5/27/2009

அரச சார்பற்ற நிறுவனங்களின் நிபுணர்கள் புலிகளுக்கு உதவினர்


அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மனிதாபிமான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடையும் தறுவாயில் சிவிலியன்களை காரணம் காட்டி குறிப்பிட்ட சில மேற்கு நாடுகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்குமாறு எம்மை தொடர்ந்தும் வற்புறுத்தி வந்தமை பிரபாகரனையும் அவரது முக்கிய சகாக்களையும் காப்பாற்றுவதற்காகவே என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

பிரபாவை காப்பாற்றவே
மேற்குலகம்
யுத்த நிறுத்தம் கோரின
இலங்கை, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் பயங்கரவாத பிரச்சினைகள் என்றும் முடிவுக்கு வரக்கூடாதென்ற நீண்டகால நோக்கிலேயே சில நாடுகளில் இவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவையில் கடந்த திங்கட்கிழமை (25) துலாவ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெனரல் பொன்சேகா வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சியில் செயற்பட்டு வந்த குறிப்பிட்ட சில அரசசார்பற்ற நிறுவனங்கள் சிவிலியன்களுக்காக ஒரு குளியலறையைக் கூட கட்டிக்கொடுக்கவில்லை. மாறாக எல்.ரி.ரி.ஈ யினருக்கு பணமும் இராணுவ ஆலோசனைகளையுமே வழங்கி வந்துள்ளனர்.
புலிகளால் பயன்படுத்தப்பட்ட சில படகுகள், யுத்தக் கப்பல்கள் அவற்றுக்கான இயந்திரங்கள் என்பன தொண்டர் நிறுவனங்களின் நிபுணத்துவம் பெற்றவர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இயந்திரங்களின் இறக்குமதிக்கும் இவர்கள் உதவியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
ஊடக சுதந்திரம் கோரி லிப்டன் சுற்றவட்டத்தில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்த குறித்த சில பாதுகாப்புத் தொடர்பான ஆராய்ச்சியாளர்களும் திறமை வாய்ந்த ஊடகவியலாளர்களும் புலிகளுக்குச் சார்பானவர்களென்ற உண்மை எல்.ரி.ரி.ஈ. இயக்கம் முழுவதுமாக அழிக்கப்பட்டதன் பின்னரே தெரியவந்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக புலிகள் இவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை வழங்கியுள்ளனர் எனவும் ஜெனரல் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
இத்தகையவர்களே படை வீரர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான கட்டுரைகளை எழுதி வந்தனர். எல்.ரி.ரி.ஈ இயக்கம் அழிக்கப்பட்டதும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் படைவீரர்களுக்கு கிடைத்ததும் தான் தாமதம் மேற்படி செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் நாட்டை விட்டே ஓடிவிட்டனர். நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமாயின் இத்தகைய குற்றவாளிகள் தேசத்துரோகிகளாக கணிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டுனெவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்கள் கடத்தியவரும் தற்போது அந்த இயக்கத்தின் தலைவராக முயலுபவருமான கே. பியை இன்டர்போல் தேடிவருகின்றது. இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலையுடன் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
இலங்கை இராணுவம் 10 ஆயிரம் பேரைக் கொண்டிருக்கையிலேயே பிரபாகரன் இந்தியாவின் ஒத்துழைப்புடன் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தை கட்டியெழுப்பினார்.
இப்போது எமது இராணுவத்தில் 2 இலட்சம் பேர் உள்ளனர். கூடிய விரைவில் இந்த எண்ணிக்கை 3 இலட்சம் ஆகப்போகிறது. இந்நிலையில் இலங்கையில் மீண்டும் ஒரு எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை கே. பி. யினால் கட்டியெழுப்புவது எவ்வகையிலும் சாத்தியமாகாது என்றும் இராணுவத் தளபதி கூறினார்.
எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு விட்டனர். எமது உள்நாட்டில் வகுக்கப்பட்ட வியூகங்களைக் கொண்டே படையினர் இந்த வெற்றியை நிலைநாட்டினார். இந்நிலையில் கே. பி. இலங்கையிலோ அல்லது வெளிநாடுகளிலோ எல். ரீ.ரீ.ஈ. இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப திட்டம் தீட்டினால் அதனை தோற்கடிப்பதும் எமக்கு பெரிய வேலையாகாதென்பதை நினைவுபடுத்திக் கூறவிரும்புவதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்தார்.
மோதல்களின்போது 195 இராணுவ அதிகாரிகளும் 5 ஆயிரத்து 224 படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரம் படை வீரர்கள் ஊனமுற்றுள்ளனர் எனத் தெரிவித்த இராணுவத் தளபதி, படைவீரர்களால் 22 ஆயிரம் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 9 ஆயிரம் புலிகள் சரணடைந்திருப்பதாகவும் முதற்கட்டத்தின்போது ஒரு இலட்சத்து 15 ஆயிரம் சிவிலியன்களும் இரண்டாம் கட்டத்தில் 80 ஆயிரம் சிவிலியன்களும் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.



0 commentaires :

Post a Comment