புலிகளின் பிடியில் சிக்கியிருந்த சகல பொது மக்களையும் பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்து விட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இதற்கமைய பொது மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மீட்பு நடவடிக்கை முடிவடைந்ததை அடுத்து பாதுகாப்பு வலயத்தின் இறுதி பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ள படைவீரர்கள் அங்கு முடக்கப்பட்டுள்ள புலிகளை முற்றாக தேடி அழிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களை முற்றாக மீட்டெடுக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்த இராணுவத்தினர் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் 72 மணி நேரத்திற்குள் 62 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்களை மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொது மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கென இராணுவத்தின் 53, 58, 59வது ஆகிய மூன்று படைப் பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. தற்பொழுது மொத்தமாக 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.
இறுதிக் கட்ட மீட்பு நடவடிக்கையின் போது நேற்று முன்தினம் மாத்திரம் 36,985 பொது மக்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர். இவர்களில் 59வது படைப்பிரிவினர் 30 ஆயிரம் பேரையும், 53வது படைப் பிரிவினர் 4328 பேரையும், 58வது படைப் பிரிவினர்2657 பொது மக்களையும் மீட்டெடுத்திருந்தனர்.
இதேவேளை, நேற்றைய இறுதிக்கட்ட மீட்பு நடவடிக்கை பூர்த்திசெய்வதற்கு முன்னர் 12,953 பொது மக்களை மீட்டெடுத்துள்ளனர். இவர்களில் 59வது படைப்பிரிவினர் 11 ஆயிரம் மக்களையும், 53வது படைப்பிரிவினர் 1892 பேரையும், 58வது படைப் பிரிவினர் 61 பொது மக்களையும் மீட்டெடுத்துள்ளதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.
புலிகளை தேடியழிக்கும் அதேசமயம் மீட்டெடுக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உடனடி மற்றும் அத்தியாவசிய வசதிகளை இராணுவத்தினர் செய்து கொடுத்துள்ளனர்.
வட்டுவாக்கல் ஊடாக அழைத்துவரப்பட்ட இந்த மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுத்துள்ளதுடன் சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளையும் படையினர் செய்து கொடுத்துள்ளனரென்றார்.
இதேவேளை, அவசர சிகிச்சை தேவைப்படும் சகல பொது மக்களும் உடனுக்குடன் விமானம் மூலம் அநுராதபுரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.
தேவேளை, மீட்புப் பணி பூர்த்தியானதை அடுத்து பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்து எஞ்சியுள்ள புலிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் முன்னேறிய வண்ணம் இருப்பதாகவும் அந்தப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பாரிய சத்தத்துடன் வெடிப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, படையினரால் முற்றுமுழுதாக சுற்றிவளைக்கப்பட்டிருந்த நிலையில் நந்திக் கடலை பயன்படுத்தி படகு மூலம் தப்பிச் செல்ல புலிகளின் முக்கியஸ்தர்கள் முன்னெடுத்த இறுதிக்கட்ட முயற்சியையும் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
பாதுகாப்பு வலயத்தில் புலிகள் முடக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து நேற்று அதிகாலை 1.30 மணியளவில் திடீரென நந்திக் கடலை நோக்கி ஆறு படகுகள் வேகமாக வந்துள்ளன.
அது புலிகளின் படகுகள் என்பதை உறுதி செய்த படையினர் அந்தப் படகின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் கடும் தாக்குதல்களை நடத் தியுள்ளனர்.
இந்த தாக்குதல்களில் படகுகள் வெடித்துச் சிதறியதுடன் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக படையினர் தெரிவிக்கின்றனர். இந்தப் பிரதேசத்தில் தேடுதல் நடத்திய இராணுவம் கொல்லப்பட்ட புலிகளின் 70 சடலங்களை மீட்டெடுத்துள்ளதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment