கிழக்கு மாகாணசபையின் கடந்த மாதக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட உத்தேச உள்ளூராட்சித் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து அச்சட்டமூலத்தின் மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் கிழக்கு மாகாணசபை நேற்று செவ்வாய்க்கிழமை காலை கூடியபோது இடம்பெறவில்லை.
உத்தேச சட்டமூலத்தினை திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் மீண்டும் சமர்ப்பிக்கவிருப்பதாக அரசாங்கம் அறிவித்ததையடுத்து கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை வாபஸ் பெறுவதாக முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அறிவித்தார்.
""பிரச்சினைக்குரிய இச்சட்டமூலத்தை திருப்பிப் பெறுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது மகிழ்ச்சி தருகிறது. இச்சட்டமூலத்தினால் கிழக்கு மாகாண சபையில் பிரச்சினையை ஏற்படுத்தி வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.
திருத்தங்களுடன் இச்சட்டமூலத்தைக் கொண்டு வருவதாக அரசு அறிவித்துள்ளது.
சிறுபான்மையின மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்நடவடிக்கையை எடுத்த ஜனாதிபதி மீது எமது நம்பிக்கை மேலோங்கியுள்ளது'என்று முதலமைச்சர் சந்திரகாந்தன் அப்போது கூறினார்.
ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் எம்.ஏ. மஜீத் பேசும்போது;
""சட்டமூலத்தைத் திரும்பப் பெறுவது என்ற முடிவு பிந்தி எடுக்கப்பட்டாலும் நல்ல தீர்மானமாக அமைகின்றது. கடந்த மாகாணசபைக் கூட்டத்தில் ஆளும், எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு எதிராக ஏகோபித்து குரல் எழுப்பியிருந்தனர். மீண்டும் அச்சட்டமூலம் திருத்தங்களுடன் சபைக்கு அனுப்பப்படும்போது சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதாக அமையும் என்று நம்புகின்றோம். நாட்டிற்குரிய பெரும்பான்மையாக உள்ளவர்கள் இச்சபையில் சிறுபான்மையினராகவே இருக்கின்றார்கள். அதுபோன்று நாட்டில் சிறுபான்மையாக கருதப்படுவோர் இச்சபையில் பெரும்பான்மையாக இருக்கின்றனர். ஆகவே எல்லாரினதும் நலன்கள் பேணப்படும் வகையில் கட்சியாளர்கள் செயல்பட வேண்டும்' என்று கூறினார்.
அதன் பின்னர் சபையின் தவிசாளர் எம்.எம்.பாயிஸ் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் வாபஸ் வாங்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்.
அதன் பின்னர் மாகாண போக்குவரத்து அமைச்சர் விமலவீர திஸநாயக்க, மாகாண போக்குவரத்து அதிகாரசபை ஒன்றை உருவாக்கும் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்தார். இச்சட்டமூலத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு பின்னர் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment