ஈரான் ஜனாதிபதியாக கலாநிதி மஹ்மூத் அஹமதி நெஜாத் மீண்டும் தெரிவுசெய்யப் பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கலாநிதி நெஜாத் 65% வாக்குகளைப் பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளாரென்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 52 வயதான அஹமதி நெஜாத் ஈரானின் ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் பதவியேற்கின்றார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமரான மிதவாத அரசியல்வாதியாகக் கருதப்படும் மிர் ஹுசேன் முசாவி 32.05% வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பழைமைவாதியான அஹமதி நெஜாத்துக்குக் கிராமப்புற மக்கள் 75% வாக்களித்துள்ளனர். ஈரானின் 46.2 மில்லியன் வாக்காளர்களில், ஒரு கோடியே 40 இலட்சத்து 11,668 பேர் வாக்களித்துள்ளனர். எதிரணி வேட்பாளருக்கு 65 இலட்சத்து 75,844 பேர் வாக்களித்துள்ளனர்.
1979ஆம் ஆண்டின் இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர், நடைபெற்ற இந்த 10வது ஜனாதிபதித் தேர்தலிலேயே கூடுதலான மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்கு நாடு முழுவதும் 45,713 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தபோதிலும், மக்கள் அலை அலையாக வாக்களிக்கவென திரண்டு வந்தனர். இதனால் வாக்களிப்பு நேரத்தை இரண்டு மணித்தியாலம் அதிகரிக்க தேர்தல் ஆணையம் தீர்மானித்தது.
மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததால், வாக்களிப்பு நிறைவடைந்ததும் உடனடியாக செய்தியாளர் மாநாட்டைக் கூட்டிய முன்னாள் பிரதமர் ஹுசேன் மூஸ்வி, தாம் இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதியென அறிவித்திருந்தார். ஆனால், நேற்றுக் காலை முதல் வெளியான முடிவுகளின்படி ஜனாதிபதி அஹமதி நெஜாத் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மக்கள் வீதிகளில் திரண்டு தமது வெற்றிக் களிப்பை வெளிப்படுத்தினர். இதனால், தலைநகர் தெஹ்ரானில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், ஜனாதிபதி அஹமதி நெஜாத்தின் வெற்றியை ஏற்க முடியாதென ஹுசேன் மூஸ்வி தெரிவித்துள்ளார். இது ஒரு மோசடியான தேர்தல் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், தேர்தலின்போது தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. குறுந்தகவல் சேவை, இணையத்தளம் என்பவையும் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 commentaires :
Post a Comment