7/15/2009

அணிசேரா உச்சி மாநாடு இன்று ஆரம்பம்;



அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு இன்று எகிப்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று எகிப்துக்குப் பயணமானதுடன் இன்று மாநாட்டில் சிறப்புரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.
நேற்றுக்காலை 9.30 மணியளவில் ஸ்ரீலங்கா விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் எகிப்தின் கைரோ விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார செயலாளர் பாலித கொஹன்னே, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரும் எகிப்துக்கான விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதுடன் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
118 நாடுகள் பங்கேற்கும் அணிசேரா நாடுகளின் 15 வது உச்சிமாநாடு 11ம் திகதி முதல் 15ம் திகதி வரை எகிப்தின் ஷாம் அல்ஷேக் நகரில் நடை பெறுகிறது. 12ம் திகதி இடம்பெற்ற வெளிவிவகார அமைச் சர்களுக்கான அமர்வில் இலங்கையின் சார்பில் வெளிவிவ கார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கலந்து கொண்டார்.
இன்று நடைபெறும் அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
“அபிவிருத்திக்கான சமாதானமும் சர்வதேச ஒருமைப்பாடும்” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் எதிர்வரும் மூன்று வருட காலங்களுக்குள் அங்கத்துவ நாடுகள் எதிர்பார்க்கும் நோக்கங்கள் சம்பந்தமாகவும் அந்த இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளன.
அத்துடன் 2006ம் ஆண்டு கியூபாவின் ஹவானா நகரில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் 14 வது உச்சிமாநாட்டில் மேற்கொண்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளன. நேற்று முன்தினம் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாட்டில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம வளர்ந்து வரும் மனித சமூகத்திற்குள் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.
லங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விளக்கிய அவர், இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய மாற்றங்கள் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள பாரிய வெற்றிகளுக்குக் காரணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
1955ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய - ஆபிரிக்க மாநாட்டின் போது அணிசேரா நாடுகளின் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இவ்வமைப்பில் 118 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் 17 கண்காணிப்பு நாடுகளும் இடம்பெறுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளில் மூன்றில் இரண்டு நாடுகள் அணிசேரா நாடுகள் அமைப்பில் இடம்பெறுகின்றன. உலக சனத்தொகையில் ஐம்பது வீதத்தினர் இதில் உள்வாங்கப்படுகின்றனர்.
இதில் பெரும்பாலானவை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment