7/01/2009

37வது இலக்கியச் சந்திப்பு ஒஸ்லோ








37வது இலக்கியச் சந்திப்பு ஒஸ்லோ நகரில் கடந்த யூன் 26 முதல் 28 வரை இடம்பெற்றது. இச்சந்திப்பு புகலிட இலக்கிய ஆர்வலர்களால் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகின்றது.
இலக்கியத்திற்கு அப்பால் சமூக விடுதலை நோக்கிய அரசியல், பொருளாதார, அறிவியல், பண்பாடு குறித்த ஆழமான கருத்தாடலுக்கான தளமாக இது இதுவரை இருந்து வந்துள்ளது. பல்வேறுபட்ட சிந்தனைகளையும், நிலைப்பாடுகளையும் கொண்டவர்களை ஒன்றாக சந்திக்கச்செய்து சுதந்திரமாக கருத்தாடும் ஜனநாயகத் தளமாகவும் இந்த இலக்கியச் சந்திப்பு இருந்து வருகிறது.
கடந்த காலங்களில் சர்வதேச நாடுகளிலும் கூட புலிகள் கட்டவிழ்த்துவிட்ட கருத்து சுதந்திர மறுப்பு, சுதந்திர கருத்தாளர்களின் மீதான வன்முறைகளையும் எதிர்கொண்டு இச்சந்திப்பானது வெற்றிகரமா க இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று இம்முறையும் ஒஸ்லோவில் நிகழ்ந்த சந்திப்பில் இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமையாளர்கள், மாற்றுக்கருத்தாளர்கள் போன்ற பலதரப்பட்டவர்களும், பல முற்போக்கு அமைப்புக்களை சார்ந்தவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
அந்த வகையில் முதலாவது நிகழ்வினை ஆரம்பித்து வைத்து லண்டனிலிருந்து சமூகமளித்த ஓவியர் கிருஸ்ணராஜா”புலம்பெயர் குறுந்திரைப்பட, திரைப்பட முயற்சிகளின் போக்கு” என்கிற தலைப்பில் உரையாற்றினார். அவரது ஆரம்ப உரையில் ”எது நடந்ததுவோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்கப்போகிறதோ அது நன்றாகவே நடக்கும் எனத் தெரிவித்தார் அக்கருத்தானது திரைப்பட முயற்சிகள் குறித்து மட்டுமல்ல இலங்கை அரசியலுக்கும் மிகவும் பொருத்தமாக இருந்தது.
"தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம்?" என்கிற தலைப்பில் திறந்த உரையாடல் களத்தை நிர்மலா நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பலரும் பங்கெடுத்ததனூடாக விவாதக்களம் சூடுபிடித்தது.
சனியன்று காலை சிறகு நுனி பதிப்பகத்தின் மூன்று நூல்கள் அறிமுகத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதில் ஏவிவிடப்பட்ட கொலையாளி (திசேரா) இது நதியின் நாள் (பெண்ணியா) புதிய இலைகளால் ஆதல் (மலரா கவிதைகள்) போன்றன பௌஸர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டன.
புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு பற்றிய ஒரு விரிவான நினைவுகளையும், மதிப்பீட்டினையும் சுசீந்திரன் (ஜேர்மன்), சிவராஜன் (ஜேர்மன்) ஆகியோர் நிகழ்த்தினர்.
சின்னத்திரை, பெரியத்திரை : புகலிட சமூக பண்பாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம். பற்றி கனடாவிலிருந்து பங்குபற்றிய சுமதி ரூபன் தனது தொலைக்காட்சி ஊடக அனுபவத்துடன் தனது பேச்சை நிகழ்த்தினார்.
“கலை, இலக்கிய, ஊடக, அரசியல், சமூகவியலின், இலத்திரனியல் பரிமாணம்” என்கிற தலைப்பில் இலங்கையில் இருந்து விசேடமாக அழைக்கப்பட்ட கவிஞர் ஆத்மா உரை நிகழ்த்தினார். தனது தொலைக்காட்சி படைப்புகள் சிலவற்றிற்கூடாக உதாரணங்களுடன் காண்பித்து அவரது அனுபவங்களை புகலிட இலக்கிய ஆhவலர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
பிரான்சிலிருந்து கலந்துகொண்ட தேவதாஸ் “தலித்திய முன்னணி பற்றிய மதிப்பீட்டினை செய்தார். அவரது உரையைத் தொடர்ந்து தலித்தியம், சாதி ஒடுக்குமறை புகலிட சமூகத்தில் புதிய வடிவத்தில் தகவமைக்கப்பட்டுக கொண்டிருக்கும் சாதிய அதிகாரம் தொடர்பாக பல்முனைக் கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
“புகலிடத்தில் பெண்கள் - அமைப்பாதல், அனுபவங்கள், சிக்கல்கள்” குறித்து உரையாற்றிய உமா ஜேர்மனிலிருந்து கலந்துகொண்டிருந்தார். கூடவே போரும் பெண்களும் பற்றிய தலைப்பில் ரஞ்சி (சுவிஸ்) சர்வதேச அனுபவங்களை தகவல்களுடன் வெளிப்படுத்தினார்.
ஆன்றைய நாள் இறுதி நிகழ்வாக “நோர்வே : புகலிட தமிழ் சமூக இயக்கங்களின் வரலாறு” பற்றி அது குறித்த ஆராய்வை செய்துவரும் உமைபாலன் (நோர்வே) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
ஞாயிறன்று நிகழ்வுகள் ”கிழக்கிலங்கை அரசியல் ஒரு மாற்றா?” என்கிற தலைப்பில் ஆரம்பமானது. பிரான்சிலிருந்து கலந்துகொண்ட ஸ்டாலினின் சமகால சர்ச்சைக்குரிய அரசியல் நிலைமை குறித்த தலைப்பில் பலரும் விவாதத்தில் கலந்துகொண்டனர்.
“மலையகத்தின் மீதான அரசியல் கவனக்குவிப்பு” லண்டனிலிருந்து கலந்துகொண்ட நித்தியானந்தன் பலரும் அறியாத பல புதிய தகவல்களுடன் கவனத்தை ஈர்க்கச்செய்தார்.
என்.சரவணன் (நோர்வே), ஜீவமுரளி (ஜேர்மன்) ஆகியோர் தமது இன்றைய அனுபவங்களுக்கூடாக ”தலித்தியத்தின் இன்றைய சவால்கள்” என்கிற தலைப்பில் உரையாற்றினர்.
“இலங்கைப் பிரச்சினையில் - அரசியல் பொருளாதாரம்” பற்றி உரையாற்றிய ராகவன் (லண்டன்) இலக்கிய அரசியல் நிகழ்வுகளைக்கடந்து, பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தின் மீதான கவனத்தை ஏற்படுத்தினார்.
”நூலகத் திட்டம்: - சிறுபான்மைத் தமிழ்ச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல்” என்கிற தலைப்பில் கலையரசன் (நெதர்லாந்து), என்.சரவணன் (நோர்வே) ஆகியோர் தமது கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
”இலங்கை முஸ்லிம்கள்: அரசியல் சமூக நிலைமைகள்” பற்றிய தலைப்பில் உரையாற்றிய ஆத்மா (இலங்கை) மற்றும் ரவுப் காசிம் (நோர்வே) ஆகியோர் முஸ்லிம் தமிழ் நல்லுறவினை பாதித்த காரணிகள் மற்றும் முஸ்லிம் அரசியல் வரலாறு குறித்த விடயங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
மிகவும் அக்கறையுடனும் ஆவலுடனும், சுமார் 75 பேர் கலந்துகொண்ட இந்த இலக்கியச் சந்திப்பில் 40க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் இருந்து கலந்துகொண்டனர். சுதந்திர கருத்தாடலுக்கான இந் நிகழ்ச்சிகள் தொடர வேண்டுமென்பதில் மானுட விடுதலையில் அக்கறை கொண்ட எவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இந்த 37வது இலக்கிய சந்திப்பினை எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சரவணன் தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்து ஒஸ்லோ நகரில் சிறப்பாக நடத்தி முடித்திருந்தனர்.
அடுத்த இலக்கிய சந்திப்பு பிரான்சில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலக்கியச் சந்திப்பின் நிறைவில் இலங்கையின் அரசியல் சூழலில் மாற்றம் நிகழ்ந்திருக்கிற நிலையில் சில முக்கிய தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டன.
  1. இலங்கை முழுவதும் தொடரும் மனித உரிமை மீறல்களை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டுவதுடன், ஜனநாயகம், மனித உரிமைகள், சிறுபான்மை இன மக்களின் அடிப்படை அரசியல் அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.
  2. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான முழுமையானஅதிகாரப் பரவலாக்கலை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். இதன் முதற்கட்டமாக ஏலவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண சபைக்குரிய அதிகாரங்களை உடனடியாக கையளிக்கப்படவேண்டும்.
  3. இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்கள், மலையக மக்கள் தலித் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவுசெய்யப்படுவதனுடன் அவர்களின் சமூக இருப்புக்கான உத்தரவாதங்கள் "உறுதிப்படுத்த வேண்டும்.
  4. அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் கவனத்திற்கொள்ளப்பட்டு அவை நிறைவேற்றப்படுவதுடன், அம்மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதும், அவர்களின் பாதுகாப்பையும், சுதந்திரமான நடமாட்டத்துக்கானதுமான உத்தரவாதத்தையும் வழிவகைகளையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
  5. மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கோரிக்கையை நடைமுறைப்படுத்தவேண்டும்.
  6. இலங்கையில் கருத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரத்துடனும் கூடிய உரிமையை பாதுகாப்பதுடன் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தொடரும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
இறுதியாக இலங்கையில் மூத்த கவிஞர்களில் ஒருவரான முருகையன் அவர்களுக்கான அஞ்சலியுடன்; இலக்கிய சந்திப்பு நிகழ்வுகள் முடிவடைந்தது

0 commentaires :

Post a Comment