6/06/2009

மறக்க முடியாத தேசியத் தலைவர்


அமரர் கலாநிதி என். எம். பெரேரா அவர்களின் பிறந்த தினம் இன்றாகும். அன்னாரை நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருவது சாலச்சிறந்ததாகும். அரசியலையே நோக்கமாகக் கொண்டு உண்மைகளை மறைத்துத் திரித்துக்கூறும் அரசியல்வாதிகள் ஒருபுறம். மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே மடிந்த அரசியல்வாதிகள் மறுபுறம். அரசியலை நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் மக்களை அழித்தார்கள். தங்களை வளர்த்தார்கள்.மக்கள் வாழ்வை உயர்த்துவதற்காக வாழ்ந்தவர்கள் தங்களை வளர்க்கவில்லை.
அமரர் என். எம். பெரேரா இரட்டைக் கலாநிதியாக கல்வியில் உயர்ந்து லண்டன் மாநகரிலிருந்து இலங்கை வந்தடைந்ததும் பதவியை நோக்கிப் போகவில்லை. மலேரியா நோயால் பீடித்த மக்களுக்கு கிராமம் கிராமமாகச் சென்று மருந்துகள் விநியோகித்தார். பின்தங்கிய நிலையிலிருந்த தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை உயர்த்த அரும்பாடுபட்டார். மனித சமத்துவத்துக்காகப் போராடினார். அவர் இன, மத, சமூக, பொருளியல் சமத்துவத்தை மானிடர் மத்தியில் ஏற்படுத்தப் பாடுபட்டார்.
தோட்டத் தொழிலாளர் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது சினங்கொண்டு எழுந்தார். தோட்டத் தொழிலாளர்களுக்காக அவரும் அவரது சமசமாஜக் கட்சியினரும் பாராளுமன்றில் வாக்களித்ததை இலகுவில் மறக்க முடியாது.
இலங்கை சட்டசபையில் முதல்முதலாக சபாநாயகராகப் பதவி வகித்தவர் சேர் வைத்திலிங்கம் துரைசாமி ஆவார். அவரை அந்நிலைக்கு கொண்டு வர அரும்பாடுபட்டவர் டாக்டர் என். எம். பெரேரா ஆவார். இங்கிலாந்து மகாராணி இலங்கை வந்தபோது அவரை கொழும்பு மாநகர சபையின் முதல் மனிதனாக வரவேற்ற பெருமை அமரர் உருத்திராவைச்சாரும். அக்காலகட்டத்தில் சமசமஜாக்கட்சியைச் சார்ந்த உருத்திரா அவர்களே கொழும்பு மாநகர சபை முதல்வராவார். அவரை முதல்வராக்கிய பெருமை டாக்டர் என். எம். பெரேராவுக்குரியதாகும்.
முதன் முதலில் சிங்களம் மட்டும் கொள்கையை நிலைநாட்டத் துடித்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆவர். கலாநிதி என் எம். பெரேரா அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் தான் முதன் முதலில் பாராளுமன்றில் சிங்கள மொழியும், தமிழ் மொழியும் அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்ற பிரேரணையைச் சமர்ப்பித்துப் பேசியுள்ளார்.
19-10-1955 பி.ப. 2.30 மணிக்கு மேற்குறிப்பிட்ட பிரேரணையை அவர் பாராளுமன்றில் கொண்டுவந்தார் என்பதை பாராளுமன்றப் பதிவேட்டில் பார்க்கலாம். ஐக்கிய தேசியக் கட்சி 1955இல் நாடு முழுக்க சிங்களம் மட்டும் என்ற இனத்துவேஷக் கொள்கையைப் புகுத்துவதற்காக கூட்டங்கள் வைத்த போது அதை எதிர்த்து துணிந்த மனதுடன் சிங்கள மொழிக்கும், தமிழ் மொழிக்கும் சம உரிமை வேண்டும் எனப் போராடினார். காலஞ்சென்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாநாயக்கா ஆரம்பத்தில் சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் சம உரிமை பின்பற்றிய போதிலும் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 24 மணித்தியாலயத்தில் பாராளுமன்றில் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவருவதாகக் கூறி வென்றார். எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு முழு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி வாக்களித்தது. சிங்களம் மட்டும் சட்டத்திற்கெதிராக என். எம். பெரேராவும் சமசமாஜக் கட்சியினரும் வாக்களித்தது மாத்திரமல்லாது தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து திறம்படப் பேசியுள்ளார். ளிr.னி.ணி. நாடு முழுவதும் தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராகப் பிரசாரம் செய்தார். கொழும்பு நகரசபை மண்டபத்தில் தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராகப் பேசியபொழுது அவர் மீது குண்டு வீசப்பட்டது. ரெஜினோல்ட் மென்டிஸ் என்ற இன்னொரு சமசமாஜவாதி குண்டைத்தடுத்து என்.எம். பெரேராவைக் காப்பாற்றினார். இதன்போது ரெஜினோல்ட் மென்டிஸ் ஒரு கையை இழந்தார். டாக்டர் என். எம். பெரேரா பண்டா-செல்வா ஒப்பந்தத்தை 1964ல் திரும்பவும் அமுல்படுத்தப்பாடுபட்டார். அவர் எண்ணம் கைகூடவில்லை. 1972 இல் அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கான சில கொள்கைகளை புகுத்த முற்பட்டார். அவர் எண்ணம் சில அரசியல்வாதிகளால் நிறைவேறவில்லை. அவர் உயிருடன் இருந்த காலத்தில் பதவியில் இருந்தபொழுது தமிழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக உழைத்தார். சீவல் தொழிலாளர்களின் நலன் கருதி கள் உற்பத்தி, விற்பனைக்கென கூட்டுறவு முறையைக் கொண்டுவந்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார். தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு எவ்வளவு பணம் (கறுப்பு பணம் உட்பட) நன்கொடையாக கொடுத்தாலும் அதற்கு வரிவிலக்கு அளித்தார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட கலாநிதி என். எம். பெரேராவின் மரணச்சடங்கில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கலந்து கொண்டு உரையாற்றும்போது கலாநிதி என். எம். பெரேராவின் கொள்கைகளை மக்கள் அன்று ஏற்றிருந்திருந்தால் நான் இன்றைய அரசியல் கொள்கைகளில் ஈடுபட்டிருக்க மாட்டேன் எனக் கூறியிருந்தது மிகவும் சிந்திக்க வேண்டிய ஒருவிடயமாகும்.
என். எம். பெரேராவின் பூதவுடல் பாராளுமன்றக் கட்டட வாசற்படியால் தூக்கிவரும்போது கொளுத்தும்வெய்யில் தணிந்து, இருண்ட மேகம் மழைத்துளிகளை தூவியதை பார்த்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
இன்று எத்தனையோ மக்கள் தங்கள் உறவினர்களை இழந்து தவிக்கின்றனர். கோடானுகோடி சொத்துக்களை இழந்து வருந்துகின்றனர். அமரர் என். எம். பெரேரா போன்றவர்கள் அன்றைய காலத்தில் ஏற்கப்பட்ட பெருந்தலைவர்களாக தமது தலைமையில் ஆட்சி நடாத்தியிருந்தால் மக்களுக்கு இன்றைய நிலைமை ஏற்பட்டிருக்குமா?
இனியாவது மக்கள் உணர்வார்களா? மனிதனின் ஆழிவில் நாம் வளராமல் அவனின் உயர்ச்சியில் நாம் வளர்வோமாக.
எஸ்.கே. தங்கவடிவேல்பழைய வீதி, கோப்பாய்.


0 commentaires :

Post a Comment