25.05.2009மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை ஜனாதிபதி,அலரி மாளிகை,கொழும்பு.
அன்புடையீர்,
.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பிரதேச சுகாதார சேவைகளின் பணிப்பாளர்களாக கடமையாற்றிய வைத்திய கலாநிதிகள் ரி. சத்தியமூர்த்தி, ரி. வரதராஜன், முல்லைத்தீவு வைத்திய அத்தியட்சகர் கலாநிதி வி. சண்முகராஜா ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சம்பந்தமாக தலையிட அனுமதிக்கவும். வன்னிப் பகுதி வைத்தியர்கள் தப்பி வர இம் மூவர் மட்டும் அங்கே தங்கியிருந்து இராணுவம் முன்னேற முன்னேற வைத்தியசாலையையும் நகர்த்திக் கொண்டு இரவு பகலாக நோயாளிகளுக்கும், காயமடைந்தோருக்கும் வைத்திய சேவையினை மேற்கொண்டிருந்தனர். தனி ஒருவரால் சமாளிக்க முடியாத பெரும் எண்ணிக்கையினரை இவர்கள் மூவரும் கவனி;த்து வந்தனர். பல நாட்கள் தேநீர் மட்டும் அருந்தி உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சிசு ஒன்றிற்கு வைத்தியம் செய்த ஒரு வைத்தியர், தனக்கு போதித்த ஒரு சிங்கள பேராசிரியரிடம் ஆலோசனை பெற்று அக் குழந்தையை காப்பாற்றியுள்ளார். இரவு பகலாக மோசமான காலநிலையையும், தம்மைச் சுற்றி பாய்ந்து கொண்டிருந்த துப்பாக்கிக் குண்டுகளையும் பொருட்படுத்தாது பணி புரிந்தார்கள்.
தொடர்ந்து செல் தாக்குதல் காரணமாக அரச நிர்வாகம் முடங்கிய நிலையி;ல் உணவுக் கப்பலுக்கு துணைபோவதையும் காயமுற்றோரை மீட்டுச் செல்வதையும் இதே காரணத்துக்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மறுத்திருந்த வேளை, வேறு வழியின்றி இவர்களும் தமது சேவையிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். இவர்களின் சேவையாலேயே இடம் பெயர்ந்தோரில் பெரும் பகுதியினர் உயிர் வாழ்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்கிய போதும் இனி மக்களுக்கு சேவை செய்யும் நிலை இல்லை என்பதை உணர்ந்த பின்பே தமது சேவையை நிறுத்திக் கொண்டனர். அவ்வேளை அவர்களுக்கு தோன்றிய ஒரேயொரு வழி, ஏனைய இடம்பெயர்ந்தவர்கள் போல தாமும் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறி நலன்புரி முகாம்களுக்கு வந்து சேர்வதே. அவர்கள் குற்றவாளிகளாக தப்பியோடவில்லை. ஆனால் பாதுகாப்புக்கருதி முகாமுக்கு வந்தவேளை முகாமில் வைத்து இருவரும், காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்றாவது வைத்தியரும் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் விடயத்தில் பின்வரும் உண்மைகள் கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டியவையாகும்.
1. இவர்கள் அரச ஊழியர்களாக வன்னிப் பகுதியில் நீண்டகாலம் சேவை செய்தவர்கள்.
2. அரச ஊழியரோ தனியார்துறை ஊழியரோ விடுதலைப் புலிகளின் கட்டளையை மீறிச் செயற்பட முடியாத நிலையில் அவர்களின் கட்டளைக்கமையவே, ஊடகங்களுக்கு அறிக்கை விடும் விடயங்கள் உட்பட, சகல விடயங்களிலும் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.
3. இவ் வைத்தியர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமைய செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டால் அப் பகுதியிலே சேவை செய்த அரச ஊழியர் ஒருவர் தன்னும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
4. கடமை உணர்வுடன் அவர்கள் கடைசி நிமிடம் வரை கடமையாற்றியதால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
5. விசேடமாக மிக இக்கட்டான வேளையில் காயமுற்றோருக்கு பணியாற்றி அரசினுடைய பெயரையும் காப்பாற்றியமையால் அவர்கள் பராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட வேண்டியவர்களாவர். சுகாதாரத் திணைக்களம் இவர்களுடைய சேவையை பாராட்ட கடமைப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களே! இவர்கள் மீது எதுவித குற்றமும் இல்லையென இவர்களை விடுவிப்பீர்கள் என நம்புகிறேன். இன்றுவரை நான் அறிந்த வரையில் வன்னிப் பகுதியில் சேவை செய்த ஒரு ஊழியர் தன்னும் அரச கட்டுப்பாட்டுப்பாட்டு கோவையை மீறி செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.
எத்தகைய தண்டனை கொடுக்கப்பட்டாலும் அது சரித்திரத்தில் பெரும் தவறாகவே கணிக்கப்படும்.
நன்றி,
வீ. ஆனந்தசங்கரிதலைவர்- த.வி.கூ
0 commentaires :
Post a Comment