6/14/2009

யதார்த்தத்துக்கு அமைவான அணுகுமுறையைப் பின்பற்றினால் அரசியல் தீர்வு சாத்தியமாகும்


பயங்கரவாதம் தோற்கடிக்கப் பட்டுவிட்டது. அடுத்தது அரசியல் தீர்வு. ஒன்றிரண்டைத் தவிர மற்றைய கட்சிகள் அரசியல் தீர்வு பற்றி இப்போது பேசுகின்றன. புலிகள் தோற்கடிக்கப்படும் வரை ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் தீர்வில் அக்கறை செலுத்தவில்லை. இப்போது அவர்களும் அரசியல் தீர்வு பற்றிப் பேசுகின்றார்கள்.
அரசியல் தீர்வு பற்றி வெறுமனே பேசினால் போதாது. இன்று தேவைப்படுவது ஆக்கபூர்வமான செயற்பாடு. ஆக்கபூர்வமான செயற்பாடு எனக் கூறும் போது இரண்டு விடயங்கள் முக்கியமானவை. முன்வைக்கப்படும் தீர்வு முழுமையான அரசியல் தீர்வின் முன்னோடியாக இருக்க வேண்டியது ஒரு விடயம்.
நடைமுறைச் சாத்தியமான தீர்வாக இருக்க வேண்டியது மற்றைய விடயம். இன்றைய நிலையில் முழுமையான அரசியல் தீர்வு சாத்தியமில்லை என்பதாலேயே இவ்விரு விடயங்களும் ஆக்கபூர்வ அணுகுமுறை ஆகின்றன.
அரசாங்கம் அரசியல் தீர்வை இன்னும் முன்வைக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்தகால செயற்பாடுகளின் பின்னணியில் பார்க்கும் போது இக்குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டதாகவே தெரிகின்றது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி கடைசி நேரம் வரை பங்குபற்றவில்லை.
அரசியல் தீர்வு தொடர்பாகத் தனது நிலைப்பாடு என்ன என்பதையும் வெளிப்படுத்தவில்லை. யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடைபெறவுள்ள தேர்தல்களில் போட்டியிடுவது பற்றி ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசிக்கின்றது. அரசியல் தீர்வை முன்வைக்கவில்லை என்று அரசாங்கத்தைக் குறை கூறுவதற்கும் இந்த ஆலோசனைக்கும் தொடர்பு இல்லை எனக் கூற முடியாது.
அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் ராஜித சேனாரட்ன அண்மையில் எடுத்துக் கூறினார். பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முதலில் நடைமுறைப்படுத்துவது என்றும் அதன் பின் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வை நடைமுறைப்படுத்துவது என்றும் கூறினார். இரண்டாவது கட்டத் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். இதைப் பற்றிப் பின்னால் விரிவாகப் பார்ப்போம்.
அடுத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் தெரிவித்த கருத்துகள் அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாகச் செயற்படுவதற்கு இன்னும் தயாராக இல்லை என்ற அபிப்பிராயத்தையே தோற்றுவிக்கின்றன.
ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை அரசாங்கம் முன்வைத்தால் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்கிறார் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். வடக்கும் கிழக்கும் இணைந்த அரசியல் தீர்வைக் கொண்டு வந்தால் ஆதரிப்போம் என்கிறார் இன்னொருவர்.
அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும் ஒத்துழைக்காததும் இங்கு முக்கிய பிரச்சினையல்ல. அது இரண்டாம் பட்சமானது. அரசியல் தீர்வை அடைவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்பதே முக்கியமானது.
‘ஏற்றுக் கொள்ளக் கூடிய’ தீர்வை முன்வைக்கும் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்குத் தலைவர்கள் அவசியமில்லை. எல்லோரும் அதைச் செய்யலாம். தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கே தலைவர்கள் தேவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்பதையே மக்கள் அறிய விரும்புகின்றார்கள். இவர்கள் ஏற்கக் கூடிய தீர்வை அரசாங்கம் முன்வைக்கா விட்டால் பேசாமல் இருந்து விடுவார்களா?
எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் தீர்வு என்ன என்ற தெளிவான விளக்கமும் தேவைப்படுகின்றது. கடந்த காலங்களில் இவர்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட்டார்கள். தனிநாடு தான் புலிகளின் நிகழ்ச்சி நிரல். இதில் கூட இவர்களிடம் நிலையான நிலைப்பாடு இருக்கவில்லை. சிலர் பகிரங்கமாகவே தனிநாட்டை ஆதரித்துப் பேசினார்கள்.
வேறு சிலர் தாங்கள் தனிநாட்டை ஆதரிக்கவில்லை என்று பட்டும் படாமலும் பேசினார்கள். இந்த நிலையில் தாங்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்ன என்பதை இவர்கள் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அந்தத் தீர்வை அடைவதற்குப் பின்பற்றப் போகும் நடைமுறை என்ன என்பதையும் கூற வேண்டும்.
இன்றைய நிலையில் முழுமையான அரசியல் தீர்வை அடைவதற்கான சூழ்நிலை இல்லை என்று மேலே கூறியதற்கான விளக்கம் அவசியமாகின்றது.
இனப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வை மையமாகக் கொண்ட இரண்டு தீர்வுகள் கைதவறிப் போயிருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாண சபை ஒன்று. மற்றையது பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம். இவ்விரு தீர்வுகளும் கைதவறிப்போனதற்கான பொறுப்பைச் சிங்களத் தலைவர்கள் மீது சுமத்த முடியாது. தமிழ்த் தலைவர்களே இதற்குப் பொறுப்பாளிகள்.
வடக்கு, கிழக்கு மாகாண சபை செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்ததில் புலிகளுக்குப் பிரதான பங்கு உண்டு. இதற்காகப் பிரேமதாசவுடன் சேர்ந்து செயற்பட்டார்கள். செயலற்றுப் போன மாகாண சபைக்குத் தேர்தல் நடத்திப் புதிய சபையைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்த் தலைவர்கள் முன்வைக்கவில்லை.
அப்போது தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் இக்கோரிக்கையை முன்வைக்கவில்லை. மாகாண சபை செயலற்றதாக்கப்பட்டதற்கு மெளன அங்கீகாரம் அளித்தார்கள் என்பதே இதன் அர்த்தம்.
பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் எதிர்த்ததாலேயே அது மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற முடியாமற் போனது. இத்தீர்வுத் திட்டம் கைதவறிப் போனமை மிகப் பெரிய பின்னடைவு.
மாகாண சபைக்கும் பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்த தமிழ்த் தலைவர்கள் ஐக்கிய இலங்கைக் கோட்பாட்டுக்கு அமைவாக வேறொரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அரசியல் போராட்டம் நடத்தியிருந்தால், முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமற்ற சூழ்நிலை தென்னிலங்கையில் தோன்றியிருக்காது. ஆனால் இவர்கள் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்று அவர்களின் ஆயுதப் போராட்டத்துக்குப் பக்கபலமாகச் செயற்படத் தொடங்கினார்கள்.
அரசியல் தீர்வு பற்றிப் பேசிக்கொண்டிருந்த தலைவர்கள் நியாயமானதெனப் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல்தீர்வு முன்வைக்கப்பட்ட போது அதை நிராகரித்துத் தனிநாட்டு அணியுடன் இணைந்து கொண்டமை தமிழ்த் தலைவர்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கை தனிநாட்டுக்கான முதலாவதுபடி என்ற சந்தேகத்தைச் சிங்கள மக்களிடம் தோற்றுவித்தது.
முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமற்ற சூழ்நிலை தோன்றுவதற்கு இது பிரதான காரணமாகியது. பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்ட காலத்தில் அடங்கிப் போயிருந்த பேரினவாதிகளின் குரல் தமிழ்த் தலைவர்களின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாட்டினால் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இடம்பெற்ற பல சம்பவங்கள் முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமற்ற சூழ்நிலையைத் தோற்றுவித்தன.
இந்த நிலையில் கூட்டமைப்புத் தலைவர்கள் எத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றப் போகின்றார்கள்? ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்கட்டும் என்று வாளாவிருப்பார்களா? அல்லது நடைமுறைச் சாத்தியமான வழியில் தீர்வை அடைவதற்கு முயற்சிப்பார்களா?
ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை அரசாங்கம் முன்வைக்கட்டும் என்று பார்த்துக் கொண்டிருப்பது அரசியல் தலைமைக்குரிய செயற்பாடல்ல. அதே நேரம், யதார்த்தத்துக்குப் புறம்பான கோரிக்கையை முன்வைப்பது இவ்வளவு காலமும் விட்ட தவறை மீண்டும் விடுவதாகவே அமையும். இதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்த கருத்து நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறை.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இப்போது அரசியலமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. எனவே, இத்திருத்தத்தின் கீழான மாகாண சபையை நடைமுறைப்படுத்துவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவையில்லை.
பாராளுமன்றத்தின் சம்மதமும் தேவையில்ல. மாகாண சபையிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பை மாற்ற வேண்டும். அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை. மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு இல்லை.
இந்த நிலையில் பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழான மாகாண சபையை உடனடியாக நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது. இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் வேறு இடஙக்ளிலும் வாழும் மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
இது அவர்களின் உடனடி எதிர்பார்ப்பாக உள்ளது. மாகாண சபை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இந்த எதிர்பார்ப்பு சாத்தியமாகும். மேலும், மாகாண சபையின் மூலம் மக்கள் புதிய சில அதிகாரங்களைப் பெறுவார்கள். அவர்கள் எதையும் இழக்கப் போவதில்லை.
அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையிலான சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பணி பூர்த்தியடையும் நிலைக்கு வந்து விட்டது. இறுதி அறிக்கை விரைவில் கையளிக்கப்படவிருக்கின்றது. இந்த அறிக்கை பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வை முன்வைக்குமென அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவருகின்றன.
அடுத்த கட்டமாக இந்தத் தீர்வை நடைமுறைப்படுத்தலாம். தீர்வு வெளியாகியதும் இதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்காதிருக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்க மறுத்தால் தமிழ் மக்களிடமிருந்து அது முற்றாக அந்நியப்பட்டுவிடும்.
கிடைக்கும் தீர்வுகளை ஏற்றுக் கொண்டு அவற்றைச் சரியான முறையில் செயற்படுத்துவதன் மூலம் முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும். தமிழ்த் தலைவர்கள் சரியான அணுகுமுறையைப் பின்பற்றினால் நிச்சயம் அது சாத்தியமாகும்.
சமகால யதார்த்தத்துக்குப் புறம்பான செயற்பாடு தமிழ் மக்களை இன்று படுகுழியில் தள்ளியிருப்பதிலிருந்து தமிழ்த் தலைவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.


0 commentaires :

Post a Comment