6/10/2009

வடபகுதிக்கு துரிதமாக மின்சாரம் வழங்க ரூ.9550 மில்லியன் ஒதுக்கீடு

வடபகுதிக்கு துரிதமாக மின்சார வசதி அளிப்பதற்காக 9550 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு நேற்று கூறியது.
வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் வடபகுதிக்கு துரிதமாக மின்சார வசதி அளிக்க 3650 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு, சகல கிராமங்களுக்கும் மின்சார வசதியளிக்கவென 5200 மில்லியன் ரூபாவும், மின் விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்க 700 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
வடபகுதிக்கு மின்சார வசதி வழங்குவதற்கான சில திட்டங்கள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய திட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் அனுமதியுடன் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதோடு இதன் கீழ் 30 வருடங்களாக பயங்கரவாதிகளால் சேதமாக்கப்பட்ட மின்மாற்றிக் கோபுரங்கள் மின் விநியோக உப நிலையங்கள் என்பன அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் கிராமிய மின்சாரத் திட்டங்கள் பலவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது-
ஜப்பான் பொருளாதார ஒத்துழைப்பு வங்கியின் 1400 மில்லியன் ரூபா கடனுதவியுடன் 132 கிலோ வோர்ட் மின் மாற்றிக் கோபுரத் தொகுதியொன்று வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரை நிர்மாணிக்கப்பட உள்ளது. இது தவிர 2250 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சியில் இருந்து சுண்ணாகம் வரை 132 கிலோ வோர்ட் மின் மாற்றிக் கோபுரத் தொகுதியொன்று புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
வடபகுதிக்கான மின் விநியோக திட்டங்களை மேம்படுத்துவதற்காக 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர மூன்று வருட திட்டத்தின் கீழ் வடக்கிலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிப்பதற்காக 5200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டபிள்யு டி. ஜே. செனவிரத்ன கூறினார்.
துரிதமாக மின்சார வசதி அளிக்கும் வகையில் 400 கிராமங்களில் கிராமிய மின்சார திட்டங்களும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


0 commentaires :

Post a Comment