பொட்டு அம்மான், சார்ள்ஸ் அந்தனி, நடேசன், சூசை, புலித்தேவன், பானு, ரமேஷ், கபிலன் அம்மான் சடலங்கள் அடையாளங் காணப்பட்டன
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.
பிரபாகரனுடன் புலிகளின் புலனாய்வுத் துறை தலைவரான பொட்டு அம்மான், கடற் புலிகளின் தலைவர் சூசை உட்பட புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் சகலரும் கொல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தது.
இதேவேளை, கரையமுள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர்களை இலக்கு வைத்து முன்னதாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அந்தனி, புலிகளின் பொலிஸ் பிரிவின் முன்னாள் பொறுப்பாளரும், அரசியல் துறை தலைவருமான ப. நடேசன், புலிகளின் சமாதான செயலகப் பொறுப்பாளர் எஸ். புலித்தேவன், புலிகளின் விசேட படைப் பிரிவின் தலைவர் ரமேஷ், புலிகளின் பொலிஸ் பிரிவு தலைவர் இளங்கோ, கரும்புலிகளின் தலைவர் ரட்ணம் மாஸ்டர், புலிகளின் இராணுவப் பிரிவின் உயர் தலைவர் பாணு உட்பட முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
பொட்டு அம்மான், பானு, சார்ல்ஸ் அந்தனி, நடேசன், புளித்தேவன் ஐயம், லக்ஷ்மன், ரட்னம் மாஸ்டர், இளங்கோ உட்பட பலர் பாதுகாப்பு படையினரால் அடையாளங் காணப்பட்ட போதிலும் மாலை வரை பிரபாகரன் அடையாளங் காணப்படவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இதேவேளை, புலிகளின் தலைவரையும் அவரது சகாக்களையும் தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் நடத்திய தாக்குதல்களில் 300க்கும் அதிகமான புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இவர்களது சடலங்களையும் அடையாளங்காணும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இராணுவத்தின் விசேட படைப் பிரிவின் தளபதி அதுல கொடிபிலி ஆகியோர் தலைமையிலான படைப் பிரிவினர் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
படையினரின் தாக்குதலில் புலிகளின் பெண்கள் பிரிவின் முக்கியஸ்தராக இருந்த நடேசனின் மனைவி வினிதா உட்பட பெண்கள் படைப்பிரிவின் பலரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்தது. புலிகளின் பிடியில் சிக்கியிருந்த சகல மக்களையும் மீட்டெடுக்கும் பணிகள் நிறைவடைந்து குறுகிய பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த பிரபாகரனையும் அவரது சகாக்களையும் தேடி அழிக்கும் பணிகளை ஆரம்பித்தனர்.
புலிகளின் பலத்தையும் வளத்தையும் முடக்கி அவர்களின் பிடியிலிருந்த நிலத்தை முழுமையாக கைப்பற்றிய படையினர் நேற்று மிகவும் குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கியிருந்தனர்.
சகல பிரதேசத்தாலும் சுற்றிவளைத்த படையினரின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல புலிகள் பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் வாகனங்களை பயன்படுத்தி தப்பிச் செல்ல எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தன.
இந்நிலையில், படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களில் புலிகளின் சகல தலைவர்களும் கொல்லப்பட்டனர். இதனையடுத்து புலிகளின் பிடியிலிருந்து சகல நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டது.
இதற்கமைய கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டில் இடம்பெற்றுவந்த பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன் 2006ம் ஆண்டு மாவிலாறு பகுதியில் ஆரம்பித்த மனிதாபிமான நடவடிக்கை முடிவுக்கு வந்தது. இதனையடுத்து புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் யாவும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாகவும் புலிகளிடமிருந்து சகல நிலப்பரப்பும் மீட்டெடுக்கப்பட்டு நாடு முழுவதும் பயங்கரவாத பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரம் பெற்றுள்ளதாக முப்படைகளின் தலைவர்களும், பொலிஸ் மா அதிபரும் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
0 commentaires :
Post a Comment