5/26/2009

குடுமிபிடிச் சண்டை ஆரம்பம்

கிழக்கான் ஆதம்-
சீமை அழியுதுண்ணு நான்சிந்தையிலும் எண்ணலியே!,சீமை அழியலியே-என்சிறப்பழிஞ்ச மாயமென்ன?மருத அழியுதுண்ணு நான்மனசிலேயும் எண்ணலியே!மருத அழியலியே-என்மதிப்பழிஞ்ச மாயமென்ன? (நாட்டார் பாடல்)
இந்த மாதம் பதினேழாம் திகதி புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் அவரது சகாக்களான அரசியல் பொறுப்பாளர் பா. நடேசன், சூசை, புலித்தேவன், இளந்திரயன் உற்பட சகல முதல்மட்ட மற்றும் இரண்டாம் மட்டத் தலைவர்களும் இலங்கையின் இராணுவத்தினரால் கொல்லப்பட்டு புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் காணாமல்போயிருக்க பிரபாகரனின் மகன் சால்ஸ் அன்டனியும் கொல்லப்பட்டிருந்தார்.இதில் பிரபாகரன் கொல்லப்பட்டதை இதுவரை காலமும் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் கே.பி எனப்படும் கே.பத்மநாதன் மறுத்திருந்தாலும் அவர் நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையூடாகவும் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியூடாகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்தார்.இந்த அறிவித்தலைத்தான் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். காரணம் அது வெளியானவுடன் புலிகளுக்காக சர்வதேசத்தில் செயற்பட்டவர்கள் பலரின் சுத்துமாத்துக்கள் வெளியில் வரும் என்பதற்காக. அதற்கமையவே தற்போது புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையை இந்தியாவிலிருந்து கொண்டு இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்தேசங்களில் கஸ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் விதவிதமாக ஆண்டனுபவிக்கும் வை.கோ என்கிற வை.கோபாலசாமியும் பழநெடுமாறனும் நம்பவேண்டாம்! என அறிவித்ததன் மூலம் புலிகள் இயக்கத்திற்காக செயற்பட்டவர்களுக்குள் குத்துவெட்டுக்கள் ஆரம்பமாகியுள்ளது-.வை.கோ மற்றும் பழநெடுமாறனின் அறிக்கைகளுக்கும் கே.பி மீதான சாடல்களுக்கும் பச்சைக் கொடி காட்டியவர்களாக புலம்பெயர் தேசங்களிலும் புலிகளின் பணக்கலக்சன்களுக்கு பொறுப்பாக இருந்தவர்களும் களத்தில் நிற்கப் போகின்றார்கள்.காரணம் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தியாவது உயிருடன் இருந்தால்தான் இவர்களின் டாம்பீகமான வாழ்கை உயிருடன் இருக்கும் இல்லாவிட்டால் பழைய தொழிலுக்கு இவர்கள் அணைவரும் திரும்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்படும்.திரு.வை.கோ மற்றும் ஐயா பழநெடுமாறன் இருவரின் மேற்பார்வையிலும் இந்தியாவில் பல புலிகளின் வியாபார நிறுவனங்கள் உண்டு. அவைகள் உழைக்கும் இலாபத்தில் ஒரு சல்லிக் காசும் நிச்சயம் எந்த இலங்கைத் தமிழனுக்கும் சென்றடையப் போவதில்லை. அல்லது அதில் கிடைக்கும் இலாபத்தில் ஒரு சிறு பகுதியையேனும் மண்டபம் முகாமில் கஸ்டப்படும் இலங்கை அகதிகளுக்கோ அல்லது இலங்கையில் குற்றுயிர்களாகவும் நடைப்பிணங்களாகவும் அங்கவீனர்களாவும் விதவைகளாகவும் மிஞ்சிய எச்சங்களுக்கு நிச்சயம் வழங்கப்போவதில்லை.புலம்பெயர்ந்த தமிழர்கள் பனியில் உறைந்து உழைத்த காசை அவர்களின் எந்த இரத்த உறவுகளோ அல்லது அவர்களின் சொந்த தமிழினமோ சாப்பிடாமல் அனாதைகளாக அகதிகளாவிருக்க சாப்பாட்டிற்காக கையேந்திய வண்ணமிருக்க எவனோ ஒருவன் பல கோடிகளையும் மில்லியன்களையும் திண்டு ஏப்பம் விடுகிறான்.அது மட்டுமல்லாது அவர்களின் இன்றைய தேவை புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக கூறுவதன் மூலம் இறந்த புலிகளின் தலைவருக்கு அதன் ஆதரவாளர்களால் வழங்கப்படுகின்ற இறுதி மரியாதை வழங்கப்படாவிடினும் பரவாயில்லை தங்களிடம் புலிகள் அமைப்பால் நிருவகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சொத்துக்களையும் அதன் கணக்குவழக்குகளையும் யாரும் கேட்டுவிடாமல் பாதுகாப்பதற்காகவேயாகும். எனவே இவைகளின் இந்த எண்ணத்தின்மீது மண்ணை அள்ளித்தூவும் வண்ணம் புலிகளின் சர்வதேசப் பேச்சாளரின் அறிக்கையும் பேட்டியும் அமைந்துள்ளதால் அதனை எதிர்த்து தங்களின் பிணம் தின்னும் புத்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களோ அல்லது அவர்களின் உரிமைகளோ பற்றியெந்தக் கவலையும் இல்லை அவர்களின் கவலையெல்லாம் அந்த பணப்பெட்டியின் மீதுதான்.எனவே தற்போது சூட்டோடு சூடாக பிரபாகரன் கொல்லப்பட்ட உண்மை புலிகளினால் வெளியிடப்படுவதை இவர்கள் விரும்பவில்லை. எனவே இவர்கள் இந்தச் செய்தியைச் சொன்ன கே.பியையே துரோகி என்று கூறுவதன் மூலம் இவர்கள் ஒரு உண்மையை உலகிற்குச் சொல்கிறார்கள் அது பிரபாகரன் உயிருடன் இல்லை என்ற செய்தியாகும். பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் புலிகளின் சர்வதேச அமைப்பில் இவ்வாறான அதிகாரப் போட்டிகளும் உள்வீட்டுக் குத்துவெட்டுக்களும் நிச்சயம் நிகழமாட்டாது.இந்த முற்பது வருடகால போராட்ட காலத்தில் சுளைசுளையாகத் தின்ட தீனிப்பண்டாரம்கள் உண்மையில் புலிகளின் அமைப்புமீது அக்கரை கொண்டவர்களாகயிருந்திருந்தால் ஏன் புலிகளின் தலைவரை வேண்டாம்! இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட முதல்நிலைத் தளபதிகள் சால்ஸ் அன்டனி அரசியல்துரைப் பொறுப்பாளர் நடேசன், புலித்தேவன் சூசை, பானு போன்றோர்களின் உடலங்களையாவது மரியாதையாக எங்களிடம் ஒப்படையுங்கள் இல்லையென்றால் தமிழ் மக்களிடம் ஒப்படையுங்கள் அல்லது மரியாதையாகவாவது தகணம் செய்யுங்கள் என்று கேட்டு ஒரு போராட்டத்தையோ வேண்டாம் ஒரு அறிக்கையையாவது ஏன் விட முடியவில்லை? காரணம் தங்களையும் தங்களின் சொத்துக்களையும் பாதுகாக்க அவர்கள் நினைக்கிறார்கள்.சரி அவர்கள்தான் விட வில்லை! அவர்களின் புண்ணியத்தில் பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரிக்கும் இருபத்தி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் விட்டார்களா? அல்லது புலிகளின் புலம்பெயர் தேசத்து பொறுப்பாளர்கள் விட்டார்களா? இல்லை அப்பாடா கதை முடிந்தது பணமெல்லாம் இனி நமக்குத்தான் வேறு ஒரு நாட்டுக்குச் சென்று சந்தோசமாக வாழ்வோம் என தற்போது பெட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இலங்கையில் புலிகளால் அனைத்தையும் இழந்துவிட்டு அகதிமுகாம்களில் அனாதைகளாகவும், அங்கவீனர்களாகவும், விதவைகளாகவும் வாழும் எம் மக்களின் நிலையன்ன? அவர்களுக்கு இந்தப் பணம்கள் எவ்வாறு உதவப்போகின்றன அவற்றை யார் வெற்றுக்கொடுக்கப்போகின்றார்கள்.கேட்டால் “நாங்களும் அதைதான் செய்ய முயற்சிக்கிறோம் சிங்கள அரசு அனுமதிக்கவில்லை” என்று நொண்டிச் சாட்டுச் சொல்லிவிட்டு எஸ்கேப்பாக போகிறார்கள். அதற்கான திட்டங்கள் ரெடியாகியுள்ளதாகவும் தற்போது பல பிரிவுகளாக இவர்கள் பிரிந்து நின்று செயற்படுவதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன. தற்போது புலம்பெயர் தேசங்களில் அனுஸ்டிக்கப்படுகின்ற துக்கதினங்கள் முடிவுற்றதும் இது தொடர்பான குத்துவெட்டுக்கள் பையப்பைய ஆரம்பமாகும்.தனித் தமிழீழம் என்ற மாயையை காட்டி இயக்கத்தின் பணத்தில் வயிருவளர்த்த டிவிக்காரர்களும் ரெடியோகாரர்களும் மற்றும் புதினம், சங்கதி, தமிழ்நெற், விம்பங்கள், ஸ்கைத் தமிழ் நியூஸ் உட்பட அனைத்தும் இனி மூடுவிழாக்காணப் போகின்றன.தற்போது இதுவரை புலிகளின் உண்மையான ஆதரவாளர்களாகவிருந்த சாதாரணமக்களின் கவனமும் மற்றும் புலிகளின் வசூல்மன்னர்கள் அரசியல் ராஜதந்திரிகளின் கவனமும் தேனி, நெருப்பு, விழிப்பு, அதிரடி, தாயகம்,இலங்கைநெற், மகாவலி, உண்மைகள், டெலோ நியூஸ் என போராட்ட காலத்தில் புலிகளின் துப்பாக்கிகளுக்கு பயப்படாமல் உண்மைகளை புட்டுப் புட்டுவைத்த இணையங்களின் மீது திரும்பியிருக்கின்றது. சாதாரணமக்கள் இவர்கள் சொல்வதுதான் சரியோ! எனச் சிந்திக்கும் நோக்கிலும் சர்வதேச புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் எங்கே எங்களை மோப்பம் பிடித்து மக்களிடம் தங்களின் சுத்து மாத்துக்களை காட்டிக் கொடுத்துவிடுவார்களோ எனப் படிக்கின்றனர்.இந்த நிலையினால் புலிகளின் ஊடகங்கள் இனி அநாதரவாக நிற்கப்போகின்றன. எனவே அங்கேயும் அவர்களின் வயிற்றில் அடிவிழவுள்ளதால் உழைத்துப் சாப்பிடுவது என்ற வேண்டாதவேலைக்கு தலைவரின் மறைவு இவர்களைக் கொண்டு சென்றுள்ளது.எனவே எப்படியாவது கட்டியிழுத்து தலைவரின் உயிரை சில காலங்களுக்குப் பாதுகாத்தால் நாங்களாவது இன்னும் சில நாட்களுக்கு உழைக்காமல் சாப்பிடலாம் என நினைக்கும் புலம்பெயர் புலியுறவுகள் தங்களுக்குள் தாங்கள் அடித்துக் கொண்டு தங்களின் கற்னைக் கதைகளை முன்னெடுத்து துரோகிப் பட்டங்களை தங்களுக்குள் வழங்கி எப்படியாவது புலம்பெயர்மக்களின் ஆதரவுகிடைத்தால் வயிற்றைக் காப்பாற்றலாம் என முயற்சிக்கப் போகிறார்கள்.இதனால் அவர்களுக்குள் நடந்த குத்துக்கரணங்கள் விரைவில் அவர்களின் வாயால் வெளிவரப் போகின்றன. தற்போதே அது அரம்பித்துவிட்டது தமிழ்நெட் அரசியல் போராட்ட எனக் கூற, சர் வதேசப் பேச்சாளர் அமைதியான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் எனக் கூற, வை.கோ மற்றும் பழநெடுமாறன் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்று கூற புலிகளின் ஆதரவாளர்கள் மென்டல்களாக வீதிகளில் அலைகிறார்கள்.இனி கருணா துரோகி, டக்ளஸ் துரோகி, அனந்தசங்கரி ஐயா துரோகி, தேனி துரோகி என்ற சொற்பதங்கள் மறைந்து கே.பி துரோகி, பழ.நெடுமாறன் துரோகி, வை.கோ துரோகி என அவர்களின் உண்மை முகங்கள் வெளிச்சத்துக்கு அவர்களாலேயே கொண்டுவரப்படவுள்ளது.கொத்துக்குண்டுகள் வெடிப்பது போல துரோகிப்பட்டமும் அவர்களுக்குள் பல்கிப்பெருகி வெடிக்கப் போகின்றன. தமிழர்களை எவரெவர் எப்படியெல்லாம் ஏமாற்றினார்கள் என்பதை அவர்களே அவர்களின் கைகளால் புனைப்பெயர்களில் தேனியிலும் சூத்திரத்திலும் இலங்கைநெட்டிலும் விழிப்பிலும் எழுதப்போகின்றார்கள் கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் கூத்தை.எனவே புலிகளின் அடுத்த போராட்டம் ஜனாநாயக வழியிலான போராட்டமாகவோ! அல்லது அரசியல் போராட்டமாகவோ! அல்லது அமைதி வழியிலான உரிமைப் போராட்டமாகவோ அமையப்போவதில்லை. அவர்களின் போராட்டம் நிச்சயம் இயக்கத்துக்குள் குத்துவெட்டும் துரோகிப் பட்டமுமாகவே அமையப்போகிறது. காரணம் ஜனநாயக வழியில் போராட பிரபாகனோ அல்லது அவர்களின் தலைவர்ளோ இவர்களுக்கு கற்றுக் கொடுக்க வில்லை. அது புலிகளின் அமைப்புக்குத் தெரிந்திருந்தால் நிச்சயம் அவர்கள் தங்களின் போராட்டத்தை ஜனநாயமானதாக நடத்தி வெற்றிபெற்றிருப்பர்.அரசியல் போராட்டம் என்பது இவர்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கப் போகின்றது அரசியல் போராட்டம் செய்வதானால் இலங்கையில் வடக்கிலோ கிழக்கிலோ அல்லது எங்கோ ஒரு மூலையில் இவர்கள் அரசியல் ரீதியாக மக்கள்முன் நின்று வெற்றிபெற வேண்டும்.இவர்கள் அரசியல் களத்தில் புலிகளின் பெயரைச் சொல்லிக் குதித்தால் ஏற்கனவே பிள்ளையைப் பிடித்து பலிகொடுத்தவர்கள் மீண்டும் களத்துக்கு வருகிறார்கள் என அம்மா அந்த கொல்லைப்புறத்தில் உள்ளதை எடுப்பாள். விதவை எனது கணவனை களப்பழி கொடுத்தவர்கள் புலம்பெயர் தேசத்தில் சொகுசாய் வாழ்ந்துவிட்டு இப்போது மீண்டும் என் பிள்ளையை பழியாக்க வருகிறார்கள் எனக்கொதிப்பாள். இப்படி இவர்கள் இலங்கையில் எந்த இடத்திலும் அரசியல் நடத்த முடியாமல் போகும்.அமைதியான போராட்டமெனக் கிளம்பினால் அப்படியானால் ஏன் எங்கள் பிள்ளைகளை சகோதரர்களை மாவீரராக்கினீர்கள் என்று மாவீரர் குடும்பங்கள் கொந்தளிக்கும். அங்கவீனர்களான தாய்களும் தங்கைகளும் தந்தைகளும் குழந்தைகளும் கல்லையெடுத்து வீசும்.எனவே இவர்கள் செய்யப்போகும் ஒரே வேலை புலம்பெயர் தேசங்களின் கொள்கையற்ற குழுக்களாக பிரிந்து தங்களுக்குள் அவரவர் செய்தவற்றை வெளிவிட்டு புலிகளின் உண்மைமுகம் இலங்கையில் வெளிப்பட்டதுபோல இந்த கலக்சன் காரர்களின் உண்மையான முகத்தை மக்களுக்கு தோலுரித்துக் காட்டப்போவதாகும்.எனவே இனி துரோகிப்பட்டம் வானில் பறக்கப்போகிறது எங்கள் தலைவரென எல்லோரும் பிரபாகரனின் படத்தை மாட்டி அதை பணமாக மாற்ற முயற்சிக்கப் போகிறார்கள் புலம்பெயர் தேசத்தில் தூக்கத்திலிருந்து கொண்டு புலிகள் செய்த அக்கிரமங்களை ஆதரித்த ஆதரவாளர்களும் தூக்கத்திலிருந்து விழித்து நிஜவுலகைக் கண்டு வியக்கப் போகிறார்கள் இவர்கள் அநாதரவாக நிற்கும் தமிழ் சமூகத்தில் இணைந்து கொண்டு தங்களின் பங்களிப்பை தமிழ் மக்களின் விடிவுக்காச் செய்வார்களா என்பதுதான் இன்றைய எங்களின் கேள்வி. பங்களிப்பு என்பது மீண்டும் ஒரு அந்தயிந்த போராட்டம் என்று சொல்லி இன்னும் முற்பது வருடத்தின் பின் இன்னும் எழுபதுனாயிரம் மக்கள் இறந்தபின் ஞானம் பிறப்பதாகயில்லாமல், நிதானமான ஜனநாயக நீரோட்டத்துடன் அமைந்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் இவர்கள் ஒதுங்கிக் கொள்வார்களானால் அவற்றைச் சரியாகச் செய்ய சில சமூகப் பைத்தியங்கள் காத்திருக்கின்றன.இனிப் “விடுதலைப் புலிகள்” “விடுதலைப் போர்” என்ற சொற்கள் நிச்சயமாக பத்திரிகை வானொலி இணையத்தளங்கள் தொலைக்காட்சி புத்தகங்களைத் தவிர வேறு எங்கும் உயிர் வாழப் போவதில்லை என்பது திண்ணம். ஒருவேளை காசியானந்தனின் கவிதைகளில் உயிர் வாழலாம். “ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது”ஆக்கம்கிழக்கான் ஆதம்.


0 commentaires :

Post a Comment