5/01/2009

உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் ஒருவனான நான் வாழ்த்துரைப்பதில் உவகை அடைகின்றேன். கிழக்கு முதல்வர்


முதலாளித்துவ மேலாதிக்கத்தின் பிடியிலிருந்து சிக்குண்டிருந்த தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுக்கப்பட்ட இந் நாள், ஓர் மகத்துவம் மிக்க உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகளாக கணிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தின் உரிமைச் சாசனத்தை உறுதிப்படுத்திய ஓர் தினமாகும். சில நூற்றாண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அரசியல் தலமைத்துவங்களில் மாற்றம் ஏற்பட்ட போதிலும் உலக ஒழுங்கில் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் இன்னும் ஒரு வர்க்கத்தினர் இன்னொரு வர்க்கத்தினரின் அரசியல் பொருளாதார உரிமைகளை தட்டிப்பறிக்கின்ற தரமறுக்கின்ற அவலம் தொடர்வது வேதனைக்குரிய விடயமாகும்.
உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் சமுதாயத்திலிருந்து ஜனநாயக அரசியல் பிரவேசம் செய்து அவ் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களை மேற்கொள்பவன் என்ற வகையில் இது குறித்த தார்மீகக் கடமைப்பாடு எனக்கு உண்டு என நான் அறிவேன். இத்தினத்தில் பொருளாதார ரீதியான வர்க்க வேறுபாடுகளுடன் எமது எண்ணங்களை குறுக்கிக்கொள்வதை விட அரசியல் சமூக கலாச்சார ரீதியான தடைகளை உடைத்தெறிந்த ஓன்றே குலம் ஒருவனே தேவன் எனும் கோட்பாட்டுக்கு அமைவாக இப்பூமியில் வாழ்கின்ற அனைத்து மக்களும் அரசியல் சமூக பொருளாதார ரீதியான சம உரிமைகளை உறுதிப்படுத்துவதே இத்தினத்தின் உண்மையான தாட்பரியமாக கருதுகின்றேன்.
எமது இலங்கை தீவைப் பொறுத்த வரையில் கடந்த 50 ஆண்டு காலங்களில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் உரிரமகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.ஒரு சாதாரண உழைக்குழு வர்க்கத்தில் இருந்து ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பினையே ஏற்றவர் என்ற வகையில் உழைக்கும் வர்க்கத்தின் இன்னல் இடர்கள், துன்ப துயரங்கள் அனைத்தையும் துடைப்பதில் எமது ஜனாதிபதி அவர்களும் அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதனை நான் உளமாற பாராட்டுகின்றேன்.

இப்படிக்கு
சி.சந்திரகாந்தன்,
கிழக்கு மாகாண முதல்வர்




0 commentaires :

Post a Comment