ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கொண்டு வந்த தீர்மானம் 29 வாக்குகளால் அமோக வெற்றியை பெற்றது.
இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மூன்று அமர்வுகள் நேற்று நடைபெற்றன. மூன்றாவது அமர்வின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆறு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்தியா, பாகிஸ்தான், கியூபா உட்பட 29 இலங்கையின் நட்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்து இலங்கைக்கு அமோக வெற்றியை ஈட்டித்தந்தன. “இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதில் சர்வதேச சமூகம் உறுதுணையாக இருக்கிறதென்பதனை இந்த வெற்றி உறுதிப்படுத்தியிருக்கிறது” என அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவாவிலிருந்து கூறினார்.
“ஐக்கிய நாடுகள் பேரவையில் இலங்கைக்கு கிடைத்துள்ள வெற்றி மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கும் கிடைத்த சர்வதேச அங்கீகாரம்” எனவும் அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்தார். “மனித உரிமைகள் பாதுகாப்பும் இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவுதலும்” என்ற தொனிப்பொருளில் இலங்கை அரசு மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பித்திருந்த தீர்மானம் மூன்றாவது அமர்வின் போது கலந்துரையாடப்பட்டது.
அதன் பின்னர் அதனை சற்று விரிவுபடுத்தி சமர்ப்பித்ததாகவும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறினார். இலங்கை சமர்ப்பித்திருந்த தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஜேர்மனி 9 திருத்தங்களை கொண்டு வந்தது. எனினும் இலங்கையின் நட்பு நாடான கியூபா திருத்தங்களை ஏற்றுக் கொள்வதை விரும்பாததுடன் எதிர்த்தது.
இதனையடுத்து 17 பந்திகளைக் கொண்ட இலங்கையின் தீர்மானம் 29 பந்திகள் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 29 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. ஐரோப்பிய யூனியன், மெக்சிகோ, ஜப்பான், சிலி உட்பட 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.
நேற்று நடைபெற்ற பேரவையின் அமர்வுகளின் போது சில நாடுகள் இலங்கையுடன் குரோத மனப்பான்மையுடன் நடந்து கொண்டதாகவும் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சில தீர்மானங்களை கொண்டுவர முற்பட்டதாகவும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறினார்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கும் மத்தியில் மத்திய கிழக்கிலுள்ள எமது நட்பு நாடுகளும், ஏனைய நட்பு நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறினார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் விசேட அமர்வு நேற்று ஜெனீவாவில் நடைபெற்றது.
47 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் 17 உறுப்பு நாடுகள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த விசேட அமர்வு கூட்டப்பட்டிருந்தது.
தீர்மானத்தை முன்வைத்து அமைச்சர் சமரசிங்க கூறியதாவது:-
இலங்கையில் 30 வருடங்களாக நீடித்திருந்த பயங்கரவாத செயற்பாடுகள் முடிவுக்கு வந்திருக்கும் சந்தர்ப்பத்திலேயே ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கையில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னர் மோதல் இடம்பெற்ற வலயங்களில் அனுமதி வழங்கப்படாதது குறித்து இப்போது ஆராய்வது தேவையற்றதொன்று. எம்மிடம் சரணடைந்துள்ள சுமார் 9 ஆயிரம் எல். ரீ. ரீ. ஈ. உறுப்பினர்களுக்கும் இனங்காணப்பட்டுள்ள எல். ரீ. ரீ. ஈ. உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.
அரசாங்கம் அனைத்து சிவிலியன்களையும் கவனத்தில் கொள்கிறது.
மோதல் இடம்பெற்ற பகுதிகளில் தற்போது பிராந்திய மட்டத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாம் அனைவருக்கும் அறிவித்துள்ளோம். இருந்தும் சிவிலியன்கள் உடனடியாக தமது வீடுகளுக்கு திரும்ப வேண்டுமென்று விரும்பினால் அது அவர்களின் விருப்பமாகும்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும் தீர்மானம் அமுல்படுத்தக் கூடியது. இந்த தீர்மானத்துக்கு அனைவரது ஆதரவும் கிடைக்குமென நம்புகிறோம்.
இலங்கை 30 வருடங்களாக மோதல்களுக்கு முகம்கொடுத்து வரும் ஒரு அரசு. இந்த நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் சிவிலியன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக அனைத்து சர்வதேச சமூகங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் தனது உரையில் கேட்டுக் கொண்டார்.
எல். ரீ. ரீ. ஈ. வசமிருந்த 2 இலட்சத்து 50 ஆயிரம் சிவிலியன்களை எமது படையினர் விடுவித்ததுடன் அரசாங்கமே அவர்களை பாதுகாத்து வருகின்றது. இலங்கை 50 சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாடுகளுக்கும் அனுமதிகளை தொடர்ந்து வழங்க இலங்கை விரும்புகிறது எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களை மீளக்குடியமர்த்துவதே அரசாங்கத்தின் தற்போதைய ஒரே குறிக்கோளாகும். அதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமையாகும். மீளக்குடியமர்வது பொதுமக்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.
0 commentaires :
Post a Comment