7/06/2009

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசினால் தமிழ் மக்களுக்கு காத்திரமான அரசியல் தீர்வினை வழங்க முடியும் என ஐரோப்பிய விஜயத்தின் போது கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன


ஐரோப்பாவின் சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக பிரான்ஸின் தலைநகர் பரீசில் சில நாட்கள் தங்கியிருந்த முதல்வர், இலங்கையின் சமகால அரசியல் தொடர்பிலும், எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் புலம்பெயர் வாழ் புத்தி ஜீவிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், கிழக்கின் நலன்விரும்பிகள் ஆகியோருடன் முக்கிய சில கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் வருகையை பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐரோப்பிய புலம்பெயர்வாழ் சமூகம் முதல்வரை மகிழ்ச்சியுடன் வரவேற்றதுடன், பல முக்கியமான சந்திப்புக்கள் கலந்துரையாடல்களையும் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஜேர்மனி, இங்கிலாந்து, சுவிஸ்லாந்து, நோர்வே போன்ற நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த புத்தி ஜீவிகளும் அரசியல் பிரமுகர்களும் கிழக்கு மாகாண அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் முக்கியமான கலந்துரையாடல்களை முதல்வருடன் நடாத்தினார்கள். இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் கிழக்கு மாகாண நிலவரம் தொடர்பாகவும் நாட்டின் இன்றைய சூழ்நிலைகள் தொடர்பாகவும் தெளிவான விளக்கங்களை அளித்ததுடன் இலங்கையில் இன்று பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிவுற்றிருக்கும் இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசினால் தமிழ் மக்களுக்கு காத்திரமான அரசியல் தீர்வு வெகு விரைவில் வழங்கப்பட்டுவிடும் என தாம் நம்புவதாகவும், அதற்காக அனைத்து மக்கள் சக்திகளும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியம் எனவும் வலியுறுத்தினார். குறிப்பாக இச்சந்திப்புக்களின்போது தலித்திய முன்னணி, மாற்று தமிழ் கட்சி உறுப்பினர்களும் மற்றும் கிழக்கு முதல்வரின் இணைப்பு செயலாளர் ஆஷாத் மௌலானா அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


0 commentaires :

Post a Comment