்கட்ட மோதலின் போது தாம் இலங்கை வருவதற்கும், நலன்புரித் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பளித்தமைக்காக இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.
இதேபோல் மக்களை உரிய முறையில் மீளக்குடியமர்த்துவதற்கு முன்னதாக, கண்ணி வெடிகளை அகற்றுதல் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகைள நிவர்த்திப்பதற்கு இதுவரை ஐ.நா. வழங்கி ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்திலும் நெருக்கடியான காலகட்டங்களில் தொடர்ந்து ஐ.நா. சபை இலங்கைக்கு உதவுமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளியுறவுச் செயலாளர் பாலித கொஹன, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் சஜித் வாஸ் குணவர்தன ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment