நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டது. பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து வட மாகாணமும் முற்றாக மீட்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் இறுதிக் கட்டத் தாக்குதலில் பிரபாகரன், பொட்டு அம்மான் உட்பட புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டு, எஞ்சிய பிரதேசமும் முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து இந்நாட்டை சீரழித்து வந்த பயங்கரவாதம் முற்றுமுழுதாகக் களையப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு மாவிலாறில் ஆரம்பித்த மனிதாபிமான நடவடிக்கை நேற்றுடன் (18.05.2009) முற்றுமுழுதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வட மாகாணத்தின் அனைத்து பிரதேசங்களும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாகவும் முப்படைகளின் தளபதிகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று அறிவித்துள்ளனர்.
முப்படைகளின் பிரதம தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் ஒப்படைக்கப்பட்டிருந்த பாரியதொரு பொறுப்பை தாங்கள் செவ்வனே நிறைவேற்றியிருப்பதாக படைகளின் தளபதிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
பயங்கரவாதத்தை முழுமையாக அழித்தொழிக்கும் நடவடிக்கை நேற்றுக் காலையுடன் பூர்த்தியடைந்துள்ளதாகவும் தளபதிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டை கடந்த கால் நூற்றாண்டு காலப் பகுதிக்கு மேலாக சீரழித்து வந்த பயங்கரவாதத்தை முற்றுமுழுதாக முடிவுக்குக் கொண்டு வந்த பெருமையைப் பெற்ற தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளங்குகிறார். அது மாத்திரமன்றி பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களை முழுமையாக மீட்டெடுத்து அப்பிரதேசங்களில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்டியதன் மூலம், ஒரே கொடியின் கீழ் ஐக்கிய இலங்கையைக் கொண்டு வந்தவரென்ற வரலாற்றுப் பெருமையையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெறுகிறார்.
புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் யுத்தத்தில் முனைப்புடன் நின்று செயலாற்றிய படையினருக்கும் இவ்வரலாற்று நிகழ்வில் பெரும் பங்குண்டு. படையினரின் தியாகங்கள், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் யாவும் இவ்விடயத்தில் நினைவு கூரப்பட வேண்டியவை ஆகின்றன.
புலிகளின் ஆயுதப் போராட்ட வரலாற்றை எடுத்து நோக்குகின்ற போது இலங்கை மக்கள் கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக நிம்மதிக் காற்றைச் சுவாசிக்கவில்லை என்பதே உண்மை. வடக்கு, கிழக்கு மக்கள் ஜனநாயகத்தை அனுபவிக்க புலிகள் இடம்கொடுத்ததில்லை. அம்மக்கள் அடக்குமுறையின் கீழேயே வைக்கப்பட்டனர். மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டிருந்தன.
புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகள் தென்னிலங்கைக்கும் விஸ்வரூபமெடுத்ததால் வடக்கு - கிழக்கு மட்டுமன்றி நாடெங்கும் அநியாயமாகப் பலியாகிப்போன மனித உயிர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
பயங்கரவாதச் செயற்பாடுகளால் எமது நாட்டில் ஏற்பட்ட உயிர், உடைமை இழப்புகளை இங்கு பட்டியலிட்டுக் கூற முடியாது.
பெரும் அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், மதத் தலைவர்கள், சமூக நலத் தொண்டர்கள் என்றெல்லாம் இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். அப்பாவி மக்கள் கூட இப்பட்டியலில் பல்லாயிரக்கணக்கில் உள்ளடங்குகின்றனர். தங்களது பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரின் சோகங்கள் உயிருள்ள வரை அடங்கி விடப்போவதில்லை. பெற்றோரை பயங்கரவாதத் தாக்குதலில் பறிகொடுத்த பிள்ளைகளின் துயரங்களுக்கும் முடிவில்லை.
ஆயுதம் தூக்கி அப்பாவி உயிர்களையும் உடைமைகளையும் அழித்தொழித்து பிரிவினைக் கோஷமெழுப்பிப் போராடுவதென்பது எமது சின்னஞ்சிறு தீவில் நியாயமற்றதும் நடைமுறைச் சாத்தியமற்றதுமான விடயமாகும். புலிகள் கையாண்ட தவறான அணுகுமுறை காரணமாகவே அவ்வியக்கம் சர்வதேசத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்டது. அயல் நாடான இந்தியா உட்பட ஏராளமான நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தன.
சமாதானப் பேச்சுவார்த்தையென்ற தோரணையில் ஆரம்ப காலம் தொடக்கம் பதவியிலிருந்து வந்த அரசாங்கங்களையெல்லாம் புலிகள் ஏமாற்றியே வந்துள்ளனர்.
இத்தகைய நிலையிலேயே மாவிலாறு பகுதியிலும் வீணான யுத்தமொன்றை அரசாங்கத்தின் மீது அவர்கள் திணித்தனர். இதனையடுத்தே அரசாங்கம் தீர்க்கதரிசனமான நடவடிக்கையில் இறங்கியது.
நாட்டில் கொடிய யுத்தம் இன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழும் சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து ஐக்கிய இலங்கையை உருவாக்குவதென நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார்.thinakaran edito
0 commentaires :
Post a Comment