7/14/2009

சுனாமியால் இடம்பெயர்ந்த 470 கடற்றொழிலாளர்களுக்குஒரு வருடத்துக்குள் 23 கோடி ரூபா செலவில் வீடுகள்

சுனாமி அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மீனவர் குடும்பங்களுக்குத் தேவையான வீடமைப்பு வசதிகளைச் செய்து கொடுக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களைப் போலவே அம்பாறை மாவட்ட கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிலும் நடைமுறைப்படுத்தி வரும் வீடமைப்புத் திட்டங்கள் வெற்றிகரமான பெறுபேறுகளைக் காட்டியுள்ளன.
விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் ‘இபாட்’ நிறுவனத்தின் உதவியுடன் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் வழிகாட்டுதலுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இந்த வீடமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தை நடைமுறைக்கிட்டுள்ளது.

சுனாமியால் இடம்பெயர்ந்துள்ள 470 குடும்பங்களுக்கு இத்திட்டத்தால் தேவையான சகல வீடுகளையும் நிர்மாணித்து ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்ய தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்த சகல வீடுகளையும் நிர்மாணிக்க செலவு செய்துள்ள மொத்த தொகை 23 கோடி ரூபாவாகும்.
(230 மில்லியன் ரூபா). இத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 210 அலகுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இதற்குச் செலவு செய்துள்ள தொகை 105 மில்லியன் ரூபாவாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 160 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக செலவு செய்யப்பட்டுள்ள தொகை 80 மில்லியன் ரூபாவாகும். அம்பாறை மாவட்டத்தில் கல்முனைப் பிரதேசத்தில் 70 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக செலவு செய்த தொகை 35 மில்லியன்களாகும். களுத்துறை மாவட்டத்தில் 30 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக செலவிடப்பட்ட தொகை 15 மில்லியன் ரூபாவாகும்.
சுனாமி அனர்த்தத்தால் இடம்பெயர்ந்துள்ள இந்த ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் ‘இபாட்’ நிறுவனம் 05 இலட்சம் ரூபா தொகையை கடற்றொழில் நீரியல் வள அமைச்சினூடாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கியுள்ளது.
இந்த ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான நீர், மின்சாரம், உள்ளக வீதி உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்க தேவையான நிதியையும் ‘இபாட்’ நிறுவனம் பெற்றுக் கொடுத்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மீனவர் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிஹானிமுள்ள வீடமைப்புத் திட்டம் 30 புதிய வீடுகளைக் கொண்டுள்ளதுடன், இந்த வீடுகளின் நிர்மாணம் வீட்டுக்குரியவர்களின் பூரண ஒத்துழைப்புடன் 100 நாட்களில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடமைப்புத் திட்டத்திற்குத் தேவையான உள்ளக வீதிகள், நீர், மின்சாரம் போன்ற வசதிகளைச் செய்து கொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் கடற்றொழில் நீரியல்வள அமைச்சின் பங்களிப்புடன் களுத்துறை மாவட்டச் செயலாளரால் இத்தினங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிஹானிமுள்ள மீனவர் வீடமைப்புத் திட்டம் இன்னும் ஒரு சில தினங்களில் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரஃப், தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் பங்குபற்றலுடன் பிரதமர் ரத்னசிரி விக்ரமநாயக்காவால் திறந்து வைக்கப்படவுள்ளதாக களுத்துறை மாவட்ட செயலாளர் ஹப்புஆரச்சி குறிப்பிட்டார்.
இந்த வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணித்த வெற்றிகரமான அனுபவத்தைக் காரணமாகக் கொண்டு ‘இபாட்’ அமைப்பால் கடற்றொழில் நீரியல்வள அமைச்சின் பங்களிப்புடன் பிரதேச மட்டத்தில் பல புதிய வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு முடிவுசெய்துள்ளது.
அதன்படி திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, கல்முனைப் பகுதிகளில் மேலும் 200 வீடுகளை நிர்மாணிக்க இன்னும் ஒரு சில வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதற்காக 100 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

0 commentaires :

Post a Comment