5/27/2009

இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்திய அணிவகுப்பில் இஸ்ரேலிய சியோனிஸவாதிகளும் இணைந்து கொண்டுள்ளனர்!


சாருமணி
வன்னியில் புலிகளை அழிக்கும் இறுதி நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டிருந்த இறுதி நாட்களில், ஏகாதிபத்திய மேற்கு நாடுகளும், அவர்களது ஊடகங்களும், சில ஐ.நா அதிகாரிகளும், மனித உரிமை அமைப்புகள் என்பனவும் நடந்துகொண்ட முறையிலிருந்து, அவர்கள் புலிகளின் தலைமையைப் பாதுகாக்க முற்பட்டமை மிகத்தெளிவாகத் தெரிகின்றது. புலிகள் தோற்கடிக்கப்பட்டு, யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட, ஏதாவது ஒரு வகையில் இலங்கை அரசை பழிவாங்கும் எண்ணத்துடன் இந்த ஏகாதிபத்திய சக்திகள் செயல்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை அரசு உலகின் மிக மோசமான ஒரு பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடித்ததையிட்டு மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக, இந்த சக்திகள் இலங்கை அரசை நோக்கி விரல்களை நீட்டுவதன் காரணம் என்ன? இந்தக் கேள்விக்கான பதில் அரசியல் தெரிந்தவர்களுக்கு மிகச்சுலபமானது. இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், முன்னையது ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது என்பதையும், பின்னையது ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமானது என்பதையும் ஒருவர் விளங்கிக் கொள்வது அப்படியொன்றும் சிரமமானது அல்ல. முன்னைய காலங்களில் மேற்குலகுக்கு எதிராக இருந்த (சோவியத்துடன் சேர்ந்து) இந்தியாவைச் சுற்றி வளைப்பதற்கு, ஏகாதிபத்தியம் பாகிஸ்தானை தீனி போட்டு வளர்த்ததுடன், இலங்கையையும் கைக்குள் போடும் பாணியில் நடந்து வந்தது. ஆனால் இந்தியாவில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு, சோவியத்தும் தகர்ந்து, இந்தியாவில் பாரதீய ஜனதா ஆட்சியும், சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசுகளும் வந்த பின்னர், இந்திய – மேற்குலக தேன்நிலவு ஆரம்பமானது. அதன்பின்னர் பாகிஸ்தானும், இலங்கையும் பாவித்த கறிவேப்பிலைகளாக மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தால் தூக்கிவீசப்பட்டன. இலங்கை அரசின் ஆதரவு தேவை என்று கருதப்பட்ட காலத்தில், மேற்குலகம் புலிகளைத் தடைசெய்து, இலங்கை அரசைத் திருப்திப்படுத்தியது. ஆனாலும் அப்பொழுது கூட, வலதுசாரி பாசிச இயக்கமான புலிகளுடன் ஏகாதிபத்தியம் கள்ள உறவுகளைப் பேணியதுடன், நோர்வே ஊடாக பல்வேறு உதவிகளையும் அளித்து வந்தது. இந்த ‘பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும்’ ஏகாதிபத்திய விளையாட்டு, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் முடிவுக்கு வந்தது. மகிந்த அரசு புலிகளை ஒழித்துக்கட்டியே தீருவது என்று தீர்மானித்து நடவடிக்கையில் இறங்கியதும், எகாதிபத்தியமும் தனது சுயரூபத்தை வெளியே கொண்டு வந்தது. இலங்கைக்கு எதிராக பொருளாதார முற்றுகை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு, ஊடக சுதந்திர மீறல் கண்டனம் என அஸ்திரங்களை ஏவியது. ஆனால் அவையெல்லாம் இலங்கை அரசுக்கு ஆசிய நாடுகள் மற்றும் ரஷ்யா, ஈரான், லிபியா போன்ற நாடுகள் வழங்கிய ஆதரவால் தோற்றுப்போயின. மேற்குலகுக்கு எதிரான நாடுகள் ஓரணியில் நின்று இலங்கையை ஆதரித்ததால் கோபமடைந்த ஏகாதிபத்தியம், இப்பொழுது இலங்கைக்கு எதிரான ஒரு வெறிநிலைக்கு சென்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. ஏகாதிபத்தியத்தின் வெறிக்கோஷ்டியில் இப்பொழுது சியோனிஸ இஸ்ரேலும் இணைந்து கொண்டுள்ளது. அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமைப் பதவிக்கு இலங்கை தெரிவாவதிற்கு இஸ்ரேல் தனது எதிர்;ப்பைத் தெரிவித்ததின் மூலம் அதை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மோசமான நிலையில் இருப்பதால் தான், இலங்கை தலைமைப்பதவிக்கு தெரிவாவதை தான் எதிர்ப்பதாக அது காரணம் வேறு கூறியுள்ளது. இதைக்கேட்கும் போது, விழுந்து விழுந்து சிரிக்கத்தான் தோன்றுகிறது. ஏனெனில் 1947ல் இஸ்ரேல், அமெரிக்க – பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் வலிந்து உருவாக்கப்பட்ட நாளிலிருந்து, அது பாலஸ்தீன மற்றும் மத்திய கிழக்கு ஆசியா, வடஆபிரிக்கா அரபு மக்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள், ஹிட்லர் யூதர்களுக்கு எதிராக மேற்கொண்ட அட்டூழியங்களை தூக்கியடித்துவிடும் அளவுக்கு மோசமானவையாகும். அப்படியான ஒரு நாடு இலங்கையைப் பார்த்து மனித உரிமை மீறல் குறித்து கூக்குரலிடுவது வேடிக்கையே. உண்மையென்னவென்றால் இஸ்ரேலிய சியோனிஸவாதிகளின் ஏகாதிபத்திய அணிசேர்க்கையும், இலங்கைத் தமிழ் பிற்போக்கு சக்திகளுடனான தொப்புள் கொடி உறவுமே இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாகும். நீண்ட காலத்துக்கு முன்பே இனவாத, பிற்போக்குவாத தமிழரசுக்கட்சியின் தலைவர்கள், இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்கு இஸ்ரேலின் உருவாக்கத்தை முன்னுதாரணமாக சுட்டிக்காட்டுவது ஒரு வழமையாக இருந்து வந்துள்ளது. உலகம் முழுவதும், இஸ்ரேல் செய்துவரும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டித்து வந்தபோதும், தமிழ் தலைமைகள் ஒருபோதும் கண்டித்தது கிடையாது. தமிழ் மக்களின் விடுதலைக்கு போராடுவதாக தம்பட்டம் அடித்துவந்த இந்த தமிழ் தலைமைகள், பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஒரு சிறு ஆதரவு கூட தெரிவிக்காதது, அவர்களது ‘விடுதலை’ என்பது என்ன வகையானது என்பதைப் புரிந்து கொள்ள உதவும். பின்னர் தமிழ் பிற்போக்கு சக்திகளின் தலைக்கிடாயாக விடுதலைப்புலிகள் உருவான போது, அந்த இயக்கம் முதல் செய்த வேலை, இஸ்ரேல் உருவாக்கம் சம்பந்தமான மிகப்பெரிய வரலாற்று நூலை தமிழில் மொழிபெயர்த்து, அச்சிட்டு தமது இயக்கத்தினருக்கு பாட நூலாக நடைமுறைப்படுத்தியது தான். அதுமட்டுமின்றி தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் உருவான 80களில், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் தலைமையிலான ஐ.தே.க கொடிய இனவெறி அரசாங்கம் பதவியில் இருந்தது. அந்த நேரத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் ஆயுதப்பயிற்சி எடுத்தபோது, புலிகள் இஸ்ரேலிய ‘மொசாட்’ உளவு அமைப்பிடம் ஆயுதப்பயிற்சி எடுத்தனர்! அதுவும் மொசாட் ஒரு பக்கத்தில் இலங்கை ஆயுதப்படைகளுக்கும், அதன் அருகிலேயே புலிகளுக்கும் ஆயுதப்பயிற்சி வழங்கியது தான் சுவாரசியமானதும், உண்மையை புட்டு வைத்த நிகழ்வுமாகும். இஸ்ரேலின், இலங்கை அரசுக்கு எதிரான தற்போதைய நிலைப்பாட்டுக்கு வேறு சில காரணங்களும் உண்டு. இலங்கையில் ஆட்சியிலிருந்த எல்லா சிறீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கங்களுமே பாலஸ்தீன மக்களுக்கு எதிரான, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்து வந்துள்ளன. இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளையும் அவை வைக்கவில்லை. ஜே.ஆரின் ஐ.தே.க கட்சி ஆட்சிக் காலத்திலேயே இஸ்ரேல் கொழும்பில் தனது தூதரகத்தை திறக்க முடிந்தது. அதுமட்டுமில்லாமல், இன்றைய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை – பாலஸ்தீன நட்புறவு இயக்கத்தின் தலைவராக இருந்து வருகின்றார். இவையெல்லாம் இஸ்ரேலுக்கும் அதன் எஜமானர்களுக்கும் கசப்பான விடயங்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஏகாதிபத்திய நாடுகளும், அவர்களது ஊடக, மனித உரிமை, பொருளாதார பரிவாரங்களும், இலங்கைக்கு எதிராக என்னதான் சன்னதம் ஆடினாலும், இலங்கை மக்கள் உலகளாவிய தமது நட்பு சக்திகளின் உதவியுடன், அவற்றையெல்லாம் முறியடிப்பார்கள் என்பது நிச்சயம்.“போரிடுவது, தோல்வியடைவது, மீண்டும் போரிடுவது, மீண்டும் தோல்வியடைவது, இதுதான் பிற்போக்குவாதிகள் தமது அழிவுவரை பின்பற்றும் நடைமுறையாகும்” என சீன மக்களின் மாபெரும் தலைவர் மாஓசேதுங் ஒருமுறை கூறியது, இலங்கை சம்பந்தமாக ஏகாதிபத்தியவாதிகள் இன்று மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கும் மிகப் பொருத்தமானது என்பதை, இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது சாலவும் பொருத்தமானதாகும். பின்னிணைப்பு : உலக சுகாதார ஸ்தாபனத்தின் 62வது பொதுச்சபை கூட்டத்தொடரின் போது, அதன் நடப்பு ஆண்டுத் தலைவராக, இலங்கையின் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இஸ்ரேல் தீர்மானமொன்றைக் கொண்டு வந்திருந்தது தெரிந்ததே. 192 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட உலக சுகாதார ஸ்தாபனத்தில், இஸ்ரேலின் தீர்மானத்தை ஒரு நாடு கூட ஆதரிக்காதலால், அது படுதோல்வி அடைந்தது. இலங்கை அமைச்சர் சில்வா அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். மனித உரிமை மீறலில் உலகின் முன்னணியில் இருக்கும் இஸ்ரேல், இப்பொழுதாவது உலகில் தனது செல்வாக்கின் ‘மகிமை’ புரிந்துகொண்டால் சரி!
thanks.thenee

0 commentaires :

Post a Comment