ஈழத்தமிழின வரலாற்றில் கோரத்தாண்டவம் ஆடி (1983), இருண்ட பக்கங்களை எழுதி நிற்கும் இருபத்தியாறவது இருண்ட ஜூலை (1989)
சுதந்திரம் அடைந்த இலங்கைத்தீவில், சுதந்திரக் காற்றைக்கூட சுவாசிக்க முடியாமல், பெரும்பான்மைவாதம் வேரூன்றி, சிறுபான்மை மக்களின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு,தமிழினம் ஓரங்கப்பட்டதோடு, ஈழத்தமிழினத்தின் இருப்பையே இல்லாதொழிக்க மாறி மாறி வந்த இலங்கை அரசுகள் எடுத்த முயற்சிகள் ஏராளம் ஏராளம். ஈழத்துக்காந்தி தந்தை செல்வா போன்ற உன்னதமான அரசியல் தலைவர்களால் ஈழத்தமிழினத்தின் இருப்பைக் காக்க தொடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்கள் அனைத்தும் சாகடிக்கப்பட்டபோது அகிம்சை முறைப்போராட்டங்கள் அனைத்தையும் அதிகாரவர்க்கம் ஆயதம் கொண்டு அழித்தொழித்தபோது,
இல்லாது ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் இருப்பைக் காப்பாற்ற இறுதி முயற்சியாய் கையிலே ஆயதம் ஏந்த வேண்டிய கட்டாய நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டபோது. தலைமை ஏற்றவர்தான் தங்கத்துரை என்ற தங்கண்ணா. நடராஜா தங்கவேல் என்று அழைக்கப்படும் தங்கத்துரை என்ற தங்கண்ணா தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைலவர் மட்டுமல்ல. அவர் ஒரு தத்துவ ஞானியும் கூட. அமைதியும், அன்பும், அடக்கமும், கொண்டகொள்கையிலே உறுதியும் அணிகலன்களாக அமையப் பெற்ற இந்த இலட்சியமறவன், வாதத்திறமையும், சிறந்த பேச்சாற்றலும் கொண்டவர். “நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்லர்.“ என்று நீதிமன்ற விசாரணையின்போது இவர் உதிர்த்த வார்த்தைகள் சரித்திரத்தில் சாகா வரம் பெற்றவை.
தளபதி குட்டிமணி: செல்வராஜா யோகச்சந்திரன் என்ற குட்டிமணி, தலைவர் தங்கண்ணா கூறும் தத்துவங்களையெல்லாம் களத்திலே காரியமாக்கிக் காட்டிய கட்டளைத்தளபதி. கயமைத்தனங்களை கட்டவிழ்த்து விட்ட சிங்கள இராணுவத்தினருக்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்தவன். களத்திலே இவன் இறங்கிவிட்டால், இவன் கைகளில் வீரம் விளையாடும். புடைத்து நிற்கும் இவன் தோள்களிலே வெற்றிகள் புன்னகை பூக்கும். இவன் வெறுங்கையோடு வீதியில் வந்தபோது, ஆயதங்களோடு நேருக்கு நேர் வந்த ஆயதப்படைகள் ஆயதங்களைப் போட்டுவிட்டு, அலறியடித்து ஓடிய சம்பவங்கள் பல உண்டு.
இவன் தன் தலைவன் காட்டிய நெறி தவறியதில்லை. வைத்த குறியும் தப்பியதில்லை. சிங்கள நீதிமன்றம் மரணதண்டனை விதித்தபோதும் இவன் நீதிமன்றத்தில் “என்னைத் தூக்கிலிட்ட பின் என் கண்களை கண்ணில்லாத ஒரு தமிழனுக்கு கொடுங்கள். அதன் மூலம் மலரப்போகும் தமிழ்ஈழத்தை நான் பார்க்கவேண்டும்.“ என்றான். இதன் காரணத்தாலேயே சிறைச்சாலையில் வைத்தே சிங்கள வெறியரின் முழமையான இரையாகி, உயிரோடிருக்கும் போதே இவன் கண்கள் தோண்டப்பட்டு வீரஉரை நிகழ்த்திய இவன் நாவும் அறுக்கப்பட்டது. ஏ! அஞ்சா நெஞ்சமே! உன் மறுபெயர் தான் குட்டிமணியோ?
முன்னணிப் போராளிகள்:
ஜெகன் என்கின்ற ஜெகநாதன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைய மகன், தளபதி குட்டிமணியை விட்டு இணைபிரியாத் தோழன். இயந்திரத்துப்பாக்கியும் கையுமாக இந்த இளம்சிங்கம் கண்ட களங்கள் பல. வயதிலே சின்னவன்; வேட்டுக்களை குறி வைப்பதில் மன்னவன். இராணுவத்தின் பிடியிலிருந்து பல தடவை தப்பியவன். அழகிய புன்முறுவலும், அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவன்.
சிவசுப்பிரமணியம் என்கின்ற தேவன் தலைவர் தங்கண்ணாவின் மெய்ப்பாதுகாவலர். பட்டத்து யானை போன்று நெடிய, கம்பீரமான தோற்றம் ஜெகனைப் போலவே இராணுவத்தின் பிடியிலிருந்து பலமுறை தப்பி சாகசம் புரிந்தவர். பொலிசாரின் துப்பாக்கிக் குண்டுகள் வயிற்றைக் கிழித்தபோதும், சாரத்தைக் கிழித்து, வயிற்றில்க் கட்டிக் கொண்டே கடலை நீந்தித் தாண்டித் தப்பிய மனோதைரியம் கொண்டவர்.
இப்படி தொடர்ந்தது இளைஞர்படை. தொகை தொகையாய் தலைவர் பின்னால், சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடித்து நின்ற மறத்தமிழ் வீரர்களின் மரணத்துக்கு அஞ்சாநிலை கண்டு, அகிலமே முதல் முறையாய் அண்ணாந்து பார்த்தது. அடக்கி ஆண்டவர்களோ அச்சத்தால் மிரண்டனர். தலைகுனிந்த நம்மினமோ தலை நிமிர்ந்து நின்றது. அடலேறுகளின் ஆக்கிரோசத்தில் அகமகிழ்ந்த அன்னை தமிழும் அரியணையில் ஏற ஆயத்தமானாள். தமிழினத்தின் விடிவுக்காய் தமிழர்படை தொடர்ந்த வேளை துரோகக்கரம் ஒன்று பின்னால் தொடர்ந்ததை யார் அறிவார். பதவி வெறியால் பாவி அவன் சதியாய் பாதியிலே (1981) கைதானார்கள் எங்கள் பைந்தமிழ் வீரர்கள்.
காட்டிக் கொடுத்தவர்களே கடைசிவரை நீங்கள் சிறை மீண்டுவிடக்கூடாது என்பதற்காக காங்கேசன்துறை சீமேந்துக் கூட்டுத்தாபனத்தின் சிங்கள ஊழியரோடு பேரம் பேசி சிறையில் வைத்தே உங்களை தீர்த்துக்கட்ட முயற்சி எடுத்தார்கள். கைதான உங்களைக் காக்கவென்று புறப்பட்டோம். ஆத்திரமுற்றிருந்த அதிகாரவர்க்கம் கோர்த்தது கை இந்தக் கோடாலிக்காம்புகளோடு. சாய்த்தது சிறையில் வைத்தே எங்கள் சரித்திர நாயகர்களை. “இலட்சியத்தை கை விடுங்கள். இன்னொரு நாட்டில் இல்லறத்தோடு இனிதே வாழ வசதிகளோடு வாய்ப்புக்கள் தரப்படும். நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.“ என்று பேரம் பேசியது ஜெயவர்த்தனா அரசு. அன்று மாத்திரம் நீங்கள் ஆம் என்று சொல்லியிருந்தால், இன்றும் இருந்திருப்பீர்கள் இன்னொரு நாட்டில் வளமாக. ஈழத்தமிழினத்திற்காக நீங்கள் ஏற்றுக்கொண்ட துன்பங்கள் எண்ணில் அடங்காதவை; கல்நெஞ்சையும் கரைக்கக் கூடியவை.
உங்கள் உயிரிலும் மேலான இலட்சியத்தைக் கை விட மறுத்ததினால், பூட்டிய சிறையினில் மாட்டிய விலங்கோடு தீட்டிய ஆயுதத்தினால் காடையரின் துணையோடு உங்கள் கண்கள் தோண்டப்பட்டு, கால்களில் போட்டு மிதிக்கப்பட்டன. கழுத்து அறுக்கப்பட்டு, உடல்கள் சிதைக்கப்பட்டன. உங்கள் உயிர்கள் பிரியும் முன்பே அங்கங்கள் அறுக்கப்பட்டன. இப்படி ஒவ்வொரு போராளிகளின் உறுப்புக்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு புத்தருக்கு காணிக்கையாக்கப்பட்டன. தென்னிலங்கை வீதிகளில் தமிழர்களின் அவலக்குரல்கள், தெருவெங்கும் தமிழர் பிணங்கள். தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கட்டிடங்கள் தீயிடப்பட்டன. இப்படி மனிதநாகரிகம் வெட்கித் தலைகுனிந்த நிலைமையில் நடத்தப்ட்ட கோழைத்தனமான தாக்குதலில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துடித்துநின்ற இளைஞர்கள் பின்தொடர ஆயதப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்த தமிழ்ஈழத் தேசபிதா திரு. தங்கத்துரை, தளபதி குட்டிமணி உட்பட புதுயுகத்தின் அத்தியாயங்களை எழுதத் துடித்துநின்ற தோழர்கள் ஜெகன், தேவன், நடேசுதாஸ், சிவபாதம், குமார், ஸ்ரீகுமார், மரியாம்பிள்ளை, குமரகுலசிங்கம் போன்ற முன்னணிப்போராளிகள் உட்பட ஐம்பத்திமூன்று உயிர்கள் வெலிக்கடைச்சிறையில் வெட்டிக் குதறப்பட, நலிவுற்ற நம்மினமோ இன்று நடுத்தெருவில், மரணித்துவிட்ட எங்கள் விடியல்களே! எங்கள் இனத்தின் இன்றைய இன்னல்கள் தீர்க்க இன்னும் ஒருமுறை எழுந்துவர மாட்டிரோ? உங்கள் அனைவருக்கும் எமது ஆத்மாந்தமான கண்ணீர் அஞ்சலிகள் காணிக்கையாகட்டும்.
புலம்பெயர்ந்து வாழும்
தமிழ் ஈழ விடுதலை இயக்க உறுப்பினர்கள்
TELO
»» (மேலும்)