அ.வரதராஜப்பெருமாள்
அன்பார்ந்த நண்பர்களே!ஆற்றல் மிகுந்த தோழர்களே!
ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.! புலிகளை யாரும் வெல்ல முடியாது.! புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளையும் கொண்டிருக்கிறார்கள்.! காற்றுப் போக முடியாத இடங்களுக்குள் கூட புலிகளின் உளவுப்படை புகுந்து எதிரியின் தகவல்களை எடுத்து விடும்.! புலிகள் இலங்கையின் தேவேந்திர முனையிலிருந்து இமயத்தின் அடிவரை யாரையும் மனிதக் குண்டால் வெடித்துக் கொல்லும் வல்லமை கொண்டவர்கள்.! புலிகள் தீர்மானித்தால் சங்கானை தொடக்கம் சென்னைவரை, வல்லை தொடக்கம் டெல்லி வரை, பலாலி தொடக்கம் பாரிஸ் வரை, அரியாலை தொடக்கம் அயர்லாந்து வரை, தொண்டமானாறு தொடக்கம் ரொறன்ரோ வரை, பூநகரி தொடக்கம் பெர்லின் வரை யாரையும் அவர்கள் கொல்லுவார்கள். அவாகள் யார் காலையும் கையையும் அடித்து முறிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.! உலகின் நான்காவது பெரும் படையையே தோற்கடித்தவர்கள் புலிகள்.! உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரையும்; புலிகளின் துப்பாக்கிகளுக்குப் பயந்து நடுங்கி பிடரி குளிரும் நிலையில் ஒவ்வொரு கண நேரமும் வைத்திருந்தவர்கள்! ஹிட்லரே அறிந்திடாத வகையான சித்திரவதை முகாம்களை கண்டுபிடித்து நிறுவுவதல் புலிகள் மிகத்தேர்ந்த படுகொலை விற்பன்னர்கள்;! அவர்கள் தமிழீழம் எடுக்காமல் விடவேமாட்டார்கள்.!புலிகளிடமிருந்து ஓரடி மண்ணைக் கூட சிங்களப் படைகளால் கைப்பற்ற முடியாது.! ஒரு புலியைக் கூட சிங்கள இராணுவத்தால்; கைது செய்ய முடியாது ஏனென்றால் புலிகள் ஒன்றில் போராடிச்சாவார்கள் அல்லது தம்மைத்தாமே வெடித்துச் சாவார்கள் அல்லது கழுத்தில் தூங்கும் சைனட்டைக் கடித்துச் சாவார்கள்.! உலகில் எந்த சக்தியாலும் புலிகளின்; ஓர் அணுவைக் கூட அசைக்க முடியாது....... பிரபாகரனின் நிழலைக் கூட நெருங்க முடியாது! இப்படியான கருத்துக்களே இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் வரை தமிழர்களில் பெருந்தொகையானோரின் சிந்தனைகளை நிறைத்து நின்றன. தமிழர்கள் மத்தியிலென்ன சிங்களவர்களிற் கணிசமானவர்களிற் கூட அப்படித்தான் இருந்தது. உலகின் பல பாகங்களிலும் பெருந்தொகையான அரசியலாளர்கள், கல்வியாளர்கள் பத்திரிகைக்காரர்கள், என பல தரப்பட்டவர்கள் மத்தியில் அவ்வாறான அபிப்பிராயமே இருந்தது.
ஆனால் சிறிலங்கா இராணுவம் ஒரு மூச்சுப்பிடித்து தாக்கிய போதுதான் புலிகளின் இராணுவ பலவீனங்களும் போலித்தனங்களும் வெளிப்பட்டன. •புலிகள் ஒரு தொடர் நேரடி யுத்தத்துக்கு தகுதியற்றவர்கள் என்பது தெரிய வந்தது. கொரில்லாப் போர்த் தந்திரத்துக்கு மாறும் வல்லமையையும் புலிகள் இழந்து விட்டார்கள் என்பது புரிந்தது. •புலிகள் கட்டியிருந்ததெல்லாம் ஒரு மாயமாளிகையே என்பது அம்பலமானது. •புலிகளிடம் நீண்டகாலப் போருக்கு உரியவகையான எந்தவித தயாரிப்பும் இருக்கவில்லை யுத்த உபாயங்களும் இருக்கவில்லை என்பது வெளிப்படையானது.
•புலிகள் தாங்கள் தமிழீழ முப்படைகள், தமிழீழ பொலிஸ் நிலையங்கள், தமிழீழ நீதிமன்றங்கள், தமிழீழ வங்கி, தமிழீழ சிவில் நிர்வாகம் எனக் காட்டிய பிரமாண்டங்களெல்லாம் சினிமாப் படப்பிடிப்புக்குப் போடப்பட்ட காட்சி செட்டுகள்;, வேஷங்கள் போன்றவையே என்பது அம்பலமானது. •புலிகளின் விமானப் படையைப் பற்றி உலக அதிசயத்தைப் போல் பேசினார்கள். கடைசியாக அவைகள் குண்டுகளைக் கட்டிக் கொண்டு வான வேடிக்கை காட்டிய பறக்கும் தகரப்பெட்டிகள் என்னும் குட்டு வெளிப்பட்டது.
•மாவிலாறில் ஓடத் தொடங்கிய புலிகள் கடைசியாக முள்ளிவாய்க்காலில் சரணடைகின்ற வரை ஒரு இடத்தில் கூட அரச படைகளுக்கு முன்னால் புலிகளின் தரைப்படை ஏன் நின்று பிடிக்க முடியாமற் போனது. ஏனென்றால் வன்னியின் பள்ளிக் கூடங்கள் ஒவ்வொன்றிலுமிருந்தும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மிரட்டி விட்டு வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான சிறுவர்களைக் கொண்டு கட்டப்பட்டதே புலிகளின் பிரமாண்டமான தரைப்படை. அந்த அப்பாவிச் சிறார்கள் முன்னால்போன போது அரசபடைகளால் சுடப்பட்டார்கள் பின்வாங்கி ஓடிய போது புலித் தளபதிகளால் சுடப்பட்டார்கள் ஆக மொத்தத்தில் பாவம் அவர்கள் சிட்டுக் குருவிகள் போல் செத்து மடிந்தார்கள்.
புலிகளின் தளபதிகளோ அரச படைகள் முன்னேற முன்னேற தாம் மட்டும் தப்புவதற்காக தொடர்ந்து கால் பிடரியில் அடிபட ஓடினார்கள். ஓடினார்கள் ஓடினார்கள் நந்திக் கடலின் ஓரம் வரை ஓடினார்கள. ஒரேயொரு இடத்தில் மட்டும் அவர்கள் முன்னோக்கி நடந்தார்கள். கடைசியாக ஓடவழியில்லாமல் போனபோது கைகளைத் தூக்கியபடி அரசபடைகளை நோக்கி முன்னே நடந்து போய் காலடியில் விழுந்தார்கள்.
•சிறீ லங்கா அரசின் எத்தனையோ நவீன போர்ப்படகுகளையும் பல கப்பல்களையும் அடித்து கடலில் மூழ்கடித்த புலிகளின் கடற்படை எப்படி காணாமற் போனது. புலிகளின் கடற்படை ஒரு கள்ளக்கடத்தலுக்கான படையே தவிர வேறோன்றுமில்லை என்பதை பலரும் புரியத் தவறிவிட்டார்கள். அந்தப் படையால் இரவோடிரவாக இரகசியமாக திட்டமிட்டவகையில் எதிர்பாராத வகையான தாக்குதல் மூலம் அரசின் போர்ப்படகுகளை ஆங்காங்கே தாக்கி அளிக்கலாம். அதற்கு மேலாக ஒரு அரசின் முறையான கடற்படையமைப்பை வெல்லும் திறன் ஒரு கள்ளக்கடத்தல் கடற்படைக்கு எவ்வகையிலும் ஏற்படமுடியாது என்பதே இங்கு வெளிப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அரச படைகள் முறையாக தொடர்தாக்குதலை நடாத்திய போது புலிகளின் அத்தனை போலி அமைப்புக்களும் பொலு பொலுவென உலுந்து கொட்டிச் சின்னாபின்னமானதையே கடந்த சில மாதங்களில் நாம் கண்டோம்.
1980களில் பிரபாகரனை சிலர் சேகுவேரா மற்றும் அமில்கார் கப்ராலுடன் ஒப்பிட்டார்கள்... புலிகள் இந்திய இராணுவத்துடன் சண்டையிட்ட போது பிரபாகரனை ஒரு சிலர் மாவோ சே துங் மற்றும் ஹோ சி மின்னுக்கு கொஞ்சமும் சளைக்காதவர் என்றார்கள்... 1990களில் புலிப்பிரச்சாரகர்கள் பிரபாகரனை யசீர் அரபாத்துடனும் மற்றும் நெல்சன் மண்டேலாவுடனும் சமப்படுத்தினார்கள்..... 2000ம் ஆண்டுகளில் புலி ஆதரவாளர்கள் பிரபாகரனை பூமியில் தோன்றிய சூரியதேவன் என தங்களைத் தாங்களே ஏமாற்றி கொண்டாடத் தொடங்கினர்கள்; ......
ஆனால் 2009ம் ஆண்டு அதே பிரபாகரன் கைகளைத் தூக்கியபடி சிங்கள இராணுவ வீரர்கள் முன்னால் சினிமாப் படங்களில் வரும் வில்லன் கடைசியாக கதாநாயகன் காலில் விழுந்து உயிர்ப்பிச்சை கேட்பது போல சரணாகதி அடைந்தபோதுதான் இவ்வளவு குரூரங்களுக்கும் கொடூரங்களுக்கும் ஒழித்து நின்று தலைமை தாங்கிய பிரபாகரன்…. முப்பதாயிரம் தமிழ் இளைஞர்களைப் பலிக்கடாவாக்கிய பிரபாகரன்,,,, மூன்று இலட்சம் அப்பாவித் தமிழ் மக்களை கேடயமாக வைத்திருந்த பிரபாகரன் கேவலம் எவ்வளவு தூரம் தன் உயிர் மேல் மட்டும் ஆசை கொண்ட ஒரு கோழை, பொய்யன், போலித்தனமான ஆள் என்பது அம்பலமாகியுள்ளது.
1974ம் ஆண்டு ஆனி ஐந்தாம் நாளில்; பொலிஸால் சுற்றி வளைக்கப்பட்டு தப்ப முடியாது என்ற நிலை வந்த போது சைனட் அருந்திச் செத்த அந்த மாவீரன் சிவகுமாரனுடன் எவரும் பிரபாகரனை ஒப்பிட வேண்டாம். இந்த 2009 ஆண்டின் மே மாதத்தின் ஒரு நாளில் முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பில் அரச படைகளுக்கு எதிராக யுத்த களத்தில் சண்டையிட்டு குண்டடிபட்டு இறந்திருக்கக் கூடிய ஒரு 14 வயது சின்னப்பையனின் அல்லது அவ்வாறே அங்கு இறந்திருக்கக் கூடிய ஒரு சாதாரண சிங்கள இராணுவ வீரனின் காலடித் தூசுக்குக் கூட பிரபாரன் சமனாக முடியாது.
1987ம் ஆண்டின் இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டிற்குப் பின்னர் புலிகள் இதுவரை நடாத்திய இந்த யுத்தத்தில்:-•உலகில் எங்கும் இல்லாதவாறு ஒரு லட்சம் கோடி ரூபாக்களுக்கு மேல் செலவழித்திருக்கிறார்கள். இதில் ஐம்பதாயிரம் கோடி ரூபாக்களுக்கு (சுமார் 5000 மில்லியன் டாலர்களுக்கு) மேற்பட்டவை தமிழர்களிடமிருந்து மிரட்டி பறித்த கப்பங்களும் வெருட்டி வசூலித்த கொள்ளை வரிகளும் பொய்சொல்லித் திரட்டிய கொடைகளுமே. மிகுதி போதை மருந்துகள். தங்கங்கள் வைரங்களை சர்வதேச அளவில் கள்ளக்கடத்தியதாலும் சில சர்வதேச நாடுகளின் கொடுப்பனவுகளாலும் திரட்டப்பட்டவை.
•1990க்கும் 2009க்கும் இடையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ்மக்களை யுத்தத்தில் சாகக் கொடுத்திருக்கிறார்; இவ்வேளை 25000க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை புலிகளென யுத்த களத்திலும் சைனட்டைக்கடித்தும் சாகப் பண்ணியிருக்கிறார்கள்
•10000க்கு மேற்பட்ட ஆற்றல்மிக்க சமூக உணர்வு கொண்ட தமிழர்களை தலைவர்களை சமூகப்பிரதிநிதிகளை துரோகிகள் என படுகொலை செய்திருக்கிறார்கள்.
•வடக்கு கிழக்கு மாகாணத்தமிழர்கள் அனைவரினதும் வீடுவாசல்கள், தொழில் மூலதனங்கள்;, கல்விநிலைங்கள், பொதுக்கட்டிடங்கள் அனைத்தையும் அழியப்பண்ணினார்;கள் (இவற்றின் பெறுமதியும் சுமார் 5000 மில்லியன் டொலர்களென மதிப்பிடப்படுகிறது),
•இந்தக்காலகட்டத்தில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோரை மேலைத்தேய நாடுகளுக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை இந்தியாவுக்கும் அகதிகளாக ஊரைவிட்டு ஓடப்பண்ணியிருக்கிறார்கள்.
•ஒரு லட்சம் முஸ்லிம் மக்களை அவர்கள் பலநூறு ஆண்டுகளாக பல தலைமுறைகளாக வாழ்ந்துவந்த இடங்களிலிருந்து துரத்தினார்கள்.
•ஊருக்குள்ளேயே பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அகதிகளாகுவதற்கு காரணமானார்கள். அவர்களை சிங்கள இராணுவ வீரர்கள் முன்னால் கையேந்தி பிச்சையெடுக்கும் வாழ்க்கைக்கு உள்ளாக்கினார்கள்.
புலிகள் விதைத்த அழிவுகளையும் இழப்புக்களையும் துன்பங்களையும் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையும் செய்த இத்தனைக்கும் காரணமான புலிகள் தமிழ் மக்களுக்குப் பெற்றுத் தந்த நன்மையென்று எந்தவொரு துளியுமேயில்லை.
நண்பர்களே! தோழர்களே! ஒவ்வொரு தமிழரையும் கடந்த காலத்தை மீட்டுப் பார்க்கும்படி செய்யுங்கள்
•எமக்கேற்பட்ட எல்லா அவமானங்களையும் புறக்கணித்து எல்லா அவச்சொற்களையும் தாங்கியபடி விடாப்பிடியாக இந்தியாவின் நண்பர்களாக கூடிநின்று அதன் துணையை முறையாக்கி வடக்கு-கிழக்கு மாகாண சபை மூலம் நாம் தேடிவைத்த நன்மைகளை யெல்லாம் புலிகள் பிரேமதாசாவுடன் கூடி நாசம் செய்தார்கள்.
•பிரேமதாசாவினதும் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சக்திகளினதும் சதிவலைக்குள் விழுந்த புலிகள் தமிழர்களோடு நின்ற இந்தியாவை தமிழர்களிடமிருந்து தூரம் போகும்படி விலக்கினார்கள்
•சந்திரிகா அவர்கள் தமிழர்களுக்கு அநியாயம் நடந்திருக்கின்றது என்பதை ஒரு இயக்கமாக்கி அதனை தானாகவே சிங்கள மக்கள் மத்தியில் பரப்பினார். ஆகவே தமிழர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்தார். அவர் தானாக நாடி வந்து முன்வைத்த அரசியல் தீர்வு நன்மையை புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் யுஎன்பியுடன் கூட்டமைத்துக் கொண்டு நின்று எட்டியுதைத்து தூர ஓட்டினார்கள்,
•ரணிலின் ஆட்சிக் காலத்தில் உலக நாடுகள் ஒருங்கு திரண்டு வழங்குவதற்க முன்வந்த நிறைவான மாநில சுயாட்சி அமைப்பை புலிகள் ஏறெடுத்தும் பார்க்க மறுத்து இறுமாப்புக் காட்டினார்கள். தம்மை அசைக்க முடியாது என்ற அகங்காரத்தில் கடல் வானம் பூமி ஆகியவற்றின் மீது அனைத்து இறைமையும் புலிகளுக்கே என்றார்கள், புலிகளின் சண்டியர் படைகளையும், பொடிசுகள் கொண்ட பொலிஸையும் கங்காரு நீதிமன்றங்களையும் வடக்கு கிழக்கு மக்கள் மீதான கட்டற்ற கட்டுமிராண்டி அதிகாரங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்று கொக்கரித்தார்கள். இல்லையென்றால் சிங்கள இராணுவத்தினரின் 40000 சவப்பெட்டிகள் தென்னிலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும், தென்னிலங்கை முழவதுவும் குண்டு மழை பொழியும், சிங்களவர்களின் நாடும் வீடுகளும்; சுடுகாடாகும் என்று புலிகள் மிரட்டினார்கள்.
•ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் ஆரம்பத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கித்தான் நின்றார்கள். அதனால்த்தான் அவர்கள் ஜெனீவாவில் புலிகளுடன் பேசி சமாதானமாக ஒரு தீர்வைக் கண்டுவிட நோர்வேயின் துணையை நாடினார்;கள். ஆனால் ஜெனீவா சென்ற புலிகளோ சிறிலங்கா அரசினதும் உலக நாடுகளினதும் முயற்சிகளை கிண்டலடிக்கும் வகையில் பேச்சுவாத்தையில் அக்கறை காட்டாமல் ஐரோப்பிய நாடுகளின் உல்லாச பகுதிகளில் சுற்றுலா வந்தார்கள்.. ... ... அங்குள்ள ஒவ்வொரு நாட்டிலும் தமது ஆதரவாளர்களை உசுப்பேத்திவிட்டு காசு கறப்பதிலேயே கண்ணாக இருந்தார்கள்.
•தமிழீழப் பிரிவினையைத் தவிர வேறெந்தத் தீர்வைப் பற்றி எந்த ஒரு தமிழர் பேசினாலும் அதற்காக முயற்சித்தாலும் அவரைத் துரோகியெனப் பிரகடனப்படுத்தினார்கள் - படுகொலை செய்து கொண்டாடினார்;கள். புலிகள் தமிழர்கள் மீது நடத்திய படுகொலைகளைத் தட்டிக் கேட்பதற்கு யாருமே இருக்கவில்லை. இவ்வாறாக யமனுக்கு அப்புறம் எந்தவொரு தமிழனதும் உயிரை எடுக்கும் உரிமை பிரபாகரனுக்கே உரியது என்னுமோர் நிலைமையே நிலவியது.
•1957 தொடக்கம் 1983 வரைக்கும் சிங்களத் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தவில்லை - கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்பது வரலாறு. அதுபோலவே 1985ம் ஆண்டு தொடக்கம் பொட்டுகள் வைத்த பொட்டன் உட்பட பொட்டு வைக்கப்பட்டுப் போகின்ற வரை பிரபாகரனின் புலி அமைப்பானது, தமிழர்களுக்கு எந்த நன்மையும் எவராலும் கிடைத்து விடாமல் தடுத்து விட்டமையும் தமிழர்களின் வரலாறே. சிங்களத் தலைவர்களுக்கும் ஜனநாயகரீதியான தமிழ்த் தலைவர்களுக்குமிடையே ஒரு நியாயமான அரசியல் உடன்பாடு ஏற்பட்டு விடாமல் புலிகள் பெரும் முட்டுக்கட்டையாக இருந்ததுவும் நடந்து முடிந்துள்ள - மறுக்கமுடியாத - மறைக்க முடியாத வரலாறே.
•தமிழர்களுக்கு அரச அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க கூடாது என்று செயற்படும் சிங்கள இனவாதிகள் எதையெல்லாம் செய்ய நினைத்தார்களோ - எவற்றைச் செய்யவெல்லாம் முயற்சித்தார்களோ அவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற்கு புலிகள் மிகவும் துணையாக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதை தமிழர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே புலிகளின் இந்த அழிவு தமிழர்களை முற்போக்கான பாதையில் வழி நடப்பதற்கான வாய்ப்புக்களைத் திறந்து விட்டிருக்கிறது. சிங்கள இனவாதத்தின் தமிழருக்கு எதிரான குறுகிய நோக்கங்களை பின்னடையச் செய்திருக்கிறது என்பதில் தமிழர்களுக்கு தெளிவான கண்ணோட்டம் வேண்டும். புலிகளின் அழிவை சிங்களவர்கள் கொண்டாடியதைவிட அதிகமாக தமிழர்களே உண்மையில் கொண்டாடியிருக்க வேண்டும். ஏனென்றால் புலிகள் தொடர்ந்தும் இருந்திருந்தால் இன்னும் சில ஆண்டுகளில்;:
•இன்னும் சில லட்சம் தமிழர்கள் சுடுகாடுகளில் கல்லாகியிருப்பார்கள்
•இன்னுமொரு எட்டு லட்சம் பேர் கனடாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் போய்ச்சேர்ந்திருப்பார்கள்.
•எஞ்சியிருக்கும் ஜனநாயக ரீதியான தமிழ்த் தலைவர்களும் துரோகிகளென கொல்லப்பட்டிருப்பார்கள்.
•இலங்கையை ஒரு சுத்தமான சிங்கள நாடாக்கும் சில சிங்கள இனவாதிகளின் ஆசையை புலிகள் நன்றாகவே நிறைவேற்றிக் கொடுத்திருப்பார்கள்.
புலிகளின் அழிவு தமிழருக்கு எதிரான அந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது என்ற அடிப்படை உண்மையை தமிழர்கள் மனச்சாட்சியுடன் பரிந்து கொள்ள வேண்டும்..
இப்போது இருக்கும் மற்றும் ஏற்பட்டுள்ள நிலையென்ன:
•தமிழர்கள் மத்தியில் ஆற்றலும் நேர்மையும் கொண்டிருந்த பல மூத்த தலைவர்களும் பெருந்தொகையான இளம் தலைவர்களும் புலிகளால் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
•சமூக உணர்வு கொண்ட அறிவார்ந்தோர் பலர் உள்நாட்டில் தம் தலைகளை உள்ளடக்கி வாய்மூடி வாழும் மௌனிகளாக்கப்பட்டார்கள்
•அவ்வாறான பல்லாயிரக்கணக்கானோர் தமது உயிர்களைக் காப்பாற்றவும் தமது வாழும் வாய்ப்புக்ளைத் தக்க வைக்கவும் தவிர்க்க முடியாதபடி வெளிநாடுகளுக்கு தப்பியோட வைத்துவிட்டது.
•பிரபாகரனின் கொலைகார யந்திரமானது கொலைவெறி மனநோயாளிகளையும், தூஷணபூஷண சண்டியர்களையும் அந்த யந்திரத்துக்கு வணங்கித் துதிபாடி ஆட்கள் கூட்டும் புத்திஜீவிகளையும் தமிழர்களின் அழிவில் இழப்பில் பணம் பதவி சுகங்களை குவித்துக்கொள்ளும் அவாகொண்ட பிணந்தின்னிகளையுமே சமூகத் தலைவர்களாக விட்டுவைத்துள்ளது.
•பிரபாகரன் உருப்போட்டுக் கொடுத்ததைத் தவிர வேறேதைப்பற்றியும் பேசக் கூடாத – பேசத் தெரியாதவாறு நலமடிக்கப்பட்டவர்களே கடந்த இருபது வருடங்களாக தமிழ்; மக்கள் மத்தியில் தலைவர்களாக, அறிவாளிகளாக, நடமாட வாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள்;.
அந்த நிலைமையில் மாற்றங்களை உருவாக்குவதற்கான வழிகளைக் கொண்ட கதவுகள் இப்போது திறக்கப்பட்டிருக்கின்றன.
•இனி தமிழர்கள் மத்தியில் விவாதங்கள் நடக்கட்டும்! ஆயிரம் கருத்துக்கள் மோதட்டும்!
•திறந்த மனதுடன் விமர்சனங்கள் வெளிவரட்டும்!
•ஆக்கபூர்வமான கருத்துக்கள் மக்கள் அரங்கங்களை ஆக்கிரமிக்கட்டும். அவையே ஒரு சமூகத்தின் ஆரோக்கியமான முற்போக்கான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
நேர்மையும், உண்மையும், அறிவாற்றலும், அனுபவமும், சமூகப் பொறுப்புணர்ச்சியும், பொறுமையாகவும் அதேவேளை உறுதியாகவும் விடயங்களைக் கையாளும் தகுதியும், ஜனநாயகக் கலாச்சாரத்தில் மனமார்ந்த கடைப்பிடிப்பும், மாற்றுக் கருத்துக்களையும் மதித்து கணக்கில் எடுத்துக் கொள்ளும் பண்பாடும். எதிர்க் கட்சிக்காரர்களாயினும் மனிதாபிமானத்தோடும் பண்போடும் நடந்து கொள்ளும் குணாம்சமும் கொண்ட தலைவர்கள் சமூகத்தில் இருந்து உருவாக வேண்டும். அவர்கள் மக்களின் உண்மையான அன்புக்குப் பாத்திரமான பிரதிநிதிகளாகத் தலையெடுக்க வேண்டும். புலிகள் அழிக்கப்படாமல் இருந்திருந்தால் அதற்கான எந்தவாய்ப்பும் தமிழர் சமூத்தில் ஏற்பட்டிருக்க மாட்டாது.
தமது சுய அறிவு மற்றும் தமது அரசியல் ஆற்றல் மீது நம்பிக்கையற்றவர்கள் ஆனால் தாம் மட்டும் தனித் தலைவர்களாக அரசியல் வியாபாரம் நடத்தும் நிலைமை இருக்க வேண்டும் என்பதற்காக சமூகத்தில் தனிமனித அடிப்படைச் சுதந்திரங்கள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், முயற்சிப்பவர்களின் கதைகளும் புலிகளின் முடிவோடு முடிவடைந்தவையாகட்டும்.
தமிழர்களின் போராட்டம் இலங்கையைப் பிரிக்கும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக தமிழர்களுக்கு நியாயமானதொரு அரசியற் தீர்வையே கோரிநிற்கின்றது என்பதைத் தெளிவாக சிங்கள மக்களுக்கும் உலகுக்கும் எடுத்துக் கூறுவதற்கான சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகளை நிலைநாட்டுவதற்கு ஆயதப் போராட்டம் தவிர்க்கமுடியாத அவசியம் என ஒரு கட்டத்தில் உணரப்பட்டது. ஆனால், ஆயதப்போராட்டம் புலிகளால் பிழையான மார்க்கத்துக்கும் நோக்கங்;களுக்கும் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டது.
•அது தமிழ் மக்கள் மத்தியில் இருந்த கொஞ்சநஞ்ச ஜனநாயக அம்சங்களையும் குழி தோண்டிப்புதைத்து, தமிழர்கள் மத்தில் நிலவிய ஒற்றுமையைச் சீhகுலைத்து பெருந்தொகையான தமிழர்களை விரக்தியின் எல்லைக்குத் தள்ளியது.
•அது தமிழ் மக்களிலிருந்து பரந்துபட்ட சிங்கள மக்களை அந்நியப்படுத்தியது. பகைமைகளையும் சந்தேகங்களையுமே மேலும் வளர்த்திருக்கிறது,
•இந்தியாவைத் தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்தியது,
•தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இருந்த நம்பிக்கைகளை எல்லாம் தகர்த்தது
•உலக நாடுகளில் தமிழர்களுக்கு இருந்த அநுதாபங்களை இல்லாமற் செய்ததோடு தமிழர்கள்pன் போராட்டம் பிரிவினைவாதம் பயங்கரவாதங்களையே அடிப்படையாகக் கொண்டது என்ற அபிப்பிராயத்தையே உறுதி செய்தது.
•எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளின் யுத்த வல்லமை பற்றிய மாயையில் தமிழர்கள் தங்களுக்கு உண்மையில் எவ்வாறானதோர் அரசியற் தீர்வு வேண்டும்? அதை எப்படிப் பெறுவது? யார் அதைப் பெற்றுத் தருவார்கள்? என்ற கேள்விகளைக் கேட்கத் தெரியாவர்களாக, யாரும் தர்க்கபூர்வமாகக் கேட்டாலும் சரியாக பதில் சொல்லத் தெரியாதவர்களாக புலிகளின் பிரச்சாரங்களாலும் புலிகள் தொடர்பான கண்மூடித்தனமான நம்பிக்கைகளாலும் மூளை மழுங்கடிக்கப்பட்டவர்களாக ஆக்கப்பட்டார்கள்.
•புலிப்பிரச்சாரங்களைத் தவிர வேறெதுவும் தமிழ் மக்களை நாட முடியாது என்று இருந்த நிலைமையில் இனி மாற்றங்கள் ஏற்படும்.
•புலிகளைத் தவிர வேறெவருடனும் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகத் தொடர்பு கொள்ள முடியாது என்று இருந்த நிலைமையும் இனி மாறும்.
எனினும் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களெல்லாம் திடீரென நிகழ்ந்துவிடமாட்டா. புலிகள் கடந்த இருபது ஆண்டுகளாக தனிக்காட்டு ராசாக்களாக தமிழர்களின் மூளையில் ஊட்டிய மாயையிலிருந்து விடுபட சில காலங்கள் எடுக்கவே செய்யும். தமிழ் மக்களின் நலன்கள் மீது உண்மையான தெளிவான நிலைப்பாடு கொண்டவர்கள் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். புலிகளுக்கெதிரான யுத்தத்தின் காரணமாக தமிழர்களின் பிரதேசங்கள் பூராகவும் இராணுவ ஆட்சிகளே நடக்கின்றன. இவை படிப்படியாக அரசினால் மாற்றியமைக்கப்பட்டு திருப்திகரமாக சிவில் அமைப்புக்களின் நிர்வாகம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
பலரிடமும் உள்ள கேள்வி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழர்களுக்குத் திருத்தியளிக்கக் கூடிய அரசியற் தீர்வை முன்வைப்பாரா? நடைமுறைப்படுத்துவாரா? என்பதே. இப்போதைக்கு அவர் விரைவில் குறைந்த பட்சமாவது திருப்தி அளிக்கக் கூடியதோர் அரசியற் தீர்வை முன்வைப்பார், நடைமுறைப்படுத்துவார் என தற்காலிகமாவேனும் எதிர்பார்ப்போம், இந்தியாவும் உலக நாடுகளும் அவர் அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்தும் என இப்போதைக்கு நாம் நம்புவோமாக.
முதலில்
•அகதிகளாக வன்னியிலும் கிழக்கிலும் யாழ்ப்பபாணத்திலும் தமிழகத்திலும் அல்லல்பட்டு நிற்கும் மக்கள் அவரவரவர் இடங்களுக்கு சுதந்திரமாக மீண்டும் திரும்பி சுயாதீனமாகவும் கௌரவமாகவும் வாழும் நிலை ஏற்பட வேண்டும்,
•அழிந்துபோன எமது நகரங்கள் கிராமங்கள் அனைத்தும் மீண்டும் புத்துணர்ச்சி கொண்டவையாக இயங்கும் வகையில் புனர்நிர்மாணங்கள் செய்யப்படட்டும்,
•எமது தேசத்தின் தெருக்கள், புகையிரதப்பாதைகள் கல்விச்சாலைகள் வைத்தியசாலைகள் பொது நிர்வாகக் கட்டிடங்கள் அனைத்தும் மீண்டும் கட்டப்படட்டும்,
•எமது மண்ணில் விவசாயம் மீன்பிடித் தொழில்கள், கைத்தொழிற்சாலைகள், சுற்றுலாத் தொழில்கள், வர்த்தகங்கள் போன்றன மீண்டும் புதுஉற்சாகத்தடன் செயற்படும் நிலை ஏற்படட்டும்,
•சிதைந்து போன எமது சமூகம் மீண்டும் அதன் அரசியல் பொருளாதார கலாச்சார சமய சமூக நிறுவனங்களுடன் ஒன்று திரண்டு புது ஊக்கங்களுடனும் நம்பிக்கைகளுடனும் முற்போக்காக வாழும் நிலை ஏற்படட்டும்,
•சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையே உள்ள பரஸ்பர அரசியல் பொருளாதார சமூக நலன்களை நம்பிக்கைகளோடு இணைக்கும் உறவுகளுக்கான புதியதோர் சமூக ஒப்பந்தம் உருவாகுவதற்கான தளங்களும் களங்களும் பரந்துவிரியட்டும்
எதிர்காலத்தில் பெடியன்களின் இயக்கங்களாக இல்லாமல்,
•முறைப்படுத்தப்பட்ட பொறுப்புமிகுந்த தலைவர்களையும் பரந்துபட்ட மக்களை உறுப்பினர்களாகவும் கொண்ட கட்சிகள் தமிழர்களின் பிரதிநிதிகள் ஆக வேண்டும்.
•அஹிம்சை, நேர்மை. உண்மை, அனைத்து மக்கள் மீதும் அன்பு, ஜனநாயகக் கொள்கைகளி;ல் ஈடுபாடு, தன்னலமற்ற தியாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களாக அந்தக் கட்சிகள் உறுதியுடன் செயற்பட வேண்டும்.
•சமஷ்டி அரசியலமைப்பு, சமத்துவ பொருளாதாரம், சமநீதியான இன உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இனங்களுக்கிடையே நிரந்தரமான சமாதானம் மற்றும் பரஸ்பரமான சகோதரத்துவத்தை அடைவதற்கான அரசியற் கோரிக்கைகளையும் முற்போக்கான சமூக வளர்ச்சிகளை எய்துவதற்கான பொருளாதாரக் கோரிக்கைகளையும் கொண்ட மக்கள் இயக்கங்களை அக்கட்சிகள் விடாப்பிடியாக தீர்மானகரமாக தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
தமிழ் மக்கள் இனியாவது இங்கு கீழே குறிப்பிடப்படும் விடயத்தில் மிகத் தெளிவாக சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும்.
மக்களே தமது அரசியற் தலைமையைத் தீர்மானிக்க வேண்டும்!அந்தத் தலைமையே மக்களை சரியாக வழிநடத்த வேண்டும்!அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பது அன்று!மக்கள் எவ்வழி தலைவர்களும் அவ்வழியே என்பது இன்று!
மக்களின் பிழையான முடிவுகளும் ஆதரவுகளும் பிழையான தலைவர்களையே அவர்களுக்கு வழங்கும்.
ஆற்றிலே போட்டு விட்டு குளத்திலே தேடாதே என்பது பழமொழி! அதேபோல பிழையான சக்திகளுக்கு ஆதரவைக் கொடுத்துக்கொண்டு வேறு கட்சிகளிடத்தில் மக்கள் தமக்கான அரசியற் தீர்வைத் தேடுவது தவறாகும்.
மக்கள் தவறான பாதையில் போய்க் கொண்டிருந்தாலும் அவர்களை சரியான பாதையை நோக்கி வழி நடத்துவதற்கு விடாது முயற்சிப்பதே உண்மையான மக்கள் தலைவர்களின் கடமை.
எனினும் ஒரு சமூகத்தில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு உண்மையான தலைவர்களுக்குக் கிடைக்கும் வரை அச்சமூக மக்களை சரியான இலக்குகளை நோக்கி சரியான பாதைகளில் வழிநடத்திச் செல்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் அரசியல் முயற்சிகள் எந்தச் சபையிலும்; அங்கீகாரம் பெறமாட்டாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுவரை தமிழ் மக்கள் தவறான சக்திகளை நம்பியிருந்ததற்கும் அந்த சக்திகளுக்கு ஆதரவளித்ததற்கும் தமிழர்கள் மத்தியில் இருக்கும் பெருந்தொகையான புத்திஜீவிகள், மதத்தலைவர்கள் வர்த்தகர்கள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் இலக்கிப்படைப்பாளர்கள் என பலதரப்பட்டவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் இனியாவது உண்மையான சமூக அக்கறையோடு நேர்மையாக தமது கடந்தகாலத் தவறுகளை தாமாக உணர்ந்து தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்வுக்காக தமது நிலைப்பாடுகளை சரியான பாதைக்கு மாற்றி தமது சமூகப் பங்;மை வழங்க வேண்டும்.அதேவேளை புலிகளின் காரணமாக சமூகத்திலிருந்து அந்நியப்பட்டுப்போன கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் மக்களோடு நேரடியாகவும் மக்களின் பொது நலன்களோடும் தம்மை பரவலாகவும் விரிவாகவும் நெருக்கமாக்கிக் கொள்ளல் வேண்டும். ஜனநாயகரீதியான கட்சிகள் முடிந்தளவுக்கு குறைந்தபட்ச அரசியற் புரிதல்களின் அடிப்படையிலாயினும் ஐக்கியப்பட்டு செயற்படுவதன் மூலம் மக்கள் மத்தியில் எதிர்காலம் பற்றிய புதிய நம்பிக்கைகளை வளர்க்க வேண்டும். அதேவேளை புலிகள் விட்டுப்போன இடத்தில் தாமும் ஒரு பங்குக்கு மக்களை ஏமாற்றி சுரண்டிக் கொழுக்கலாம் என நரித்தனமாக முயற்சிக்கும் சுயநல சந்தர்ப்பவாத சக்திகள் மக்கள் மத்தியில் மீண்டும் காலூன்றி விடாது பார்த்துக்கொள்வதுவும் சரியான அரசியற் சக்திகளின் கடமையாகும்.எமது சமூகம் இதுவரை யுத்தத்தால் இழந்தது போதும்!எமது மக்கள் இதுவரை யுத்தத்தால் அழிந்தது போதும்!எமது இனம் இதுவரை போலிகளால் ஏமாற்றப்பட்டது போதும்!இனியாவது எமது சமூக மக்களுக்கு,நல்ல வல்லவர்கள் தலைவர்களாகட்டும்!நேர்மையானவர்;கள் வெற்றிகரமான பிரதிநிதிகளாகட்டும்!உண்மையானவர்கள் சரியான தடத்தில் மக்களை வழி நடத்தட்டும்!நாம் அனைவரும், இப்போது, •அகதிகளான மக்களின் புதிய மறுவாழ்வுகாக உழைப்போம்!•அழிந்து கிடக்கு எமது நகரங்கள் கிராமங்களின் புனரமைப்புக்காக ஒத்துழைப்போம்!தொடர்ந்து வரும் காலத்தில், •நாட்டில் புதியதோர் அரசியல் அமைப்புக்காகப் போராடுவோம்!•பறிக்கப்படிருக்கும் தனிமனித அடிப்படை சுதந்திரங்களையும் நாகரீகமான மனித உரிமைகளையும் மீள்நிறுத்துவோம்!•தேசத்திலுள்ள அடக்குமுறைகளுக்கு எதிராய் இயங்குவோம்!•சமூகத்திலுள்ள சாதிஒடுக்குமுறைகளுக்கு எதிராய் குரல் தருவோம்!•பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராய் எழுச்சி செய்வோம்!06-06-2009
thanks.thenee
0 commentaires :
Post a Comment