5/12/2009

முதலமைச்சர்கள் மாநாட்டை முன்னிட்டு விழாக்கோலம் பூணும் மட்டக்களப்பு மாநகரம்.


25வது முதலமைச்சர்கள் மாநாடு இம் மாதம் 15ம், 16ம் திகதிகளில் மட்டக்களப்பு மாநகரில் வெகுவிமர்சியாக கொண்டாடப்படவுள்ளதையிட்டு மட்டக்களப்பு மாநகரமானது விழாக்கோலம் பூண்டிருக்கின்றது. மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ள இம் மாநாட்டினை ஒட்டி மட்டக்களப்பு நகர் அதி உயர் பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. 3000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
கடந்த 24 வது முதலமைச்சர் மாநாடு பதுளையில் இடம் பெற்ற போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சர்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டு 25 வது மாநாட்டை மட்டக்களப்பிலே நடாத்துவது எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் முதல்வர் சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற ஏற்பாடாகிக் கொண்டிருக்கும் இம் மாநாட்டில் மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன், பிரதி மேயர் ஜோர்ச் பிள்ளை, தவிசாளர்கள், கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள், ஊழியர்கள,; முதலமைச்சர் செயலகம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் போன்றன தமது பங்களிப்பை வழங்கி வருகின்றன.
இம் மகா நாட்டினையொட்டி கிழக்கு மாகாணத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது. அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய பிரதேசங்களை, கலந்து கொள்ளும் முதலமைச்சர்கள் பார்வையிட இருக்கின்றார்கள். கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன் தலைமையில் இடம் பெற விருக்கும் இம் மாநாட்டிற்கு ஏனைய ஏழு முதலமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர்கள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்கள். இதனையொட்டி 15ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவிருக்கின்றது.

0 commentaires :

Post a Comment