6/17/2009

மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதாவின் கட்சி தாவலின் பின்னணி என்ன?




மேயர் சிவகீதா பிரபாகரன் தனது கட்சியான ரி.எம்.வி.பி யிலிருந்து சி.சு.கட்சிக்கு மாறியுள்ளார். த.ம.வி.புலிகள் அமைப்பானது கடந்த காலங்களில் வன்னி புலிகளின் மூர்க்கத்தனமான அழித்தொழிப்புக்கள், துரோக குற்றச்சாட்டுக்கள், உட்கட்சி குழப்பங்கள், தலைமைப்போட்டிகள், கருத்து வேறுபாடுகள் என்று பல்வேறு சவால்களை எதிர் நீச்சல் அடித்து புடம்போடப்பட்ட கட்சியாகும். அவ்வேளைகளில் பலர் கொல்லப்பட நேர்ந்தது. பலர் ஒதுங்கியும் கொண்டனர். இறுதியாக கருணாம்மான் கூட ரி.எம்.வி.பி. யிலிருந்து விலகி சி.சு. கட்சியில் இணைந்து கொண்டார். இந்த வேளைகளிலெல்லாம் ரி.எம்.வி.பி யை விட்டு வெளியேறாத சிவகீதா அவர்கள் தற்போது மட்டும் அந்த முடிவை எடுப்பதற்கு காரணமென்ன? அவர் ரி.எம்.வி.பி. யை விட்டு வெளியேறுவதற்கு தகுந்த காரணமொன்றையும் அவர் இறுதியாக பங்குகொண்ட ரி.எம்.வி.பி.யின் அரசியல் குழு கூட்டத்தில் அவரால் முன்வைக்க முடியவில்லை என்பதை அறிய முடிகின்றது. கருணா அம்மான் சி.சு.கட்சியில் சேர்ந்த போது பல ரி.எம்வி.பி. உறுப்பினர்களை தன்னுடன் சேர்ந்து வெளியேற்ற முனைந்தார். அதனூடாக ரி.எம்வி.பி. என்னும் கட்சியை சிதைத்துவிட முடியும் என அவர் எண்ணினார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. மாறாக முதலமைச்சர் சந்திரகாந்தனின் நிதானமும் உறுதியும் மிக்க தலைமைப்பண்பும் ரி.எம்.வி.பி.யை இலங்கையில் யாராலும் நிராகரிக்க முடியாத ஒரு சக்தியாக மென்மேலும் மாற்றி வருகின்றது. இதனால்தான் கருணாம்மான் சார்பு இணையத்தளங்கள் வன்னி புலிகளை விட அநாகரிகமான முறைகளில் ரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்கள் மீது தொடர்ச்சியான சேறுப+சல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரதீப் மாஸ்ரர், மேயர் சிவகீதா, சீலன் .... என்று பலர்மீது ஆதாரமில்லாத பொய்க்குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றது. மேயர் சிவகீதா பற்றி அவரை உளவியல் ரீதியாக நோகடிக்கச் செய்ய மிக கீழ்த்தரமான ‘நடத்தை’ குற்றச்சாட்டுகளை கிழக்கு.கொம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இதன்காரணமாக மாற்று இணையத்தளங்களான தேனீ போன்ற தளங்கள் கிழக்கு.கொம் இற்கான தொடுப்புகளை நீக்கிவிட நேர்ந்ததும் தெரிந்த விடயமே. இதில் மிக நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் எந்த கிழக்கு.கொம் இணையமானது மேயர் சிவகீதாவை ரி.எம்.வி.பி. யிலிருக்கும் வரை பாலியில் ரீதியாக கூட அவமதித்து குற்றச்சாட்டுகளை அள்ளிவீசியதோ, அதே இணையதளம் இன்று சிவகீதா கட்சிமாறியவுடன் அவரை புகழ்ந்து தள்ளுகின்றதுதான். எது எப்படியோ மேயர் சிவகீதா மீதான தொடர்ச்சியான மறைமுக, நேரடி அழுத்தங்கள் வெற்றிகொண்டிருக்கின்றன என்பது உண்மை. இவ்வளவு தூரம் சிவகீதாவை மிரட்டி, துரத்தி சி.சு.கட்சியில் சேரவைப்பதன் அவசியம் என்ன? அதுதான் கருணாம்மானுடைய பாராளுமன்ற தேர்தலை நோக்கிய கணக்கு வழக்குகளும், காய்நகர்த்தல்களும் ஆகும்.கருணாம்மான் புலிகளைப் பிளந்து வெளியேறியபோது அவர் கிழக்கு மக்களின் பெருந்தலைவனாக பார்க்கப்பட்டார். அதன் பின்னர் அவர் களத்தில் நின்று புலிகளோடு மோதமுடியாமல் நாட்டைவிட்டு ஓடியதிலிருந்து கிழக்கில் அவர் கொண்டிருந்த ஆதரவுத்தளம் வலுவிளக்கத் தொடங்கியது. அன்று வன்னிப்புலிகளை துரத்தியடிப்பதிலும், ரி.எம்.வி.பி. யை உருவாக்குவதிலும் அன்றைய பிள்ளையான் வகித்த பங்கு அவரை கட்சியின் தலைமை பொறுப்புவரை உயர்த்தியது. அதுமட்டுமன்றி இரு தேர்தல்களை முகம்கொண்டு வெற்றியீட்டியதோடு அவர் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சரானார். பிள்ளையான் இந்த அரசியல் வளர்ச்சியானது கருணாம்மான் எனும் பெயருக்கிருந்த நன்மதிப்பை விட பலமடங்கு நன்மதிப்பினை மக்களிடம் பிள்ளையான் பெற்றுகொள்ள வழிவகுத்தது. அதேவேளை கருணாம்மானுக்குரிய ஆதரவுத்தளம் வெகுவாக குறைந்துள்ளது. அதேவேளை மாகாண சபைகளுக்கான அதிகார பகிர்வு குறித்து முதலமைச்சர் சந்திரகாந்தனும் அமைச்சர் முரளிதரனாகிய கருணாம்மானும் நேர் எதிர் கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் முரளிதரன் அரசாங்கத்துடன் நன்கு ஒத்தூதுகின்றார் என்று மக்கள் அவர் மீத வெறுப்பு கொண்டிருக்கின்றார்கள். இதன் காரணமாக அமைச்சர் முரளிதரனுக்கு கடந்த காலங்களில் மாவட்டம் பரந்து இருந்த ஆதரவுகள் குறைந்து அவருடைய சொந்த இடமான கல்குடா தொகுதியை அண்டி சுருங்கியுள்ளது. இந்த பலவீனமான நிலையில் இருந்துதான் எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலை கருணா அம்மான் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. கருணா அம்மானை வைத்து கிழக்கு மாகாணத்தில் தமது கட்சிக்கு பலத்த ஆதரவு சேர்க்கலாம் என்று சி.சு.கட்சி நம்பியிருக்கின்றது. ஆனால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையே எதிர்வரும் தேர்தலில் சி.சு.கட்சிக்கு கிடைக்கக்கூடிய களநிலைமைகளே இங்கு இருக்கின்றது. கிழக்கு மாகாணமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட கருணா அம்மானுக்குரிய ஆதரவுத்தளம் வெகுவாகக் குறைந்துள்ளது. மறுபுறம் நியமன எம்.பி. பதவியும், அமைச்சு பதவியும் ஒருமுறை மட்டுமே இனாமாகக் கிடைக்கும் என்பதை கருணா அம்மானும் தெரிந்தே வைத்திருக்கின்றார். எதிர்வரும் தேர்தலில் தனது வாக்குப் பலத்தை நிரூபித்துக்காட்ட வேண்டிய இக்கட்டான நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கின்றார். தேர்தலில் வெற்றிகொள்வது மட்டும்மல்ல கடந்த தேர்தலில் சந்திரகாந்தன் பெற்றுக்கொண்ட 43000 வாக்குகளை விட கூடிய வாக்குகளைப் பெறவேண்டும் என்பது அவர் இன்று தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற சவாலாகும். இந்த கணக்குவழக்குகளை ஒட்டியே மட்டக்களப்பு மாவட்டத்தில் தனக்கு எதிராக போட்டியிடக்கூடிய ரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்களை தமது பக்கம் இழுத்து அவர்களது வாக்கு வங்கியில் இருந்து தனக்கும் ஒரு விருப்புவாக்கைப் பெற்றுக்கொள்ள அவர் பகிரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையிலேயே மேயரை மடக்கிப்பிடித்து சி.சு.கட்சியில் சேர்க்கும் முயற்சியில் கருணா அம்மான் வெற்றி பெற்றிருக்கின்றார். இதுவே மேயர் சிவகீதாவின் கட்சித்தாவலின் சூத்திரமாகும்.
கு.சாமித்தம்பி



0 commentaires :

Post a Comment