அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்துக்கான சர்வகட்சிக்குழு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முதல் முறையாகக் கூடியது. ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல கட்சிகளின் பிரதி நிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
இங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும் போது கூறியதாவது:- ஒருவருக்கொருவர் வேற்றுமை பாராட்டும் காலம் இதுவல்ல. சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலமாகும் இனங்களுக்கிடையில் நெருக்கடி மற்றும் விரோதங்களை உண்டு பண்ணும் வேற்றுமை பற்றி ஆராய்வதைவிடுத்து, சகலரும் நாட்டை நேசிக்கக் கூடிய குழுவாகச் செயற்படும் சூழலை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியமாகும்.
அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையினால் பயங்கரவாதத்தினால் சகல உரிமைகளையும் இழந்திருந்த அப்பாவி மக்களை மீட்க முடிந்துள்ளது. அம் மக்களது சொந்த மனங்களை குணப்படுத்தும் மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய காலம் இப்போது உருவாகியுள்ளது. அபிவிருத்தியில்லாமல் நல்லிணக்கமில்லை என்பதை நம்புபவன் நான். இந்த வகையில் கடந்த கால கசப்புணர்வுகளைக் களைந்து நல்லுறவு, சமத்துவமான எதிர்காலத்தை உரிமையாக்கிக் கொள்வதற்காக சகலரும் செயற் பட வேண்டியுள்ளது.
பயங்கரவாதத்தினால் கடந்த காலங்களில் தமது அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயகத்தை இழந்த மக்கள் நம் நாட்டில் இருந்துள்ளனர் என்பதை நான்அறிவேன். மனிதாபிமான நடவடிக்கையினால் அவர்களை நாம் மீட்டுள்ளோம். உலகிலேயே பெருமளவு பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டோம். அம் மக்களின் சொந்த மனங்களை தேற்றுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். அது ஒரு அரசாங்கம் அல்லது ஒரு கட்சியின் பொறுப்பு மட்டுமல்ல.
அதனால் நாம் தற்போது எம் மத்தியில் நிலவும் வேற்றுமைகளை ஆராய்வதை விடுத்து நம் மத்தியிலுள்ள சமத்துவம் எதுவென ஆராய வேண்டும். அதற்கிணங்க ஒரு வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது.
வடக்கில் நலன்புரி முகாம்களில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் நலன் பற்றியும் அவர்களை மீளக் குடியமர்த்துவது பற்றியும் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டி யுள்ளது. இவ்விடயத்தில் கட்சிகள் தத்தமது நிலைப்பாட்டைத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு இந்த மாநாட்டைக் கூட்டுவதற்கு வழங்கிய ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
நான் முன்னரே தெரிவித்தது போன்று வடக்கு மக்களை மீளக் குடியமர்த்துவதும் அவர்களின் மனதை மகிழ்ச்சிப்படுத்துவது அவசியம். அதற்கு விரைவான அபிவிருத்தி அவசியம். நாம் தற்போது ஆரம்பித்த இந்த நடவடிக்கையை மிக ஆக்கபூர்வமாக முன்னெடுப்பது மிகவும் முக்கியமாகும்.
இப்போது மீள் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 651 குடும்பங்களைச் சேர்ந்த 2409 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுவிட்டனர். நாம் மிதிவெடிகளை அகற்றும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். மக்களை மீளக் குடியமர்த்த முன்னர் நாம் மிதிவெடிகளற்ற பிரதேசத்தை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
எவரையும் முகாம்களில் தங்கவைக்கும் அவசியம் எமக்கில்லை. அவர்களை மிக விரைவாக அவர்களின் பிரதேசங்களில் குடியமர்த்துவதே எமது நோக்கம். மிதிவெடி அகற்றப்பட்டதும் எமது முதல் நடவடிக்கையும் அதுவே.
அதேபோன்று அம்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதும் எமது பொறுப்பாகும். அதற்காக 180 நாள் வேலைத் திட்டத்தை நாம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.
அதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி அதன் குறைநிறைகளை ஆராய்ந்து இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது எனது நம்பிக்கை.
இனவாத அரசியல் கட்சிகள் எம்மத்தியில் இருகின்றன என நான் எண்ணவில்லை. இனவாதம் எப்போதோ கைவிடப்பட்டுவிட்டது. இந்நாட்டிலிருந்து இன வாதத்தை ஒழித்து நாட்டை நேசிக்கும் மக்களை கட்டியெழுப்ப வேண்டியதும் அனைவரதும் பொறுப்பாகும். குறிப்பாக வடக்கின் அபிவிருத்தி குறித்து ஆராய நாம் விரைவில் கூட வேண்டியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் வெற்றிகரமாக வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்படுவோமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்
0 commentaires :
Post a Comment