6/08/2009

ஆயுத கலாசாரத்தை தூண்டிவிடும் சுயலாப அரசியலுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும்x துணை போகக் கூடாது


எமது மக்களின் அரசியலுரிமைகளை வென்றெடுக்கவும், சிதைந்து போன எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தவும் சரியான திசை வழி என்பது நடை முறைச்சாத்தியமான வழிமுறையே என்றும், அதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று பட்டு ஓரணியில் செற்பட முன்வர வேண்டும் என்றும் ஈ.பி.டி.பி. யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அனைத்து தமிழ் கட்சிகளை நோக்கியும் பகிரங்க அழைப்பொன்றை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படு வதாவது கடந்த காலங்களில் ஒரு தாய் பெற்ற பிள்ளைகளான நாம் சுயலாப அரசியல் முரண்பாடுகளால் பிரிந்து நின்று ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதனால் எமது மக்கள் இன்று அவலங்களை சுமந்து வருவதாகவும், கடந்த கால அனுபவங்களை படிப்பினைகளாக ஏற்றுக்கொண்டு அனைத்து தமிழ் கட்சிகளும் நடைமுறை யதார்த்தங்களோடு சிந்தித்து செயலாற்றினால் எமது மக்களுக்கு விடிவு காலம் விரைவாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச எதிர்ப்பு அரசியல் என்பது தவறானது இல்லை என்றும், ஆனாலும் அதை வெறும் சுயலாபங்களுக்காக பயன்படுத்தாமல் அரசாங்கத்தோடு உடன்பட்டுப் போகவேண்டிய தருணங்களை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா யாருடன் பேசி எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமோ அவர்களுடன் பேசியே எமது அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்திருந்ததோடு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று பட்டு நின்று அரசாங்கத்துடன் பேசி எமது மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் அவர் தெரிவிக்கையில் வன்முறைகளையோ, அன்றி ஆயுதக் கலாசாரத்தையோ மறுபடியும் எமது மண்ணில் தூண்டிவிடும் சுயலாப அரசியலுக்கு தமிழ் கட்சிகள் எவையும் துணை போகக் கூடாது என்றும் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு காண முடிந்த நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கு தாம் நியாயமான முறையிலான விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த கால கசப்புணர்வுகளையும், பகைமைகளையும் மறந்து தமிழ் பேசும் மக்களுக்கான நீடித்த மகிழ்ச்சிக் காவும், அரசியலுரிமை சுதந்திரத்திற்காவும் அனைத்து தமிழ் கட்சிகளும் இதய சுத்தியோடு உழைப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் ஈ.பி.டிபி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளார்.

0 commentaires :

Post a Comment