6/22/2009

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது அவசியம்



தேசிய உணவு வாரம் இலங்கையில் இன்று தொடக்கம் எதிர்வரும் இருபத்தெட்டாம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. உள்நாட்டு உணவு உற்பத்தி அதிகரிக்கப்படுவதுடன் உள்நாட்டு உணவு உற்பத்திப் பொருட்கள் நுகர்வு செய்யப்படுவதை ஊக்குவிப்பதும் தேசிய உணவு வாரத்தின் கருப்பொருட்களாக அமைந்துள்ளன.
நாடெங்கும் இன்று தொடக்கம் ஒரு வார காலத் துக்கு இது தொடர்பான பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி செயலகத் தின் வழிகாட்டலின் கீழ் அமைச்சுக்களின் ஏற்பா ட்டில் தேசிய உணவு வாரம் அனுஷ்டிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு நாட்டிலும் உள்நாட்டு உணவு உற்பத்தி எந்தளவு முக்கியமோ உள்நாட்டு உணவு உற்பத்திப் பொருட்களை அந்நாட்டு மக்கள் நுகர்வு செய்வதும் முக்கியமாகும். இல்லையேல் உள்நாட்டு உணவு உற்பத்தி மூலம் நாடொன்று ஈட்டுகின்ற தேசிய வருமானத்தினால் பயன் கிட்டாமல் போகலாம். இறக்குமதி உணவுகளுக்காக வீணான பணத்தைச் செலவிட வேண்டிய துர்ப்பாக்கியம் அந்நாட்டுக்கு ஏற்படக் கூடும். எனவே தான் உள்நாட்டு உற்பத்தியில் மாத்திரமன்றி உள்நாட்டு உணவுப் பொருள் நுகர்விலும் எமது மக்கள் கரிசனை செலுத்த வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்க் கிறது.
வெளிநாட்டு உணவுப் பொருட்கள் மீதான மோகம் இன்று நேற்று அன்றி பண்டைய காலம் தொடக்கம் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி யுள்ளது. இத்தகைய மோகம் அன்றைய காலத்தில் எமது நாட்டை ஆட்சி செய்த அந்நியர்களாலும் வாணிப நோக்கத்துக்காக நாட்டில் கால் பதித்த தூரதேச வாணிபர்களாலும் ஏற்படுத்தப்பட்டதெனக் கூறுவதே பொருத்தமாகும்.
அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளும் வாணிபக் குழுக் களும் இலங்கை போன்ற நலிந்த நிலையில் காணப் பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களை வசப்படுத்தும் நோக்கில் சுவை மிகுந்ததும் போதை தருவதுமான உணவுப் பொருட்களை அறிமுகம் செய்தன.
காலப் போக்கில் எமது மக்கள் வெளிநாட்டு உணவுப் பொருட்களுக்கு அடிமையாகும் அபத்தம் ஏற்பட்டது. இத்தகைய அநாவசிய மோகத்திலிருந்து இன்னும் தான் எங்களால் விடுபட்டுக் கொள்ள முடியாதிருக்கிறது.
உள்ளூர் உணவு உற்பத்திகளை துச்சமென எண்ணு வதும் வெளிநாட்டு உணவுப் பொருட்களை மேலானதென எண்ணுவதும் எம்மத்தியில் இன்றும் காணப்படுகின்ற விவேகமற்ற சிந்தனைகளாகும்.
இறக்குமதி உணவுகள் அனைத்து விதத்திலும் தரத்தில் சிறந்தவையென எண்ணுதல் வெறுமனே அறிவுபூர்வமற்ற சிந்தனையாகும். வெளிநாட்டு உணவுப் பொருட்கள் மீதான பற்றுதலானது பணத்தை விரயமாக்கும் செயலென்பது மட்டுமே உண்மை.
இந்தப் பிற்போக்கான எண்ணத்திலிருந்து எமது மக்கள் விடுபடுவதே உள்நாட்டு உணவு உற்பத்தி யைப் பெருக்குவதற்கான அத்திவாரமாக அமையும். உள்நாட்டு உணவுப் பொருட்கள் நுகர்வை மக்கள் அதிகரித்தாலேயே உள்நாட்டு உணவு உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கான ஊக்குவிப்பை உற்பத்தி யாளர்களுக்கு வழங்க முடியும்.
இலங்கையானது விவசாயச் செய்கைக்கு மிகவும் உகந்ததான கால நிலைகளைக் கொண்ட நாடாக விளங்குகிறது. பிரதான உணவுப் பயிரான நெற் செய்கைக்கு மாத்திரமன்றி உப உணவுச் செய்கைக் கான அனைத்து வளங்களையும் கொண்டுள்ள நாடு இலங்கை ஆகும்.
எமது நாட்டின் வருடாந்த பருவப் பெயர்ச்சி மழையானது நெற் செய்கைக்கு மிகவும் வாய்ப் பானதாகக் காணப்படுகிறது. எமது பண்டைய மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசனக் குளங்களும் நெற்செய்கைக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்துள்ளன.
சகல இயற்கை வளங்களையும் ஒருங்கமையப் பெற்றுள்ள நாம் இனிமேலும் உணவுக்காக வெளி நாடுகளை எதிர்பார்ப்பதென்பது பேதமை!
அரிசியில் தன்னிறைவு பெறக் கூடிய வல்ல மையுள்ள எமது நாடு அவ்வப்போது வெளிநாடு களிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அநாவசிய நிலைமைக்குத் தள்ளப் படுகிறது. இவ் விடயத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உறுதியான கொள்கை யொன்றைக் கொண்டுள்ளது. ‘எமது நாட்டு மக்களுக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்’ என்பதே அக் கொள்கை யாகும்.
அரிசி தவிர இனிப்பு வகைகள், பிஸ்கட்டுகள் என்றெல்லாம் ஏராளமான ஆடம்பர உணவுப் பண் டங்கள் வெளிநாடுகளிலிருந்து தாராளமாக இறக்கு மதி செய்யப்படுகின்றன. இந்த இறக்குமதியில் பல்வேறு தீங்குகள் உள்ளன.
அவ்வுணவுப் பொருட்களின் சேர்மான உள்ளட க்கங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் அவற்றை உண்பதால் உடலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதேசமயம் அந்த இறக்குமதிகளுக் காக எமது நாட்டின் பணம் வீணடிக்கப்படுகிறது.
இவற்றுக்கெல்லாம் அப்பால் வெளிநாட்டு உணவுப் பொருட்களின் ஆக்கிரமிப்பு காரணமாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை உள்நாட்டில் சந்தைப்படுத்திக் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றனர்.
உள்நாட்டில் தரமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளும் திறமை எமக்கு இருக்கை யில் வெளிநாட்டு உணவுப் பொருட்களை நாடு வதால் ஏற்படும் தீங்குகள் ஏராளமெனக் கூறலாம்.
தேசிய உணவு வாரம் ஆரம்பமாகும் இன்றைய தினத்தில் இது விடயத்தில் எமக்குள் விழிப் புணர்வொன்று ஏற்படுதல் பிரதானமாகும்.

0 commentaires :

Post a Comment